கண்ணாடி ஏன் இடது பக்கத்தை வலதாகக் காட்டுகிறது? அறிவியல் சொல்லும் ஆச்சரிய உண்மை!

science behind mirrors
science behind mirrors
Updated on

நாம் தினமும் முகம் பார்க்கும் கண்ணாடிகள் (Mirror) மிகவும் சாதாரணமான ஒரு பொருளாகத் தோன்றினாலும், அதற்குப் பின்னால் மிகத்துல்லியமான இயற்பியல் (Physics) மற்றும் வேதியியல் (Chemistry) தொழில்நுட்பம் ஒளிந்துள்ளது.

​கண்ணாடி எப்படி நம் பிம்பத்தை அப்படியே பிரதிபலிக்கிறது என்பதன் அறிவியல் இதோ:

​எதிரொளிப்பு விதி (Law of Reflection) : இயற்பியல் தொழில்நுட்பம்: நாம் ஒரு பொருள் மீது ஒளியைச் செலுத்தினால் அது ஒளியை உறிஞ்சும் அல்லது தன் வழியே கடந்துபோக அனுமதிக்கும். ஆனால், முகம் பார்க்கும் கண்ணாடி ஒளியை அப்படியே திருப்பி அனுப்புகிறது (எதிரொளிப்பு).

​ஒழுங்கான எதிரொளிப்பு (Specular Reflection): ஒரு சொரசொரப்பான சுவற்றின் மீது ஒளி படும்போது, அது நாலாபுறமும் சிதறி ஓடும் (Diffuse Reflection). அதனால் அதில் பிம்பம் தெரியாது. ஆனால், கண்ணாடியின் மேற்பரப்பு மிகவும் சமதளமாகவும் (Flat), மிக மிக மிருதுவாகவும் (Smooth) இருப்பதால், அதன் மேல் படும் ஒளிக்கதிர்கள் சீராக, ஒரே கோணத்தில் திருப்பி அனுப்பப்படுகின்றன.

கோண விதி: ஒளியியல் விதியின்படி, ஒளிக்கதிர் கண்ணாடியில் படும் கோணமும் (Angle of Incidence), அது எதிரொளித்துத் திரும்பும் கோணமும் (Angle of Reflection) சமமாக இருக்கும். இதனால் தான் நம் முகம் எந்தவித மாற்றமும் இல்லாமல் துல்லியமாகக் கண்ணாடியில் தெரிகிறது.

​2. கண்ணாடி தயாரிப்பின் வேதியியல் தொழில்நுட்பம் (Silvering): வெறும் கண்ணாடித் துண்டு (Glass) ஒளியைத் தன் வழியே கடந்து போக அனுமதிக்குமே தவிர, பிம்பத்தைக் காட்டாது. அதற்குப் பின்னால் ஒரு வேதிப்பொருள் பூசப்படும்போதுதான் அது முகம் பார்க்கும் கண்ணாடியாக மாறுகிறது. இந்தத் தொழில்நுட்பத்திற்கு "சில்வரிங்" (Silvering) என்று பெயர்.

ஒரு நவீன கண்ணாடி மூன்று அடுக்குகளைக் கொண்டது:

​முதல் அடுக்கு (முன்பகுதி): உயர்தரமான, தெளிவான சாதாரணக் கண்ணாடித்துண்டு. இது பின்னால் இருக்கும் உலோகப் பூச்சிற்குப் பாதுகாப்பாகவும், ஒளியைச் சீராகக் கடத்தவும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
புத்தகம் வேண்டாம்... வகுப்பறை வேண்டாம்! VR இருந்தால் போதும். கல்வியில் நடக்கும் மெகா புரட்சி!
science behind mirrors

​இரண்டாவது அடுக்கு (பிரதிப்பலிப்புப் பகுதி): கண்ணாடியின் பின்புறத்தில் அலுமினியம் (Aluminium) அல்லது வெள்ளி (Silver) உலோகம் மிக மெல்லிய படலமாகத் திரவ வடிவில் தெளிக்கப்படும். இந்த உலோக அடுக்குதான் 95% க்கும் அதிகமான ஒளியை அப்படியே எதிரொளிக்கும் முதன்மைத் தொழில்நுட்பம் ஆகும்.

