
கங்கணம் கட்டிக் கொண்டு சீனா சந்திரனை அடைய தனது முன்னேற்றத்தை உறுதிப் படுத்திக் கொண்டே இருக்கிறது.
சீன விண்வெளி வீரர்கள் சீனாவுக்கான பிரத்யேக விண்வெளி நிலையமான டியாங்காங் நிலையத்திலிருந்து 9 மணி நேரத்திற்கும் அதிகமாக விண்வெளியில் நடந்து ஏற்கனவே உள்ள உலக சாதனையை முறியடித்துள்ளார்கள்.
10 நிமிட நேரம் அதிகம் நடந்து ஏற்கனவே உள்ள சாதனையை இவர்கள் முறியடித்தது குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயமாகும்.
சீன விண்வெளி வீரர்களான காய் ஸுயேஸேயும் சாங் லிங்டாங்கும் (Cai Xuzhe and Song Lingdong) சென்ஷோ 19 விண்கலத் திட்டத்தில் 2024 டிசம்பர் 16ம் நாள் திங்கள் இரவன்று விண்வெளி நிலையத்திலிருந்து வெளியே வந்து டிசம்பர் 17ம்நாளான செவ்வாயன்று காலை வரை நடை பயின்றனர். இதை சீனாவின் மனித இயக்க விண்வெளி பொறியியல் அலுவலகம் (CMSEO –Chinas’ Manned Space Engineering Office) உறுதிப்படுத்தி விட்டது.
இது முந்தைய சாதனையான EVA எனப்படும் எக்ஸ்ட்ரா வெஹிகுலர் ஆக்டிவிடியை முறியடித்திருக்கிறது என்று நாஸாவும் அறிவித்து விட்டது. முந்தைய சாதனை எட்டு மணி நேரம் 56 நிமிடங்களாகும். நாஸா விண்வெளிக்கு அனுப்பிய அமெரிக்க விண்வெளிவீரர்களான ஜேம்ஸ் வாஸ் மற்றும் சூசன் ஹெல்ம்ஸ் ஆகியர் பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து வெளியே வந்து 2001 மார்ச் மாதம் இந்த சாதனையை நிகழ்த்தினர்.
டியாங்காங்கிற்கு சென்ஷோ 19 விண்கலமானது ஆறு மாதம் தங்குவதற்கான திட்டத்தோடு அக்டோபர் 29ம் தேதி வந்தது. இந்த விண்வெளி நடையின் போது காய் ஸுயேஸேயும் சாங்கும் மிகுந்த நெருக்கத்துடன் சாதனையைச் செய்தனர். விண்கலத்தின் உள்ளேயிருந்து இன்னொரு வீரரான வாங் ஹாவோஸே அவர்களுக்கு உதவி செய்தார்.
விண்வெளி நிலையத்திலிருந்து ஒரு ரோபாட் கை உதவியது. கீழே பூமியில் தரை நிலையத்தில் அறிவியல் ஆய்வாளர்கள் விண்வெளி நிலையத்தின் குப்பையிலிருந்து பாதுகாக்கும் சாதனத்தை நிறுவி முடித்தனர். இதர பாதுகாப்புப் பணிகளையும் அவர்கள் நிறைவேற்றி உறுதி செய்தனர். இந்தச் செய்தியை முழுமையாக 17-12-24 செவ்வாய்க் கிழமையன்று சி எம் எஸ் ஈ ஓ (CMSEO) உறுதி செய்தது.
34 வயதான சாங் இந்த எக்ஸ்ட்ரா வெஹிகுலர் ஆக்டிவிடி பணியைத் திறம்பட முடித்து விட்டார் என்று பெருமிதத்துடன் கூறியது.
இந்த விண்வெளி நடையை டிசம்பர் 17ம் தேதி ஜி எம் டி நேரம் இரவு 11.51 p.mக்கு சென்ஷோ கமாண்டரான காய் ஆரம்பித்தார். 90 நிமிடங்களுக்குப் பிறகு அவருடன் இணைந்தார் சாங்.
இருவரும் காலை 8.57க்கு மீண்டும் உள்ளே சென்றனர். அதாவது இந்த ஒன்பது மணி நேரம் ஆறு நிமிடங்கள் என்பது பழைய சாதனையை விட பத்து நிமிடங்கள் அதிகம் என்பதால் சீன வீரர்கள் புது சாதனையை உருவாக்கி விட்டனர்.
இது சீனாவின் விண்வெளி கலத்திலிருந்து வெளியே வரும் 17வது முயற்சியாகும்.
டியாந்ஹே (Tianhe) எனப்படும் அடிப்படை கலமானது 2021 ஏப்ரல் மாதம் விண்வெளியை அடைய இன்னும் கூடுதலாக வென்ஷியன் மற்றும் மெங்ஷியன் (Wentian and Mengtian) என்ற இரு கலங்கள் 2022
ஜூலை மற்றும் நவம்பரில் தாய்க் கலத்துடன் இணைந்தன. இது ‘T’ வடிவில் உள்ளது; பூமிக்கு வெளியில் உள்ள விண்வெளி நிலையமாக இது தன்னுடைய ஓடுபாதையில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சீனா சந்திரனின் மீது பதித்த தன் பார்வையை விடுவதாயில்லை. வெவ்வேறு ஆயத்த பணிகளை மிகுந்த பொருள் செலவில் அது திறம்பட செய்து வருகிறது!