சுருள் வடிவில் அமைந்துள்ள நமது 'கேலக்ஸி'!

Galaxy Spiral
Galaxy Spiral
Published on

இரவு நேரங்களில் வானத்தில் பல்லாயிரக்கணக்கான விண்மீன்களைப் பார்க்கிறோம். வானத்தில் விண்மீன்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன. பல இலட்சக்கணக்கான விண்மீன்களைக் கொண்ட ஒரு கூட்டம் கேலக்ஸி (Galaxy) என்று அழைக்கப்படுகிறது. தமிழில் இது 'விண்மீன் மண்டலம்' என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய கேலக்ஸிகள் விண்வெளியில் ஏராளமாக அமைந்துள்ளன. கிரேக்கர்களே முதன்முதலில் நட்சத்திரக் கூட்டத்திற்கு கேலக்ஸி என்று பெயர் சூட்டி அழைத்தார்கள். கேலக்ஸி என்றால் கிரேக்க மொழியில் பால் என்று பொருள்.

விண்வெளியில் இருநூறு பில்லியன் கேலக்ஸிகள் அமைந்துள்ளன.  ஒவ்வொரு கேலக்ஸியிலும் சுமார் 100 பில்லியன் விண்மீன்களின் கூட்டம் காணப்படுகின்றன.  கேலக்ஸியின் மையத்தில் விண்மீன்கள் அடர்த்தியான அதிக எண்ணிக்கையில் அமைந்திருக்கும். மற்ற பகுதியில் அடர்த்தி குறைந்து காணப்படும். விண்மீன்கள் அவற்றிற்கு இடையே காணப்படும் ஈர்ப்புவிசை காரணமாக கூட்டமாக உள்ளன.   

நாம் தினமும் காணும் விண்மீனான சூரியன் பால்வெளி கேலக்ஸி (Milkyway Galaxy) என்ற கூட்டத்தில் அடங்கியுள்ளது. இந்த கேலக்ஸி ஒரு சுருள் வடிவ அமைப்பில் அமைந்துள்ளது.  பால்வெளி கேலக்ஸி என்பதைப் பற்றியும் அது ஏராளமான விண்மீன்கள் அடங்கியுள்ள ஒரு பெருங்கூட்டம் என்பதை முதன் முதலில் சொன்னவர் டெமாகிரிடஸ் என்பவர்.

இவர் சொன்ன இந்த கருத்து உண்மையே என்று நிரூபித்தவர் கலிலியோ ஆவார். கலிலியோ தனது தொலைநோக்கி மூலமாக ஆராய்ந்து இந்த விஷயத்தை உறுதி செய்து பின்னர் அறிவித்தார். இத்தகைய கேலக்ஸிகள் பார்ப்பதற்கு வானத்தில் பாலைத் தெளித்தது போலக் காட்சி அளிக்கின்றன. இதன் காரணமாகவே இவற்றை பால்வெளி கேலக்ஸி என்று அழைக்கிறார்கள்.  ரோமானியர்கள் இதை Via lactea என்று அழைத்தார்கள். கிரேக்கர்கள் Galaxias kyklos என்று அழைத்தார்கள்.

தாமஸ் ரைட் என்ற வானியல் வல்லுநர் கேலக்ஸி என்பது உருப்பெருக்கியின் வடிவத்தை ஒத்ததாக அதாவது தட்டையான ஒரு உருவ அமைப்பில் உள்ளது என்று கண்டுபிடித்தார். கேலக்ஸி லென்ஸ் வடிவத்தில் அமைந்த தட்டையான ஒரு உருவம் என்பதை முதலில் தாமஸ் ரைட் எடுத்துக் கூறியபோது இதை எவரும் ஏற்கவில்லை.

இதையும் படியுங்கள்:
குவாசர் J0529-4351 - சூரியனை விட 500 டிரில்லியன் மடங்கு பிரகாசமான பொருள்!
Galaxy Spiral

இவரைத் தொடர்ந்து வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல் மேதை கேலக்ஸிகளைப் பற்றி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல உண்மைகளை வெளியிட்டார்.  ஒவ்வொரு கேலக்ஸியிலும் எத்தனை விண்மீன்கள் அடங்கியுள்ளன என்பதையும் கண்டுபிடித்தார். இவர் தொலைநோக்கி கொண்டு ஆராய்ந்து பால்வெளி கேலக்ஸியில் சுமார் 800 மில்லியன் விண்மீன்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அறிவித்தார். ஆனால் தற்போதைய நவீன கருவிகளின் வாயிலாக நமது பால்வெளி கேலக்ஸியில் 200 பில்லியன் விண்மீன்கள் அடங்கியுள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸியானது ஒரு லென்சின் வடிவத்தை ஒத்திருப்பதால் அதற்கு இரண்டு மாதிரியான விட்டங்கள் உள்ளன. ஒன்று நீளமான பரப்பளவின் விட்டம்.  மற்றொன்று குறுகலான பரப்பளவின் விட்டமாகும். மேலும் இவர் கேலக்ஸியின் நீள விட்டத்தையும் குறுகிய விட்டத்தையும் கண்டுபிடித்தார்.   

ஒரு கேலக்ஸிக்கும் மற்றொரு கேலக்ஸிக்கும் இடையே உள்ள தூரமானது ஆயிரம் முதல் கோடி ஒளி ஆண்டுகள் வரை வேறுபடுகிறது. நமது பால்வெளி கேலக்ஸிக்கு அருகில் உள்ள கேலக்ஸி அண்ட்ரோமெடா (Andromeda) ஆகும். இது சுமார் 20,00,000 ஒளி ஆண்டுத் தொலைவில் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது தெரியுமா? 
Galaxy Spiral

கேலக்ஸிசிள் தொடர்ந்து விலகிச் சென்று கொண்டேதான் இருக்கின்றன. முதன் முதலில் வானியல் மேதை மில்டன் ஹ்யூமாசன் என்பவர் 1929 ஆம் ஆண்டில் விநாடிக்கு 3800 கிலோமீட்டர் வேகத்தில் விலகிச் சென்று கொண்டிருக்கும் ஒரு கேலக்ஸியைக் கண்டுபிடித்து அறிவித்தார். இவரே தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு 1936 ஆம் ஆண்டில் விநாடிக்கு 40,000 கிலோமீட்டர் வேகத்தில் விலகிச் செல்லும் மற்றொரு கேலக்ஸியைக் கண்டுபிடித்து அறிவித்தார்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com