ஜப்பான் நாடு முன்னேறக் காரணமான 'Quality Circle' - அதென்னங்க Quality Circle?

Quality Circle
Quality Circle
Published on

குவாலிட்டி சர்க்கிள் (Quality Circle) அதாவது தர வட்டம் என்பது ஒரு நிறுவனத்தில் ஒரே பிரிவில் பணி புரியும் பணியாளர்கள் நான்கிலிருந்து ஆறு வரை எண்ணிக்கையில் தாமாகவே முன் வந்து வாரத்தில் ஒரு வாள் தாங்கள் பணிகளில் ஏற்படும் சிக்கல்களைப் பட்டியலிட்டு அதில் எந்த சிக்கலை உடனே தீர்க்க வேண்டும் என்று கண்டறிந்து தீர்விற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து அதை அமல் படுத்தும் ஒரு பிரமாதமான தொழில்நுட்ப அமைப்பே தரவட்டமாகும். இதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளுவோம்.

இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் ஜப்பானில் உற்பத்தி நிறுவனங்களில் தர வட்ட முறை பின்பற்றப்பட்டன. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டாக்டர் கரோ இஷிகவா தர வட்டத்தினை முதன் முதலில் அறிமுகப்படுத்த 1962 ஆம் ஆண்டில் ஜப்பானில் தொடங்கப்பட்டது. தர வட்டக் குழுக்கள் தாங்கள் பணிபுரியும் பகுதிகளில் ஏற்படும் தொழில்நுட்பச் சிக்கல்களை ஆராய்ந்து வெகு எளிமையான வெகு சிக்கனமான தீர்வுகளைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்த உதவின. பின்னர் இந்தியா உட்பட உலக நாடுகள் இந்த தரவட்டக் குழுக்களை தங்கள் தொழிற்சாலைகளில் அறிமுகப்படுத்தி நல்ல பலனைக் கண்டன. இந்தியாவில் ஹைதராபாத் பெல் நிறுவனத்தில் 1980 ஆம் ஆண்டில் முதன்முதலில் தொடங்கப்பட்டது.

தர வட்டமே ஜப்பானின் வேகமான முன்னேற்றத்திற்கான ஒரு காரணமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. தர வட்டத்தின் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் உயர்பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமின்றி சாதாரண ஊழியர்களும் தங்கள் மனதில் தோன்றும் தொழிநுட்பத் தீர்வுகளைக் கூறலாம். அது தர வட்டக் குழுவால் விவாதிக்கப்பட்டு தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும்.

இதையும் படியுங்கள்:
5S டெக்னிக்கால் முன்னேறிய ஜப்பான்! அது என்ன 5S டெக்னிக் ?
Quality Circle

பணியிடங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், தீர்வின் மூலம் உற்பத்தியை அதிகரிக்கவும், செய்யும் பணியினை எளிமையாக்கவும், அனைத்துத் தொழிலாளர்களின் ஈடுபட்டினை அதிகரிக்கவும், தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தை உயர்த்திடவும் தர வட்டம் பெரிதும் பயன்படுகிறது. தர வட்டக் குழுவினர் (QC Members) தங்கள் குழுவிற்கு ஒரு தலைவரைத் (QC Leader) தேர்வு செய்து கொள்ள வேண்டும். அவரே தர வட்டத்தினை வழிநடத்துவார்.

தர வட்டக் குழுவினர் வாரத்திற்கொரு முறை பணியிடங்களில் கூடி தாங்கள் சந்திக்கும் தொழில்நுட்பப் பிரச்சினைகளை பட்டியிலிட்டு அதிலிருந்து உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சினையைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு பிரெயின் ஸ்டார்மிங் (Brain Storming) என்று பெயர். பிரெயின் ஸ்டார்மிங்கில் பட்டியலிடப்படும் பிரச்சினைகள் A, B, C என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. A என்பது குழு உறுப்பினர்களால், B என்பது பிற பிரிவுகளின் வாயிலாக, C என்பது நிர்வாகத்தின் மூலமே தீர்க்கக் கூடிய பிரச்சினைகளாகும். எந்த பிரச்சினையைத் தீர்க்க முடிவு செய்துள்ளார்களோ அந்த பிரச்சினை தொடர்பான முழு தகவல்களையும் குறைந்தபட்சம் ஆறு மாதப் புள்ளிவிவரங்களைத் திரட்டி அதை வைத்து பெரோட்டா வரைபடத்தை (Pareto Chart) X ஆக்சிஸ் மற்றும் Y ஆக்சிஸ் வைத்து வரைய வேண்டும். இந்த வரைபடத்தின் மூலம் பிரச்சினைக்கான மூல காரணத்தைக் கண்டுபிடிக்க இயலும்.

இதையும் படியுங்கள்:
'TN Alert' செயலி கண்டிப்பா உங்க போன்ல இருக்கனும்! ஏன் தெரியுமா?
Quality Circle

அடுத்ததாக பிரச்சினைகளை அலசி ஆராய 4W 2H வழிமுறையைக் கையாள வேண்டும். What, Who, Where, When, How, How much அதாவது பிரச்சினையானது என்ன, யாரால், எங்கு, எப்பொழுது, எப்படி, எவ்வளவு ஏற்படுகிறது என்பதை அலசி ஆராயும் வழிமுறை இது. இதற்கு அடுத்தபடியாக காரண காரிய விளைவு வரைபடத்தை (Cause & Effect Diagram) வரைந்து பட்டியலிட வேண்டும். இது பிரச்சினையானது பொருள், இயந்திரம், சூழ்நிலை மற்றும் மனிதன் என இதில் யாரால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய உதவுகிறது. இதை வைத்து பிரச்சினைக்கான தீர்வினைக் கண்டுபிடித்து அதை சோதனை முறையில் நிறுவனங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும். சோதனை வெற்றி பெற்றால் அதை நிரந்தரமாக நடைமுறைப்படுத்த நிர்வாகம் அனுமதிக்கும்.

தர வட்டத்தை நீங்கள் உங்கள் வீடுகளில் கூட நடைமுறைப்படுத்தலாம். உதாரணமாக வீட்டில் ஒவ்வொரு மாதமும் செலவு அதிகரித்துக் கொண்டே செல்லுகிறது என்று வைத்துக் கொள்ளுவோம். உங்கள் வீட்டிலுள்ளவர்களை தர வட்ட உறுப்பினர்களாகக் கருதி ஒன்று கூடி விவாதித்து எதனால் செலவு அதிகமாகிறது என்பதைக் கண்டறிந்து செலவினைக் கட்டுப்படுத்தலாம். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்களேன். ஒன்று மட்டும் நிச்சயம். அது வெற்றி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com