டிஜிட்டல் பேமென்ட் தளங்களின் எழுச்சியால், UPI பணப்பரிமாற்றம் பிரபலமானதாகவும், வசதியான முறையாகவும் மாறி வருகிறது. இருப்பினும் இதிலும் மோசடிக்காரர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டத்தான் செய்கிறார்கள். எனவே யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்பான அபயங்கள் குறித்து விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையாகவும் இருப்பது முக்கியம். இந்தப் பதிவில் UPI மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
தெரியாத அழைப்புகள் மற்றும் செய்திகளில் எச்சரிக்கை: மிகவும் பொதுவான UPI மோசடி நுட்பம் எதுவென்றால், மோசடிக்காரர்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுகிறோம் என்பது போல நடித்து பணத்தை ஏமாற்றுவதாகும். உங்கள் யுபிஐ கணக்கில் சிக்கல் இருப்பதாகக்கூறி உங்களது தனிப்பட்ட தகவல்களைக் கேட்டு மின்னஞ்சல்கள், அழைப்புகள், குறுஞ்செய்திகள் மூலம் தொடர்பு கொள்ளலாம். இதுபோன்ற முன்பின் தெரியாத அழைப்புகள் குறுஞ்செய்திகளில் இருந்து எச்சரிக்கையாக இருங்கள். யாரிடமும் உங்களது யுபிஐ பின், ஓடிபி அல்லது வேறு எந்த ரகசிய விபரங்களையும் பகிர வேண்டாம்.
செயலிகளை சரிபார்க்கவும்: எந்த ஒரு யுபிஐ பரிவர்த்தனையை தொடங்குவதற்கு முன்பாக நீங்கள் நம்பகமான UPI ஆப் அல்லது பிளாட்பார்மைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்யவும். Google Play Store அல்லது Apple App Store போன்ற நம்பத்தகுந்த இடங்களிலிருந்து மட்டுமே செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவும். மோசடிக்காரர்கள் பயனர்களை ஏமாற்றுவதற்கு பிரபலமான பணப் பரிவர்த்தனை தளங்களைப் போலவே போலியாக உருவாக்கி வைத்திருப்பார்கள். இவற்றில் எச்சரிக்கையாக இருங்கள்.
UPI பின்னை பாதுகாக்கவும்: உங்கள் யூபிஐ பின்னை ரகசியமாக வைத்திருப்பது மிக மிக முக்கியம். எப்போதுமே பிறர் எளிதில் கணிக்க முடியாத எண்கள் மற்றும் தனித்துவமான எழுத்துக்களுடைய பின்னைத் தேர்வு செய்யவும். உங்கள் பரிவர்த்தனைக்கு கூடுதல் பாதுகாப்பு சேர்க்க 2 Factor Authentication எனேபிள் செய்வது நல்லது. மேலும் உங்களது யுபிஐ பின்னை அவ்வப்போது மாற்றி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும்.
கட்டண விவரங்களை சரிபார்க்கவும்: நீங்கள் யாருக்காவது பணம் அனுப்பப் போகிறீர்கள் என்றால், பரிவர்த்தனையைத் தொடங்குவதற்கு முன் பணம் பெறுபவரின் UPI ஐடி சரியாக இருக்கிறதா என ஒன்றுக்கு இருமுறை சரிபார்க்கவும். சில நேரங்களில் மோசடிக்காரர்கள் உங்களுக்குத் தெரிந்த நபர்களின் பெயரிலேயே கணக்கை உருவாக்கி, உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம். எனவே திடீரென யாருக்காவது பணம் அனுப்பப் போகிறீர்கள் என்றால் அவர்களைத் தொடர்புகொண்டு உண்மையை அறிந்த பிறகு பணம் அனுப்புவது நல்லது.
உங்கள் சாதனத்தை பாதுகாக்கவும்: உங்க ஸ்மார்ட் போன் அல்லது நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தின் கடவுச்சொல் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும். அவ்வப்போது உங்களது யுபிஐ பயன்பாட்டை அப்டேட் செய்யுங்கள். உங்கள் சாதனத்தை ரூட் செய்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது உங்கள் சாதனத்தை பிறர் எளிதாக ஹேக் செய்ய வழிவகுக்கும். மோசடி வலையில் சிக்காமல் இருக்க பிரபலமான ஆன்டிவைரஸ்களைப் பயன்படுத்துவது நல்லது.
மேலும் UPI மோசடி குறித்த விஷயங்கள் பற்றி அவ்வப்போது இணையத்தில் தேடிப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் பற்றி அழைப்பு, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாக கேட்க மாட்டார்கள் என்ற புரிதலை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதுதவிர ஒருவேளை மோசடியில் சிக்கிக் கொண்டால், எதற்கும் பயப்படாமல் உடனடியாக புகார் அளிக்கவும். இது உங்களது பணத்தை விரைவில் மீட்டெடுக்க உதவும். மேலும் எதிர்காலத்தில் உங்களைப் போல வேறு யாரும் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் உதவும்.