க்ரிமியாவில் ரஷிய ரேடியோ டெலஸ்கோப் அழிந்தது. க்ரிமியா என்ற தீபகற்பம் உக்ரேனுக்குத் தெற்குப் பகுதியில் உள்ளது. மலைகள் அடங்கிய இந்த தீபகற்பத்திற்கு உல்லாசப் பயணிகள் வந்து குவிவது வழக்கம். அழகான இயற்கைச் சூழலில் மணல் பரப்புடன் கூடிய இதன் வெப்பநிலை அனைவரையும் ஈர்க்கும் ஒன்று.
இது 1954ம் ஆண்டில் உக்ரேனுக்கு ரஷியாவால் வழங்கப்பட்டது. ஆனால் 2014ம் ஆண்டு இதை ரஷியா தன் வசம் கைப்பற்றியது. க்ரிமியாவில் (Crimea) ரஷியா தனது மாபெரும் ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை அமைத்தது. இது செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களை ஆராயப் பெரிதும் பயன்படுத்தப்பட்டது.
இரண்டாயிரமாவது ஆண்டில் இது அயல்கிரக வாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய முற்பட்டது. 20 தகவல் பாக்கேஜுகள் நான்கு கிரகங்களை நோக்கி அனுப்பப்பட்டன. இந்த இடங்களில் அயல்கிரகவாசிகள் இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டு இவை தேர்ந்தெடுக்கப்பட்டன.
இந்த தகவல்கள் இன்னும் குறிப்பிட்ட கிரகங்களை அடையவில்லை. ஏனெனில் இவை 20.5 ஒளியாண்டுகள் தள்ளி உள்ள கிரகங்களாகும். க்ளையிஸ் 581 (Gliese 581) என்ற கிரகத்திற்கு பூமியிலிருந்து அனுப்பப்பட்ட செய்தி, 2029ம் ஆண்டு தான் சென்று சேரும். ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இது வெனிரா திட்டம் என்ற திட்டத்தின் கீழ் வீனஸ் என்ற சுக்கிர கிரகத்தைப் பற்றி ஆராய பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியது.
230 அடி குறுக்களவு உள்ள RT 70 என்ற இந்த மாபெரும் ரேடியோ டெலஸ்கோப்பை இப்போது உக்ரேன் அழித்து விட்டது. இந்த டெலஸ்கோப்பின் ஆண்டெனா ரஷிய ராணுவத் துருப்புகளுக்கு உதவியாக இப்போது இருந்து வந்தது. எங்கே எப்படி தாக்குதல்களை நடத்தலாம் என்பதற்கு இது தான் வழிகாட்டும். 5000 மெட்ரிக் டன் எடை உடைய இந்த டெலஸ்கோப்பை ராணுவத்திற்கு உதவுமாறு பல மேம்பாடுகளை ரஷியர்கள் செய்தனர்.
அமெரிக்காவின் ஜிபிஎஸ்-ஸுக்குப் பதிலாக ரஷியாவின் க்ளோநாஸ் (GLONASS) சாடலைட் நாவிகேஷன் அமைப்பு இயங்கி வந்தது. இந்த க்ளோநாஸின் துல்லியத்தை 30 சதவிகிதம் கூடுதலாக இந்த ரஷிய ரேடியோ டெலஸ்கோப் கூட்டியது.
2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு ட்ரோன், இந்த 50 ஆண்டுக் கால ஆண்டெனா மீது மோதியது. 200 கிலோவாட் ரேடியோ ரிஸீவரின் மீது அது குறிவைத்து மோதவே அது அழிந்தது. இதை 2011ம் ஆண்டு மாஸ்கோ உருவாக்கி மேம்படுத்தியது.
போரின் கொடுமைகளில் இந்த ஆண்டெனா அழிவும் ஒன்று என்பது வெளி உலகம் பரவலாக அறியாத செய்தி!
ஜப்பானின் புதிய முயற்சி
அடுத்து ஜப்பான் நாட்டின் ஒரு புதிய முயற்சியை விண்வெளி ஆர்வலர்கள் வெகுவாக வரவேற்கின்றனர். அது தனது ஹயாபுஸா 2 என்ற விண்கலத்தை ஒரு புது ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியுள்ளது.
அஸ்ட்ராய்ட் KY26 என்பது ஒரு சிறிய குறுங்கோள். இது பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை சுழன்று கொண்டிருக்கிறது. இதன் குறுக்களவு 98 அடி மட்டுமே தான் என்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இது 36 அடி குறுக்களவைக் கொண்ட மிகச் சிறிய கோள் என்பது நிர்ணயிக்கப்பட்டு விட்டது.
சிறிய குறுக்களவு, வேகமான சுழற்சி – அடடா, இது தான் ஹயாபுஸா 2 – ஐ இறக்கிப் பார்க்க உகந்த இடம் என்று ஜப்பானிய விஞ்ஞானிகள் சந்தோஷப்படுகின்றனர். 2031ம் ஆண்டு இந்த முயற்சி வெற்றி பெறும் என்பது விஞ்ஞானிகளின் இப்போதைய கணிப்பு. சின்னச் சின்ன வெற்றிகளே பெரிய சாதனைக்கு வழி வகுக்கும் என்பது உலகத்தினருக்குத் தெரியாதா என்ன?
ஜப்பானின் முயற்சிக்கு நமது வாழ்த்துகள்!