

ஏ சி யையும் , ஹீட்டரையும் ஒண்ணா பயன்படுத்தினால் பனி விலகி பளிச்சுன்னு ரோடு தெரியும்! மழைக்கால முன்பக்க கண்ணாடி பனி மூட்டத்திற்கு எளிய தீர்வுகள்.
மழையைப் பார்த்து ரசிப்பது அனைவருக்கும் பிடிக்கும். அதே சமயம் மழைக்காலத்தில் வாகனங்கள் இயக்கும்போது முன்பக்க கண்ணாடியில் பனிமூட்டம் உருவாகி வாகனத்தில் உள்ளே உள்ள ஈரப்பதம் காரணமாக உட்புற கண்ணாடியும் பனிமூட்டமாகிறது. ஓட்டுவதற்கு சிரமத்தை உண்டாக்கும்போது ஏசியை முழுமையான குளிர் வெப்பநிலைக்கு உடனடியாக பலரும் மாற்றி விடுகிறார்கள்.
இது பிரச்னையை மோசமாகி பயணத்தை கசப்பாக்குகிறது. அந்த வகையில் மழைக்காலத்தில் முன்பக்க கண்ணாடியில் உருவாகும் பனிமூட்டத்தை விலக்கும் எளிய தீர்வுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
முதலில் பனிமூட்டத்திற்கான காரணத்தை பார்ப்போம்.
மழை பெய்யும்போது காரில் ஆவி சுருங்குதல் (condensation) காரணமாக விண்ட்ஷீல்டு, கண்ணாடிகள் மற்றும் மிரர்களுக்கு உள்ளே பனிமூட்டம் தோன்றுகிறது.
வெளியே மழை பெய்து காற்றை ஈரமாக்கி கொண்டிருக்கும்போது காருக்குள்ளே இருக்கும் காற்று சூடாக இருந்தால் அதன் காரணமாக கண்ணாடிகளில் நீர் படலம் உருவாகிறது. மேலும் காருக்குள்ளே அதிகமானவர்கள் இருந்தாலோ அல்லது ஈரமான பாய்கள், மழையில் நனைந்த காலணிகள் போன்றவற்றின் காரணமாக வெகு விரைவாக காரின் ஈரப்பதம் அதிகரிக்கிறது.
பனிமூட்டத்தை விரட்ட எளிய தீர்வுகள்
இந்த நேரத்தில் ஏசியை மட்டும் இயக்குவதன் மூலம் உள்ளே இருக்கும் காற்று மீண்டும் மீண்டும் சுழற்சிக்கு உள்ளாவதால் ஈரப்பதம் வெளியேறுவதில்லை. அதற்கு பதிலாக ஏசியுடன் சேர்த்து ஹீட்டரையும் இயக்கி காற்று வின்ஷீல்டை நோக்கி ரீயூஸ் மோடு' (reuse mode) என்பதற்குப் பதிலாக 'ஃப்ரெஷ் ஏர் மோடு' (fresh air mode) என்று அமைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் ஏசிக்குள் வரும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி ஹீட்டர் காற்றை சூடாக்குகிறது.
கண்ணாடியில் படும் சூடான உலர்ந்த காற்றின் காரணமாக கண்ணாடியின் வெப்பநிலையும் கேபினுக்குள் இருக்கும் காற்றின் வெப்பநிலை இரண்டிற்குமான வேறுபாடு குறைந்து ஒரு நிமிடத்திற்குள் நீர் திவலைகள் விலகி கண்ணாடி பளிச்சென காட்சி தந்து பயணம் எளிதாகும்.
மழைக்காலங்களில் காரில் பயணம் செய்பவர்கள் காருக்குள் இருக்கும் ஈரப்பதமான காற்று வெளியேற காரில் ஏறியவுடன் ஜன்னல்களை 30 முதல் 60 வினாடிகள் வரை லேசாக திறந்து வைப்பது நல்லது. அதன் பிறகு வெப்பநிலையை சூடான அமைப்பிற்கு மாற்ற காற்றுக்குழாய்களை விண்ட்ஷீல்டை நோக்கி வைத்து, ஜன்னல்களை மூடி ஃபிரஷ் ஏர் மோடை இயக்கி, ஏசியை ஆன் செய்ய வேண்டும். விண்ட்ஷீல்ட், கண்ணாடி மற்றும் மிரர்களில் ஏற்படும் மூடு பனியை சீக்கிரமாக குறைக்க காரில் டிஃபாக் அல்லது டிஃப்ராஸ்ட் பட்டன் இருந்தால், அதை அழுத்தினால் பல அமைப்புகளை குளிர் ஏசி பயன்படுத்தி சீராக்குவதை விட விரைவாக இது சரிசெய்து விடும்.
சூடான காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் ஹீட்டரை காற்று மறுசுழற்சி முறையில் பயன் படுத்தினால் ஒரே அறைக் காற்று மீண்டும் மீண்டும் சூடாக்கப்பட்டு, ஈரப்பதம் அதிகரித்து கண்ணாடியில் பனிமூட்டம் உருவாகி வாகனம் ஓட்டும் போது சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.
ஜன்னல்களை திறந்து கார் பனிமூட்டம் ஏற்படுவதை தடுக்கும் வழி;
ஆகவே ஃப்ரெஷ் ஏர் மோடை மழைக்காலங்களில் வாகனம் ஓட்டும்போது இயக்கினால் வெளிப்புற காற்றை உள்ளே அனுமதித்து, அந்தக் காற்றை ஏசி உலர்த்தி , ஹீட்டர் அதனை சூடாக்கி வாகனத்தின் உட்புறம் ஈரமாகாமல் தடுக்கும் வேலையை செவ்வனே செய்கிறது . இதனால் முன்பக்க கண்ணாடி தெளிவாக தெரிவதால் பாதுகாப்பான பயணத்தை மழைக்காலத்தில் மேற்கொள்ளலாம்.
ஏ சி, ஹீட்டர் இரண்டையும் ஒன்றாக இயக்கும் எளிய தீர்வை மழைக்காலங்களில் பயன்படுத்தினால் கண்ணாடியின் நீர் திவலைகளை விரைவில் அகற்றி பனிமூட்டத்தை விலக்கி தெளிவான பாதையை கண்ணுற்று குடும்பத்துடன் பாதுகாப்பான பயணத்தை பக்காவாக மேற்கொள்ளலாம்.
இனி மழைக்காலங்களில் காரின் முன்பக்க கண்ணாடி மங்குவதைப் பற்றிய கவலை இல்லாமல், சாலையின் தெளிவான பார்வையைப் பெற்று, உங்கள் குடும்பத்தினருடன் எவ்வித விபத்து அச்சமும் இன்றி பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பயணிக்கலாம்.
Reference: மழைக்கால கார் பராமரிப்பு டிப்ஸ் மற்றும் வழிகாட்டி