
இந்தியா சீனா எல்லாம் விண்வெளியில் வளர்ந்து வரும் புதிய டான்களாக இருக்கலாம். ஆனால் , ஏற்கனவே அங்கு இரண்டு காட்பாதர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. இன்றைய நமது கால விண்வெளி திட்டங்களை எல்லாம் 70 வருடங்களுக்கு முன்பே யோசித்து செயல்படுத்திய சூப்பர் பவர் நாடுகள் அவர்கள். சோவியத் - அமெரிக்கா விண்வெளி போட்டியின் போது உலக நாடுகள் அதைப் பற்றி பேசுவதை தவிர வேறு எதையும் அறிந்திருக்க வில்லை. அப்போது இந்தியாவும் சீனாவும் விண்வெளி என்றால், நிலாவைக் காட்டி சோறு ஊட்டுவதை தவிர வேறு எதையும் அறிந்திருக்கவில்லை.
விண்வெளி போட்டி:
அன்றைய விண்வெளிப் போட்டியில் சோவியத் யூனியன் முன்னணியில் இருந்தது.அதற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் கடுமையான போட்டி கொடுத்தது. ஆயினும் சோவியத் பல செயல்களில் முன்னோடியாக இருந்தது. சோவியத் ஒரு இரும்புத்திரை நாடு , அங்கு என்ன நடந்தாலும் வெளியுலகத்திற்கு எதுவும் தெரியாது , அதிலும் அவர்களின் விண்வெளி ரகசியம் பற்றி சொல்ல தேவையில்லை. சோவியத் யூனியனில் இருந்த சாதாரணம் ஒரு காகிதம் வெளியில் சென்றால் சம்மந்தப்பட்ட அதிகாரியின் முகவரி அன்றோடு முடிந்திருக்கும். அமெரிக்காவில் கூட இதே நடைமுறை தான்.ஆனால் , அமெரிக்கா ஜனநாயக நாடு என்பதால் வேறு விதமாக கையாளும்.
சோவியத் பொறுத்த வரையில் விண்வெளியில் ஆராய்ச்சிக்காக அவர்கள் ஏராளமான உயிர் தியாகங்களை செய்துள்ளனர். இதை பலி என்று சொல்லலாமா ? என்றால் அப்படி சொன்னவர்களும் விண்வெளிக்கு செல்ல வேண்டியது தான். ஆனால் ,இது வேறு விதமான விண்வெளி , ராக்கெட் இல்லாமல் பயணிக்க கூடியது. சோவியத் அமெரிக்க விண்வெளி போட்டியில் அவர்கள் இழந்த வீரர்கள் மிகவும் அதிகம்.
தோல்வி மழுப்பல்கள் :
இரண்டு சூப்பர் பவர் நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியின் வெற்றிப் பெற்றால் மட்டுமே வெளியுலகிற்கு சொல்வார்கள். தோல்வி அடைந்தால் இது சிறிய ஆராய்ச்சி , பயணிக்கும் தூரம் குறைவு என்று ஏதேனும் சொல்லி மறைத்து விடுவார்கள். தோல்வியடையும் மிஷன்களின் பெயரை மாற்றுவதும், சந்திரனை ஆராய அனுப்பிய ரோவர்களை சாதாரண ஆர்பிட் என்றும் கூறி விஷயத்தை மூடி மறைப்பார்கள். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி தோல்வி வெளி வந்தாலும் , சோவியத்தின் ஆராய்ச்சி தோல்விகள் சம்மந்தப்பட்ட ஆராய்ச்சியாளர் தவிர பக்கத்து அறையில் உள்ள விஞ்ஞானிகளுக்கு கூட தெரியாது , தெரியாதது போல இருப்பார்கள்.
பாந்தம் காஸ்மோனட் (Phantom Cosmonaut):
1960களில் சோவியத்தின் ஒரு பெரிய சோதனை ராக்கெட் கிளம்பிய பொது வெடித்து சிதறியதில் , அதற்காக பணிபுரிந்த , அருகில் இருந்த ஊழியர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.ஆயினும் அப்போது இந்த சம்பவம் மறைக்கப்பட்டது.
1950 களின் இறுதியில் இரு இத்தாலிய சகோதரர்கள் ஒரு ரேடியோ ஆண்டெனா கருவிகள் மூலம் ஒட்டுக் கேட்டதில் அதில் வந்த சிக்னல்கள் மூலம் விண்வெளி வீரர்களின் தகவல்களை ஒட்டுக் கேட்க முடிந்தது. இந்த சம்பவம் சோவியத் விண்வெளிக்கு அனுப்பியது முதல் மனிதனாக யூரி காகரின் செல்லும் முன்பே , அங்கு மனிதர்கள் பேசியதும், விண்வெளியில் இருந்து சோவியத் பெண் உதவி கேட்பதையும் அறிய முடிந்தது.
1957 இல் அலஸ்கி , லேவஸ்கி என்ற இருவர் சோவியத்தில் இருந்து விண்வெளிக்கு பயணம் செய்து திரும்பும் வழியில் விண்கலம் வெடித்து சிதறியதில் உயிரிழந்தனர். அவர்களைப் பற்றிய தகவல்கள் ரஷ்யாவில் எதுவும் கிடைக்காது. இது போன்ற பலி கொடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களை பாந்தம் காஸ்மோனட் அல்லது லாஸ்ட் காஸ்மோனட் என்ற பெயரில் அழைக்கிறார்கள்.
1960 களில் விளாதிமிர் இல்லினாய்ஸ் என்பவர் விண்வெளிக்கு சென்று உயிருடன் திரும்பினார் என்றாலும், சோவியத் அவரை விண்வெளிக்கு சென்று உயிருடன் திரும்பிய வீரராக அறிவிக்க வில்லை.மாறாக அதற்கு பின்னர் விண்வெளி சென்ற யூரி காகரினை தான் அங்கீகரித்துள்ளது. சோவியத்தின் விண்வெளி பயணத்தில் ஏராளமான விண்வெளி வீரர்கள் இறந்ததாக சொல்லப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஒரு சிலர் இதுபோன்ற பாந்தம் காஸ்மோண்ட் தியரியை வெளிப்படுத்திய இத்தாலிய சகோதரர்களை, அவர்கள் பிரபலம் அடைவதற்காக கையாண்ட ஒரு வித்தை என்று சிலர் கூறுகிறார்கள்.
எது எப்படியோ என்று உலக நாடுகள் விண்வெளிக்கு செல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது, சோவியத் யூனியனும் அமெரிக்காவும் தான். இது போன்ற உயிரிழப்புகள் ஏராளமாக இருந்தாலும், இன்றைய விண்வெளி முயற்சியின் வெற்றிகள் அனைத்தும் அவர்களின் தியாகங்களை போற்றப்படுவதாக இருக்க வேண்டும்.