
அனைவருக்கும் பெரும் தொல்லையாக இருப்பது பல் சொத்தை தான். அதை சரி செய்யாவிட்டால் பல் இழப்பு ஏற்படும். இது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு பரவலான உடல்நலப் பிரச்சினையாகும். பற்கள் சொத்தையானால் அதை சரி செய்ய முடியாது. சொத்தைப் பல் பாதிக்கப்பட்ட பகுதியை சுரண்டினால் அது பல்லின் பாதிக்கும் மேல் பரவி இருக்கும்.
பற்களை நன்றாக சுரண்டி எடுத்து அதற்குள் செயற்கை பொருளை வைத்து அடைத்து விடுவார்கள். இது சில ஆண்டுகள் வரை தாக்கு பிடிக்கும். சில நேரங்களில் பற்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்தால் அதன் வேர் வரை பல்லை குடைந்து அதற்குள் சில இரசாயனப் பூச்சுகளை கொண்டு நிரப்பி விட்டு, அதற்கு மேல் செயற்கை பல்லை ஒட்டி விடுவார்கள்.
இன்னும் மோசமான முறையில் பல் பாதிப்படைந்து இருந்தால் அதை முழுமையாக புடுங்கி விட்டு அந்த இடத்தில் செயற்கை பல்லை பொருத்துவார்கள். பல் இழப்பினால் மெல்லுதல் மற்றும் பேசுவதில் சிரமம் ஏற்படுவதைத் தாண்டி, மனிதர்களுக்கு அழகியல் மற்றும் உளவியல் பிரச்சினைகளும் ஏற்படுகிறது. குறிப்பிட்ட வயதிற்கு மேல் பற்கள் பாதிக்கப்பட்டு, பிடுங்கப்பட்டால் அந்த இடத்தில் புதிய பல் முளைப்பது இல்லை. பல உயிரினங்களுக்கு பற்கள் மீண்டும் வளர்கிறது என்றாலும், மனிதர்களுக்கு குறிப்பிட்ட வயதிற்கு மேல வளராது.
பிரிட்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவக் கல்லூரியின் விஞ்ஞானிகள் சேர்ந்து முதல் முறையாக மனித பற்களை ஒரு ஆய்வகத்தில் வெற்றிகரமாக வளர்த்துள்ளனர். உலகளவில் இந்த பல் வளர்ப்பு முறை, பல் மருத்துவத் துறையில் மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த சாதனை, பற்களை இழந்த நோயாளிகளுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும். இந்த ஆய்வில் கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் குழு, லண்டன் இம்பீரியல் கல்லூரியுடன் இணைந்து பல் வளர்ச்சிக்கு தேவையான ஒரு பொருளை உருவாக்கியுள்ளனர். பல்லை வளர்க்கும் ஆய்வில் செல்களை, உயிரி பொருட்கள் மற்றும் வளர்ச்சி காரணிகளைப் பயன்படுத்தி இயற்கையான பற்களின் அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் பற்களை வளரச் செய்யும் பல் மருத்துவத்தின் குறிக்கோள் ஒரு முழு பல்லையும் உயிரியல் பொறியியலில் மூலம் உருவாக்குவது ஆகும். ஆய்வகத்தில் வளர்க்கப்படும் பற்கள் இயற்கையாகவே மீண்டும் உருவாக்கப்பட்டு தாடையில் உண்மையான பற்களாக பொருத்தப்படும். இந்த புதிய பற்கள் வலிமையானதாகவும், நீண்ட காலம் நீடிக்கும் வகையிலும் இருக்கும். இதனால் பல் இழப்பு அபாயத்திலிருந்து விடுபட்டதாகவும் இருக்கும். பல் உள்ளே ரசாயனம் நிரப்புதல் அல்லது பூசுதலை விட நீடித்த மற்றும் உயிரியல் ரீதியாக இணக்கமான தீர்வை இந்த வளரும் பல் வழங்கும்.
பற்களை வளர்ப்பதற்குத் தேவையான சூழலை விஞ்ஞானிகள் உருவாக்கியிருந்தாலும், அடுத்த சவால் ஆய்வகத்திலிருந்து நோயாளியின் வாயில் பற்களை பொருத்தும் வழியைக் கண்டுபிடிப்பதாகும். இதற்கான முறையை இன்னும் ஆய்வாளர்கள் கண்டறியவில்லை என்று பல் மருத்துவம் மற்றும் கிரானியோஃபேஷியல் சயின்சஸ் பீடத்தின் இறுதியாண்டு முனைவர் பட்ட மாணவர் சூச்சென் ஜாங் கூறினார்.
மேலும் 'வாய்க்குள் பற்களை வைப்பதற்கு எங்களுக்கு வெவ்வேறு யோசனைகள் உள்ளன. இழந்த பல்லின் இடத்தில் இளம் பல் செல்களை இடமாற்றம் செய்து அவற்றை வாய்க்குள் வளர விடலாம்' என்றும் சூச்சென் ஜாங் கூறினார். மருத்துவ ஆய்வாளர்கள் எந்த செயல்முறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். இருப்பினும், இந்த முன்னேற்றம் பல் பராமரிப்பில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.