மழையின் போது வரும் மண் வாசனையின் பின்னணியில் இருக்கும் ரகசியம்…  கண்ணுக்கு தெரியாத உயிரினம்தான் காரணமா?

science-behind-petrichor
science-behind-petrichor
Updated on

கடும் வெயிலுக்குப் பிறகு லேசாக தூறல் விழும்போது எழும் அந்த அற்புதமான மண் வாசனைக்கு மயங்காத ஆட்களே உலகத்தில் இருக்க முடியாது. சூடான தேநீரைப் பருகிக்கொண்டே அந்த வாசனையை ரசிப்பது நம்மில் பலருக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். 

இது ஏதோ இயற்கையாக நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த மனதை மயக்கும் நறுமணத்திற்கு பின்னால் செம சுவாரஸ்யமான சில வேதியியல் உண்மைகள் மறைந்து கிடக்கின்றன. 

ரகசியம்!

1964-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள் தான் இந்த வாசனைக்கான காரணத்தை முதன்முதலில் உலகிற்கு வெளிப்படுத்தினர். அவர்கள் இந்த வாசனைக்கு பெட்ரிகோர் (Petrichor) என அழகாக பெயர் சூட்டினார்கள். இந்த வார்த்தை பழங்கால கிரேக்க மொழியிலிருந்து எடுக்கப்பட்டது. 

அவர்களின் மொழியில் பெட்ரா என்றால் பாறை என்றும் இக்கோர் என்றால் கடவுள்களின் நரம்புகளில் ஓடும் புனிதமான ரத்தம் என்றும் அர்த்தம். கோடை காலத்தில் சில செடி கொடிகள் வெளியிடும் ஒரு வகையான இயற்கை எண்ணெய் வறண்ட பாறைகளிலும் மண்ணிலும் போய் படிந்து விடுகிறது. இதுதான் மழையின் போது வாசனையாக மாறுகிறது.

மண்ணுக்குள் இருக்கும் பாக்டீரியா!

இந்த இதமான வாசனைக்கு இன்னொரு மிக முக்கிய காரணம் மண்ணுக்குள் வசிக்கும் ஆக்டினோமைசெட்ஸ் எனப்படும் கண்ணுக்குத் தெரியாத ஒரு பாக்டீரியா தான். கடும் வறட்சி நிலவும் போது இந்த நுண்ணுயிரிகள் மண்ணுக்குள்ளேயே வித்துக்களை உருவாக்கி அமைதியாக காத்திருக்கும். 

மழை பெய்யத் தொடங்கியவுடன் இந்த பாக்டீரியாக்கள் விழித்துக்கொண்டு ஜியோஸ்மின் என்ற ஒரு பிரத்யேகமான வேதிப்பொருளை வெளியேற்றுகின்றன. உண்மையில் நாம் ரசிக்கும் அந்த தூய்மையான மண் வாசனை என்பது இந்த ஜியோஸ்மின் வேதிப்பொருளின் வாசனைதான்.

இதையும் படியுங்கள்:
உங்கள் மூக்கின் ஓரங்களில் உள்ள கருமை நீங்க எளிய வழிகள்!
science-behind-petrichor

மூக்கின் சக்தி!

இதைவிட வியப்பான விஷயம் என்னவென்றால் நமது மூக்கு இந்த ஜியோஸ்மின் வாசனையை நுகர்வதில் ஒரு பெரிய கில்லாடி என்று சொல்லலாம். பல ஆயிரம் லிட்டர் தண்ணீரில் ஒரு சிறு துளி ஜியோஸ்மின் கலந்திருந்தால் கூட மனித மூக்கால் அதை மிக துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும். பழங்காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்களுக்கு குடிநீரை தேடி கண்டுபிடிப்பதற்கும் மழை வருவதை முன்கூட்டியே கணிப்பதற்கும் இந்த திறன் பெரிய அளவில் உதவி இருக்கிறது. 

மேலும் மழைத்துளி தரையில் பட்டவுடன் சோடா பாட்டிலை திறக்கும்போது வரும் குமிழ்கள் போல நுட்பமான காற்று குமிழ்கள் உருவாகும். இந்தக் குமிழ்கள் வெடித்து சிதறும்போது தான் அந்த வாசனை காற்றில் வெகுதூரம் பயணிக்கிறது. இதனை அறிவியல் உலகில் ஏரோசல் விளைவு என்று கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கவிதை: இயற்கை அன்னை வடித்த ஓவியம்: மணாலி காவியம்!
science-behind-petrichor

இயற்கையின் ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கு பின்னாலும் இப்படி ஒரு பிரம்மாண்டமான இயற்பியல் மற்றும் உயிரியல் அறிவியல் ஒளிந்திருப்பது உண்மையிலேயே பிரம்மிப்பான ஒன்றுதான். செடிகள் வெளியிடும் எண்ணெய் மற்றும் மண்ணுக்குள் வாழும் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் என எல்லாம் ஒன்று சேர்ந்துதான் நமக்கு இந்த மகிழ்ச்சியான உணர்வை பரிசளிக்கின்றன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com