தலையணை அருகே ஸ்மார்ட்போன் வைத்துத் தூங்கும் நபர்கள் ஜாக்கிரதை!
நாம் அனைவருமே தற்போது ஸ்மார்ட்போன் யுகத்தில் மிகவும் வேகமான நடைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த செய்தியாக இருந்தாலும் ஸ்மார்ட்போன் வழியாக நமக்கு உடனடியாகத் தெரிந்துவிடுகிறது. அந்த அளவுக்கு ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஸ்மார்ட்போன் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது.
காலையில் எழுந்த உடனேயே ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவர்கள் அதிகரித்துவிட்டனர். இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதற்கு அடிமையாகி விட்டார்கள் எனலாம். அதுமட்டுமின்றி, தூங்கும்போது கூட இந்த ஸ்மார்ட்போனை விட்டு வைப்பதில்லை. இரவு வெகு நேரம் பயன்படுத்திவிட்டு தலையணை அருகிலேயே வைத்து தூங்கி விடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தான பழக்கமாகும். இதனால் நீங்கள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரலாம். நாம் தூங்கும்போது எவ்வளவு தூரத்தில் செல்போன் இருக்க வேண்டும் என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. உலக சுகாதார அமைப்பு செல்போனை தலையணக்கு அருகே வைத்து தூங்குபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது 90 சதவீத இளம் வயதினரும், 60 சதவீதத்திற்கும் அதிகமான பெரியவர்களும் தங்கள் செல்போனை தலையணைக்கு அருகிலேயே வைத்து தூங்குவதாக அறிக்கைகள் தெரிவிக்கிறது. இதனால் அவர்களுக்கு செல்போனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு தாக்குதல் ஏற்படும் என சொல்லப்படுகிறது. தூங்கும்போது செல்போனை குறைந்தது 5 அடி தூரத்தில் வைத்துத் தூங்குங்கள். இதனால் ஸ்மார்ட்போனில் இருந்து வெளிவரும் எலக்ட்ரோ மேக்னடிக் ஃபீல்டின் தாக்கம் குறைகிறது.
நீங்கள் நீண்ட நாட்களுக்கு செல்போனை தலைக்கு அருகே வைத்து தூங்கி வந்தால், அதன் கதிர்வீச்சு காரணமாக தலைவலி, தசைவலி போன்றவை உண்டாகும். இதிலிருந்து வெளிவரும் ப்ளூ லைட் நமக்கு தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோன்களை சீர்குலைத்து, தூக்கத்தை கெடுப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இரவில் அதிக நேரம் தூங்காமல் இருப்பதால், உடல் உஷ்ணம் அதிகரித்து மேலும் பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே இனி தூங்கும் நேரத்தில் ஸ்மார்ட்போனை உங்களுக்கு அருகே வைத்திருப்பதைத் தவிருங்கள்.