விஞ்ஞானிகள், நாம் வாழும் பூமியை எவ்வாறு சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாமல் பராமரிக்கலாம் என்று யோசனை செய்வதை விட , பூமியை போன்று மனிதர்கள் வாழ வேறு ஏதேனும் கிரகங்கள் உள்ளதா என்பதைதான் அதிகமாக ஆராய்ந்து வருகின்றனர். பூமியை தவிர வேறு கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா? என்று நீண்ட காலமாகவே விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கின்றனர் . இந்த ஆராய்ச்சிகள் சமீப காலத்தில் தொடங்கப்பட்டவை அல்ல. பல நூற்றாண்டு காலமாகவே பூமியைப் போலவே வேறேனும் கிரகங்கள் உள்ளனவா என்னும் ஆராய்ச்சியை செய்து வருகின்றனர்.
நமது அறிவுக்கு எட்டிய வரையில், நமது பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்ந்து வருவதாக அறிகிறோம். ஆனால், அதே நேரத்தில் பூமியை சுற்றி உள்ள மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழவில்லை என்பதும் அறிந்துள்ளோம்.
சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களை மட்டுமே நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் , சூரிய குடும்பம் போல் இந்த பிரபஞ்சத்தில் ஒன்றல்ல இரண்டல்ல கோடிக்கணக்கான சூரிய குடும்பங்கள் விண்வெளியில் பரவியுள்ளன. அவற்றை பில்லியன் கணக்கான கிரகங்கள் சுற்றி வருகின்றன, நிச்சயம் அந்த கிரகங்களில் உயிர்கள் வாழ வாய்ப்பு இருக்கும் அல்லது வாழ்ந்து கொண்டும் இருக்கலாம்.
இந்த ஆராய்ச்சியில், நமது பூமியை போலவே உயிரினங்கள் வாழ தகுதியான ஒரு கிரகத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டிலுள்ள இன்ஸ்டிடியூட்டோ டி ஆஸ்ட்ரோஃபிசிகா டி கனாரியாஸ் (IAC) மற்றும் யுனிவர்சிடாட் டி லா லகுனா (ULL) ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 20 வருட கடின உழைப்பின் பலனாக புதிய சூப்பர் பூமியை கண்டுபிடித்துள்ளனர். HD 20794 என்று குறிப்பிடப்படும் ஒரு வகை நட்சத்திரத்தை (சூரியனை) இரண்டு சூப்பர் கிரகங்கள் சுற்றி வருகின்றன. இந்த நட்சத்திரம் நமது சூரியனை விட சற்று சிறியது.
இந்த நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நட்சத்திரத்தை பூமியை விட மிகப்பெரிய இரண்டு சூப்பர் கிரகங்களும் சுற்றி வருகின்றன. HD 20794 நட்சத்திரத்தை சுற்றி வரும் பூமி போன்ற ஒரு சூப்பர் கிரகத்திற்கு HD 20794 d என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சூப்பர் கிரகம் அதன் நட்சத்திரத்தை ஒருமுறை சுற்றி வர 647 நாட்கள் ஆகிறது.
பூமியைப் போலவே உயிர்கள் வாழ இந்த கிரகம் தகுதியான சூழ்நிலைகளை பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த கிரகம் பூமியிலிருந்து 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோளில் தண்ணீர் திரவ வடிவில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக நம்பப்படுவதால் இது உயிர்கள் வாழ ஏற்றதாக இருக்கும். மேலும் தண்ணீர் இருக்க வேண்டும் என்றால் அங்கு நிச்சயம் ஆக்சிஜனும் இருக்கும். அதனால், உயிர்கள் வாழ தேவையான பிற தகுதிகளும் அந்த கிரகத்திலும் இருக்க வாய்ப்புள்ளது.
இந்த கிரகத்தின் வளிமண்டலம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இன்னும் உறுதியான முடிவுகள் இல்லை. ஆனால் பூமியைப் போன்ற காலநிலை மற்றும் வளிமண்டல நிலைமைகள் இங்கு காணப்பட்டால், அது பயனுள்ள கண்டுபிடிப்பாக இருக்கும். இந்த கண்டுபிடிப்பின் ஆய்வின் முடிவுகள் ஐரோப்பாவின் புகழ் பெற்ற வானியல் இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன.