

மனிதர்களுக்குப் பகலில் மட்டுமே பார்வைத் திறன் நன்றாக இருக்கும். சூரியன் மறைந்து இருள் சூழ்ந்துவிட்டால், நாம் செயற்கை விளக்குகளையோ அல்லது டார்ச் லைட்டையோ தேடி ஓடுகிறோம். இருட்டு என்றாலே மனித இனத்திற்கு ஒரு விதமான பயம் வருவது இயல்பு. இரவு நேரத்தில் நடமாடுவதற்குப் பூனைகள் அல்லது ஆந்தைகளுக்கு இருப்பது போன்ற சக்தி வாய்ந்த கண்கள் நமக்கு இல்லையே என்று நாம் எப்போதாவது ஏங்கியிருப்போம்.
ஆனால் இனிமேல் அந்தக் கவலை தேவையில்லை என்கிறார்கள் சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். நாம் தூங்கும்போது கண்களை மூடினாலும், எதிரே நடப்பதைத் துல்லியமாகப் பார்க்கும் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துப் புரட்சி செய்துள்ளனர். இது ஏதோ மந்திரம் என்று நினைக்க வேண்டாம், இது முழுக்க முழுக்க அறிவியலின் அதிசயம்.
நானோ துகள்கள்!
சாதாரணமாக நாம் பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்ய அல்லது அழகிற்காகக் காண்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்துவோம். அந்த லென்ஸ்களில் பயன்படும் பாலிமர் மூலக்கூறுகளுடன், மிக நுண்ணிய நானோ துகள்களை இணைத்து இந்தச் சாதனையை விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர். இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படைச் செயல்பாடு மிகவும் சுவாரஸ்யமானது.
நம் கண்களால் பார்க்க முடியாத அகச்சிவப்பு ஒளியை இந்த லென்ஸ்கள் ஈர்த்துக்கொள்கின்றன. பின்னர் அந்தப் புலப்படாத ஒளியை, மனிதக் கண்களுக்குப் புரியும் சாதாரணப் பச்சை நிற ஒளியாக இவை மாற்றிக் கொடுக்கின்றன. அதாவது ஒரு மொழிபெயர்ப்பாளரைப் போல இந்த லென்ஸ் செயல்படுகிறது. இதனால் கும்மிருட்டிலும் நம்மால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
பேட்டரி வேண்டாம்!
வழக்கமாக ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இரவு நேரத்தில் எதிரிகளைக் கண்காணிக்கப் பெரிய 'நைட் விஷன்' கண்ணாடிகளைத் தலையில் மாட்டியிருப்பார்கள். அவை மிகவும் கனமானவை என்பது மட்டுமல்லாமல், அவை இயங்குவதற்குப் பெரிய பேட்டரிகளும் மின்சாரமும் தேவைப்படும்.
ஆனால் சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த நானோ லென்ஸுகளுக்கு சார்ஜ் போட வேண்டிய அவசியமோ அல்லது பேட்டரியோ தேவையில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இதை அணிந்துகொண்டால் போதும், நம் கண்கள் தானாகவே இருளை ஊடுருவிப் பார்க்கும் சக்தியைப் பெற்றுவிடுகின்றன.
மூடிய இமைகளுக்குள் ஊடுருவும்!
இதில் மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், இமைகளை மூடினாலும் காட்சி தெரியும் என்பதுதான். அகச்சிவப்பு கதிர்களுக்கு ஊடுருவும் தன்மை அதிகம். நம் கைவிரலை டார்ச் லைட்டில் வைத்தால் ரத்தம் சிவப்பாகத் தெரிவதைப் போல, அகச்சிவப்பு ஒளி நமது மெல்லிய கண் இமைகளைத் தாண்டிச் செல்லும் வல்லமை கொண்டது. எனவே இந்த லென்ஸை அணிந்திருப்பவர் கண்ணை மூடி இருந்தாலும், எதிரே ஏதேனும் அசைவு இருந்தாலோ அல்லது ஒளி இருந்தாலோ அதை உணர முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் தியான் சூ என்பவரின் தலைமையில் இந்த ஆய்வு மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக எலிகளின் கண்களில் இந்த லென்ஸைப் பொருத்திச் சோதனை செய்தபோது, அவை இருட்டில் மிகத் தெளிவாகவும் துடிப்பாகவும் இயங்கின. அதன் பிறகு மனிதர்களிடமும் சோதனை செய்யப்பட்டு, கண்களை மூடிய நிலையிலும் ஒளியை உணரும் திறன் அதிகரித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.