
அச்சுக்கலை என்பது நமது வாழ்வில் இன்றியமையாத ஒரு அங்கமாகிவிட்டது. தினசரி நாம் வாசிக்கும் செய்தித்தாள்கள் முதல் புத்தகங்கள் வரை, விளம்பரங்கள் முதல் அழைப்பிதழ் வரை என அனைத்தும் அச்சுக்கலையைச் சார்ந்துள்ளது. தொடக்கத்தில் அச்சுக்கலையானது ஒரு குறிப்பிட்ட எல்லையை உடையதாக இருந்தது. ஆனால் இன்றோ தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அச்சுக்கலை பிரம்மாண்டமாக வளர்ந்து நம்மை வியப்பிலாழ்த்திக் கொண்டிருக்கிறது.
லெட்டர் பிரஸ், ஆஃப்செட் பிரஸ், ஸ்கிரீன் பிரிண்ட்டிங் என அச்சுக்கலையில் பலவிதமான தொழில்நுட்பங்கள் உள்ளன. காகிதத்தில் அச்சடிக்க முற்காலத்தில் லெட்டர் பிரஸ் எனப்படும் அச்சுக்களைக் கோர்த்து அச்சடிக்கும் முறை பயன்பாட்டில் இருந்தது. இதுமிகவும் கடினமான முறையாகும். பின்னர் இது மெல்ல மெல்ல வழக்கொழிந்து ஆஃப்செட் எனப்படும் பலவண்ண அச்சு இயந்திரங்கள் அறிமுகமாகி இன்றுவரை நடைமுறையில் உள்ளது. இதைத்தவிர ஸ்கிரீன் பிரிண்ட்டிங் தற்போதும் பயன்பாட்டில் உள்ள நுட்பமான ஒரு அச்சுக்கலையாகும்.
ஸ்கிரீன் பிரிண்டிங் (Screen printing) எனப்படும் அச்சுக்கலையினைக் கண்டுபிடித்தவர் கைமெக்காய் என்பவராவார். அச்சு இயந்திரங்கள் காகிதத்தில் அச்சடிக்க பயன்படுத்தப்படுகின்றன. உடையக்கூடிய பொருட்களான கண்ணாடி போன்றவற்றில் அச்சடிக்க இந்த முறையால் மட்டுமே முடியும். எனவே ஸ்கிரீன் பிரிண்டிங் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு விஷேச அச்சுக்கலையாகும்.
அச்சு வழி தகவல் தொடர்புச்சாதனங்களில் ஸ்கிரீன்பிரிண்டிங் ஒரு உன்னதமான கலையாகும். இந்த தொழில் நுட்பத்தின் மூலம் அச்சடிக்கப்படும் விஷயங்கள் தெளிவாக நுட்பமாக காண்பவர் மனதை கவரும்விதமாக அமைந்துள்ளது.
ஸ்கிரீன்பிரிண்டிங் முறை மிகவும் எளிதான ஆனால் நுட்பமான ஒரு அச்சுக்கலையாகும். ஒரு சட்டத்தில் பதிக்கப்பட்ட விசேஷ துணியில் க்ரோமோலின் எனப்படும் ஒரு பிலிமை ஒருவித விசேஷ வேதியியல் பசையைக் கொண்டு ஒட்டி அதன் மீது ஸ்கிரீன்பிரிண்டிங் செய்ய வேண்டிய தகவல் கொண்ட ஒரு பாசிட்டிவ் எனப்படும் பிலிமை வைத்து சூரிய ஒளியில் காட்டி தகவலை அந்த பிலிமின் மீது பதிக்க வேண்டும்.
பின்னர் அந்த சட்டத்தை ஒரு பலகையின் மீது வைத்து துணியின் கீழ் அச்சிட வேண்டிய காகிதத்தையோ, துணியையோ அல்லது கண்ணாடிப் பொருளையோ வைத்து மேற்புறம் இங்க்கை ஊற்றி ஒரு ரப்பர் மூலம் தேய்க்க வேண்டும்.
இப்போது தகவல்கள் காகிதம், துணி, கண்ணாடி இவற்றின் மீது அழகாக பதியும். உடனே காய்ந்தும் விடும். இதுவே ஸ்கிரீன் பிரிண்டிங் எனப்படுகிறது. அச்சடிக்க துணியை பயன்படுத்துவதால் இது ஸ்கிரீன் பிரிண்டிங் என அழைக்கப்படுகிறது.
கணினியின் உபயோகம் பரவலான பின்பு இந்த முறையில் அச்சடிப்பது மிகவும் எளிதான விஷயமாகி விட்டது. முன்பெல்லாம் அச்சடிக்கப்பட வேண்டிய தகவல்களை கணினி மூலம் அச்சடித்து அந்த தகவல்களை முதலில் நெகட்டிவ் பிலிமாக மாற்ற வேண்டும். பின்னர் அந்த நெகட்டிவ் பிலிமிலிருந்து பாசிட்டிவ் பிலிம் தயாரிக்க வேண்டும். தகவல்கள் அடங்கிய இந்த பாசிட்டிவ் பிலிம் மூலம்தான் தகவல்கள் ஸ்கிரீனில் பதிக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டன. ஆனால் தற்போது லேசர் பிரிண்ட்டர்களின் அதிவேக வளர்ச்சியினால் கணினியில் அச்சடிக்கப்பட்ட தகவல்கள் லேசர் பிரிண்ட்டர்கள் மூலம் நேரடியாக பாசிட்டிவ் பிலிமாக அச்சடிக்கப்படுகின்றன. இதனால் நேரமும் மிச்சமாகிறது. பணமும் மிச்சமாகிறது.
விசிட்டிங் கார்டுகள், திருமண அழைப்பிதழ்கள், லெட்டர் பேடுகள், துணிப்பைகளில் அச்சடிக்கப்படும் விளம்பரங்கள் போன்றவை ஸ்கிரீன் பிரிண்ட்டிங் மூலமே அழகிய முறையில் அச்சடிக்கப்படுகின்றன.
ஸ்கிரீன் பிரிண்ட்டிங் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளுவதும் எளிது. மேலும் தொழிலைத் துவங்க மூலதனமும் குறைவாகவே ஆகும். ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த தொழிலைக் கற்றுக் கொண்டு குறைந்த முதலீட்டில் ஸ்கிரீன் பிரிண்ட்டிங் அச்சுத்தொழிலைத் தொடங்கி நிறைய சம்பாதிக்கலாம்.