மூன்றாவது அடுக்கு (பாதுகாப்புப் பகுதி): அந்த மெல்லிய உலோகப் பூச்சு காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து பழுதடையாமல் இருக்கவும், கீறல்கள் விழாமல் இருக்கவும் அதன் மேல் அடர்நிறப் பெயிண்ட் (Protective Paint) பூசப்படுகிறது.

​3. பிம்பத்தின் தன்மை (Nature of the Image):
​முகம் பார்க்கும் கண்ணாடியில் தோன்றும் பிம்பம் சில தனித்துவமான அறிவியல் பண்புகளைக் கொண்டது:

​மாயப் பிம்பம் (Virtual Image): கண்ணாடியில் தோன்றும் பிம்பத்தைப் பிடித்து ஒரு திரையிலோ அல்லது சுவரிலோ நம்மால் வீழ்த்த முடியாது. அது கண்ணாடிக்கு உள்ளே இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை மட்டுமே தரும்.

​இடவல மாற்றம் (Lateral Inversion): கண்ணாடியின் முன்னால் நாம் வலது கையை உயர்த்தினால், கண்ணாடியில் உள்ள பிம்பம் இடது கையை உயர்த்துவது போலத் தோன்றும். ஒளிக்கதிர்கள் நேர்க்கோட்டில் பயணித்து அப்படியே பின்னோக்கித் திரும்புவதால் இந்த இடவல மாற்றம் ஏற்படுகிறது.

4. நவீன தொழில்நுட்பக் கண்ணாடிகள்:
​இன்று அறிவியல் இன்னும் முன்னேறி, சாதாரணக் கண்ணாடிகளுக்குப் பதிலாகப் பல நவீனக் கண்ணாடிகள் வந்துவிட்டன:

​இருவழி வழுக்குக் கண்ணாடிகள் (Two-way Mirrors): இது ஒருபுறம் பார்த்தால் கண்ணாடியாகவும், மறுபுறம் பார்த்தால் சாதாரணக் கண்ணாடி போலவும் (மறுபக்கம் இருப்பவர் நமக்குத் தெரிவார்) செயல்படும். இது காவல் நிலைய விசாரணை அறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஸ்மார்ட் கண்ணாடிகள் (Smart Mirrors): கண்ணாடியின் பின்னே எல்இடி திரை மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டு, நாம் முகம் பார்க்கும்போதே அன்றைய வானிலை, நேரம் மற்றும் செய்திகளைத் திரையில் காட்டும் தொழில்நுட்பம்.

இதையும் படியுங்கள்:
எலக்ட்ரோலுமினெசென்ஸ் தொழில்நுட்பம் எவ்வாறு நம் வீடுகளையும் திரைகளையும் மாற்றியது?
science behind mirrors

சுருக்கமாகச் சொன்னால், மிருதுவாக்கப்பட்ட கண்ணாடி, ஒளியைப் பிரதிபலிக்கும் உலோகப்பூச்சு, மற்றும் ஒளியின் நேர்க்கோட்டுப் பயணம் ஆகிய மூன்றும் இணைந்துதான் நம் முகத்தை நமக்கு அழகாகக் காட்டுகின்றன!

குறிப்பாக நாம் கண்ணாடியை பார்க்கும்பொழுது இந்த இடவல மாற்றும் எப்படி ஏற்படுகிறது? ஏன் ஏற்படுகிறது? என்று அடிக்கடி நமக்குள் கேள்வி எழும்.  அதைப்பற்றி குழந்தைகளும் நம்மிடம் விளக்கம் கேட்பார்கள் . இப்பொழுது அதைப் புரிந்துகொள்ள முடிந்தது இல்லையா? அதை குழந்தைகளுக்கும் விளக்குங்கள்.

logo
Kalki Online
kalkionline.com