
OpenAI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மீரா மூர்த்தி என்பவர் இடைக்கால சிஇஓ-வாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
OpenAI நிறுவனத்தின் பிரபல AI கருவிகளான ChatGPT, Dall E உட்பட பல தொழில்நுட்ப கருவிகளை உருவாக்குவதில் 34 வயதான மீரா மூர்த்தி முக்கிய பங்கு வகித்தார். இதுவரை அவரது புகழ் மறைமுகமாக இருந்த நிலையில் தற்போது அவருக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக OpenAI நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமீபத்தில் நடந்த நிர்வாக இயக்குனர்கள் கூட்டத்தில் சாம் ஆல்ட்மேன் எப்படி செயல்படுகிறார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் அவரது பல செயல்பாடுகளில் வெளிப்படுத்தத் தன்மை இல்லை என்பதை உறுதி செய்த இயக்குனர்கள் குழு, அவர் மீதான நம்பிக்கையை முழுவதும் இழந்துவிட்டது. அவரால் இனி இந்த நிறுவனத்தை திறம்பட நடத்த முடியாது எனத் தோன்றியதால், அவர் உடனே நீக்கப்படுகிறார் எனத் தெரிவித்துள்ளது.
சாம் ஆல்ட்மேனும் தன்னுடைய எக்ஸ் தளத்தில் இதை உறுதி செய்யும் விதமாக “OpenAI நிறுவனத்தில் என்னுடைய பணிக்காலத்தை நான் அதிகம் விரும்பினேன். இது தனிப்பட்ட முறையில் என்னை உருமாறச் செய்தது. நான் இந்த உலகத்துக்கும் சிறிய மாற்றத்தைக் கொடுத்துள்ளேன் என நம்புகிறேன். என்னுடன் பணிபுரிந்த அனைவருமே திறமையானவர்கள். அடுத்தது என்னவென்று விரைவில் சொல்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
நேற்றுதான் பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்படும் போலி வீடியோ ஆடியோ புகைப்படங்கள் மிகவும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும். நான் பெண்களுடன் நடனம் ஆடுவது போன்ற போலி வீடியோ என்னை கவலை அடையச்செய்கிறது. இத்தகைய வீடியோக்கள் சார்ந்து நிறுவனங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர் கூறியிருந்த நிலையில், இப்போது அதிரடியாக சாம் அல்ட்மேன் அவரது சிஇஓ பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஏனெனில், DeepFake உட்பட பல தொழில்நுட்பங்களில் OpenAI நிறுவனம் பங்களித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.