
நிஜ உலகில் பாதுகாப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு முக்கியத்துவம் டிஜிட்டல் உலகிலும் டேட்டா பாதுகாப்பிற்கு கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. கூகிள் நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வப்போது புதிய அப்டேட்களை கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஜிமெயில் பயனர்களுக்கு ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இந்த அப்டேட் மூலம் ஜிமெயில் பயனர்கள் பாதுகாப்பாக தங்கள் கணக்கை லாகின் செய்ய முடியும். அது என்ன அப்டேட் என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஜிமெயில் பயனர்கள் தங்களது கணக்கை பாதுகாப்பாக லாகின் செய்ய Two Factor Authentication முறையை கூகிள் நிறுவனம் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. இந்த முறையில் பயனர்கள் தங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்த பிறகு, எஸ்எம்எஸ் மூலம் வரும் ஆறு இலக்க சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிடுவதன் மூலம் கணக்கை லாகின் செய்ய முடியும்.
இந்த முறை பாதுகாப்பானதாக இருந்தாலும், சில நேரங்களில் ஹேக்கர்கள் எஸ்எம்எஸ் சரிபார்ப்பு குறியீட்டை இடைமறித்து கணக்குகளை ஹேக் செய்ய வாய்ப்புகள் இருப்பதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அது மட்டுமல்லாமல் எஸ்எம்எஸ் மூலம் சரிபார்ப்பு குறியீடு அனுப்புவது கூகிள் நிறுவனத்திற்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது. இந்த காரணங்களினால் கூகிள் நிறுவனம் எஸ்எம்எஸ் அடிப்படையிலான சரிபார்ப்பு குறியீட்டை நீக்க முடிவு செய்துள்ளது.
கூகிள் நிறுவனம் எஸ்எம்எஸ் சரிபார்ப்பு குறியீட்டிற்கு பதிலாக க்யூ ஆர் கோட் (QR code) அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த முறையில் பயனர்கள் ஜிமெயில் லாகின் பக்கத்தில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்த பிறகு, க்யூ ஆர் கோட் ஒன்று திரையில் தோன்றும். பயனர்கள் தங்கள் மொபைல் போனில் உள்ள ஜிமெயில் செயலியைப் பயன்படுத்தி அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் கணக்கை எளிதாக லாகின் செய்ய முடியும்.
இந்த முறை எஸ்எம்எஸ் முறையை விட பாதுகாப்பானது என்று கூகிள் நிறுவனம் கூறுகிறது. ஏனெனில் க்யூ ஆர் கோட் முறையில் சரிபார்ப்பு குறியீடு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட மாட்டாது. இதனால் ஹேக்கர்கள் சரிபார்ப்பு குறியீட்டை இடைமறிப்பது கடினம். மேலும் க்யூ ஆர் கோட் முறை கூகிள் நிறுவனத்திற்கு செலவு குறைந்த முறையாகும்.
கூகிள் நிறுவனம் எதிர்காலத்தில் ஜிமெயில் பயனர்களுக்கு பண பரிவர்த்தனை சேவையையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டால் ஜிமெயில் பயனர்கள் தங்கள் மின்னஞ்சல் மூலமாகவே பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். QR Code அடிப்படையிலான அங்கீகார முறை பணப் பரிவர்த்தனை சேவையை பாதுகாப்பாக வழங்குவதற்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சேவையை மேம்படுத்தவும் கூகிள் நிறுவனம் தொடர்ந்து புதிய அப்டேட்களை கொண்டு வரும் என்று நம்பலாம்.