

வேடிக்கையாக வானத்தைப் பற்றி ஒரு கதை சொல்வதுண்டு. அப்பொழுதெல்லாம் வானம் தலைக்கு எட்டும் தூரத்திலிருந்த தாம். அப்பொழுது அது மனிதனின் தலையை இடித்துக் கொண்டிருந்தது. அதனால் எட்டு வண்டி நூல் போட்டாலும் எட்டாமல் போகணும். 10 வண்டி நூல் போட்டாலும் பத்தாமல் போகணும் என்று மனிதன் கேட்க, வானம் மேலே சென்றதாக சிறுவயதில் கூறக் கேட்டிருக்கிறோம்.
அதுபோல் வானவில்லை (Rainbow) பற்றிய ஒரு கதை உண்டு. உலகம் உண்டான காலத்தில் சூரிய நட்சத்திரங்கள் போலவே வானவில்லும் வானத்தில் முழு வட்டமாகவே இருந்து வந்தது. அந்த வானவில்லில் இருந்து விதவிதமான வாசனைகள் வந்து கொண்டே இருந்ததாம். அதனால் வானத்தில் பறவைகள் அதைச் சுற்றி வந்து சத்தம் போட்டுக் கொண்டே இருந்தன. பூமியில் இருந்த பூவுக்கு அப்போது வாசனையே கிடையாது.
அப்போது தீதா என்ற சிறுவன் வானவில்லைப் பிடிக்க வேண்டும் என நினைத்து அதைப் பார்த்து ஓடிக்கொண்டே ஒரு மலை மேல் ஏறி நின்று அழுதான். கடவுள் சிறுவனிடம் "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்க, "பாதி வானவில்லை உடைத்து கொடுங்கள்" என்றான்சிறுவன். கடவுளும் அப்படியே செய்தார். வானவில்லின் வாசனையை முகர்ந்து பார்த்துக் கொண்டே வந்த சிறுவன் தன்னிடம் இருந்த வானவில்லை உடைத்து வழியெல்லாம் போட்டுக் கொண்டே வந்தான்.
இதனால் அங்கிருந்த ஒவ்வொரு பூக்கும் ஒரு வாசனை உண்டாக ஆரம்பித்தது. இதனால் கோபமான வானவில், தனக்கு இனி வாசனை வேண்டாம் என்று மேகத்தின் உள்ளே மறைந்து விட்டது.
அதனால் தான் எப்போதாவது மழை பெய்யும் போது மட்டும் வானவில் வருகிறது. அதற்கு இப்போது வாசனையும் இல்லை. என்பதுதான் கதை.
அதுபோல் வானவில்லில் (Rainbow) ஒரு பகுதியைத் தான் நாம் பார்க்கிறோம். அதன் முழு பகுதியைப் பார்க்க முடியாததற்கு என்ன காரணம்?
நாம் பார்க்கும் சூரிய ஒளியில் பல நிறங்கள் உண்டு. ஆனால், அவை நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. மழை மேகங்கள் நீர்த் துளிகளாகச் சேர்ந்திருக்கும் சமயத்தில் தான் இந்த நிறங்களை பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கும். வானவில்லின் நிறங்கள் ஏழு. அவை வயலட், இண்டிகோ, நீலம், பச்சை ,மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு. உண்மையில் வானவில்லில் இவை தவிரவும் நம் கண்களுக்கு தெரியாத நிறங்கள் பல உண்டு என்கின்றனர்.
ஒரு முப்பட்டகக் கண்ணாடியின் (Prism) ஒரு பக்கத்தில் ஒளியை பாய்ச்சினால் மறுபக்கத்தில் ஒளி ஏழு நிறங்களாக பிரியும் ஒளிச்சிதறல் பற்றி நாம் படித்திருக்கிறோம். இந்த ஒளிச்சிதறல் வேலையை முற்பட்டகக் கண்ணாடி செய்வதை போல், வானத்தில் மழை நீர் மேகங்கள் செய்கின்றன. சூரிய ஒளியை ஏழு நிறங்களாகப் பிரித்து வானவில்லாகக் காட்டுகின்றன.
வானவில்லின் பின்புறத்தை காண இயலுமா? என்றால் அது ஒருபோதும் முடியாது என்று தான் கூற முடியும். காரணம் ஆகாயத்தில் உள்ள நீர்த் திவலைகளின் மீது கதிரவன் ஒளி பட்டு பிரதிபலிப்பதாலேயே வானவில் தோன்றுகிறது. அப்போதே ஒளிவிலகலும் நிகழ்கிறது. இந்த ஒளி விலகலால் பல வண்ணங்கள் உண்டாகின்றன.
வானவில் தோன்றும் போது வானவில்லை பார்த்தபடி தான் நாம் நிற்போம். அப்பொழுது நம் முதுகு பக்கத்தில் தான் சூரியன் இருக்கும். அதுபோல் தான் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு முன் நின்று நாம் உருவத்தைக் கண்டால் அப்போது எப்படி கண்ணாடிக்கு பின்புறம் உருவம் இல்லாது இருக்கிறதோ, அது போலவே வானவில்லின் தோற்றமும் அமைகிறது என்பது தான் உண்மை. இதனால் தான் வானவில்லின் பின்புறத்தை எப்படி நின்று பார்த்தாலும் பார்க்க முடியாமல் போவதும்.