
வெயில்காலம் என்றாலே நம் நினைவில் வருவது இளநீர், ஜூஸ், மோர் போன்றவை தான். வெயில் காலம் வந்து விட்டால் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளவும், நீரிழப்பை தடுக்கவும், மக்கள் குளிர்பானங்கள் பழங்களை நாடத் தொடங்கி விடுவார்கள். அந்த வகையில் கோடை காலம் வந்துவிட்டது. இதனுடன் தர்பூசணியின் சீசனும் வந்து விட்டது. இது கோடையின் மிகவும் ஆரோக்கியமான பழமாகக் கருதப்படுகிறது. தர்பூசணி 92% நீர் மற்றும் 6% சர்க்கரை கொண்ட ஒரு பழமாகும். தர்பூசணியில் அதிக நார்ச்சத்து இருப்பதால் கோடையில் தர்பூசணி உட்கொள்வது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
வெயில் நேரங்களில் வெளியில் அதிகம் பயணம் செய்பவர்கள் நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கி சாப்பிடுவதால் சாலையோரங்களில் தர்பூசணி விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. தர்பூசணி பழங்களை பொறுத்தவரை பார்க்க பெரிதாக சிவப்பாக இருந்தால் மட்டுமே அது சுவையாக இருக்கும் என்று நினைத்து மக்கள் அதனை அதிகமாக வாங்கி சாப்பிடுவார்கள்.
இதனை நன்கு அறிந்த சில வியாபாரிகள் வாடிக்கையாளர்களை கவருவதற்காகவும், விற்பனையை அதிகரித்து லாபம் சம்பாதிப்பதற்காகவும், தர்பூசணி பழங்களில் ரசாயனங்களை ஊசி மூலம் செலுத்தி செயற்கையாக இனிப்பு மற்றும் சிவப்பு நிறத்தை ஊட்டி மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
பொதுவாக தர்பூசணி பழங்களின் சுவையை பார்க்காமல் நிறத்தை பார்த்து அதிக பேர் வாங்குவதால் தர்பூசணி பழத்தின் சிவப்பு நிறத்திற்காக, சில வியாபாரிகள் ‘எரித்ரோசின்’ என்ற கெமிக்கல் கலந்த ரசாயனயங்களையும், இனிப்பு சுவைக்காக சில ரசாயனங்களையும் ஊசி மூலம் பழத்தில் செலுத்துகின்றனர். சில நேரங்களில், தர்பூசணி வேகமாக வளர ஆக்ஸிடாஸின் அதில் செலுத்தப்படுகிறது.
இதனால் தர்பூசணி பழங்கள் இனிப்பாகவும், சிகப்பு நிறமாகவும் மாறுகின்றன. இந்த ‘எரித்ரோசின்’ கலந்த சிவப்பு நிற தர்பூசணி பழங்களை, சாலை ஓர கடைகளில் பார்க்கும் வாடிக்கையாளர்கள் அதன் நிறம் மூலம் ஈர்க்கப்பட்டு அதனை வாங்கி சாப்பிடுகிறார்கள்.
இந்த வேதியியல் ஊசி மூலம் செலுத்தப்படும் பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இது தெரியாமல் இந்த பழங்களை வாங்கி சாப்பிடும் மக்கள் காய்ச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. ஊசி மூலம் செலுத்தப்படும் தர்பூசணிகளில் நைட்ரேட், செயற்கை சாயம் (லீட் குரோமேட், மெத்தனால் மஞ்சள், சூடான் சிவப்பு), கார்பைடு, ஆக்ஸிடோசின் போன்ற இரசாயனங்கள் இருக்கலாம். இவை குடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பவை.
இந்த ரசாயன பழங்களால் பெரியவர்களை விட குழந்தைகள் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்த பழங்களை சாப்பிடும் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு நெஞ்செரிச்சல் போன்றவை உடனடியாக ஏற்படும். சாதாரண மக்கள் ஊசி மூலம் செலுத்தப்படும் தர்பூசணிகளை அடையாளம் காண்பது எளிதல்ல. சரி, ஊசி போடப்பட்ட தர்பூசணியை எப்படி அடையாளம் காண்பது?
* நீங்கள் தர்பூசணி பழத்தை வாங்கும் போது அந்த பழத்தை நன்றாக ஆராய்ச்சி செய்து வாங்க வேண்டும். அதாவது பழத்தில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை நன்றாக கவனித்த பின்னர் மட்டுமே வாங்க வேண்டும். அப்படி வாங்கிய பழங்களை உடனே வெட்டி சாப்பிட்டு விடாமல் வீட்டுக்கு சென்றாலும் தர்பூசணி பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டி சுடு தண்ணீரில் போட வேண்டும். அப்படி போடும் போது தர்பூசணி பழத்திலிருந்து நிறம் பிரிந்து சென்றால் அந்த பழத்தில் ரசாயம் கலந்துள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
* தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொள்ளும். அப்படி இருந்தாலும் பழத்தில் ரசாயனம் கலந்துள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.
* பல நேரங்களில் தர்பூசணியின் மேற்பரப்பில் வெள்ளை மற்றும் மஞ்சள் தூளைப் பார்ப்பீர்கள். நீங்கள் அதைத் தூசி என்று நினைத்தால் அது தவறு, ஆனால் அந்தப் பொடி கார்பைடாக இருக்கலாம், இது பழத்தை வேகமாக பழுக்க வைக்கும். இந்த கார்பைடுகள் மாம்பழம் மற்றும் வாழைப்பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே தர்பூசணியை வெட்டுவதற்கு முன் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்.
* தர்பூசணியை வெட்டிய பிறகு, அதன் நடுவில் துளைகள் மற்றும் விரிசல்களைக் கண்டால், இது தர்பூசணி ஊசி போடப்பட்டதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இயற்கையாகவே பழுத்த பழத்தில் அத்தகைய பள்ளம் அல்லது விரிசல் இருக்காது.
* இது தவிர, சந்தையில் இருந்து வாங்கிய பிறகு குறைந்தது 2-3 நாட்களுக்கு தர்பூசணியை அப்படியே விட்டுவிடுவது ஒரு வழி. ஏனெனில் தர்பூசணிகள் பல வாரங்களுக்கு கெட்டுப்போகாது. இந்த 2-4 நாட்களில், தர்பூசணியின் மேற்பரப்பில் இருந்து நுரை அல்லது தண்ணீர் வெளியே வருவதைக் கண்டால், அது ரசாயன ஊசி மூலம் செலுத்தப்பட்டது என்று அர்த்தம்.
ஊசி மூலம் ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்களை அடையாளம் காண சிறந்த வழி, மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளை அடையாளம் காண்பதுதான். எனவே பழங்களை வாங்கிச் செல்லும் போது கண்டிப்பாக இதுபோன்ற சோதனைகளை செய்து பார்த்து வாங்குவது உடல்நலத்திற்கு நல்லது என்பதை மறக்கவேண்டாம்.