வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி, வானத்தில் ஒரே சமயத்தில் 6 கோள்கள் பவனி வரப்போவது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
ஆமாம். இந்த அதிசய நிகழ்வு வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி அதிகாலையில் நடக்கவுள்ளது. இந்த கோள்களின் பவனியில் கலந்து கொள்ளும் கோள்கள்; புதன், செவ்வாய், வியாழன் (குரு), சனி, யுரேனஸ், நெப்டியூன். பொதுவாக கோள்கள் சூரியனைச் சுற்றியபடி, அவற்றின் பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தாலும், இவ்வாறு அருகருகே இருப்பதென்பது அரிதாகத்தான் நிகழ்கிறது. இவ்வாறு நிகழ்வதற்கு இவை அனைத்தும் சூரியனுக்கு அருகில், ஒரு குறிப்பிட்ட வான்வெளியில் ஒரே சமயத்தில் பயணம் செய்ய வேண்டும். இத்தகைய பவனியை ஆங்கிலத்தில் Planetary Parade என்றழைக்கின்றனர். அதாவது கோள்களின் பவனி என்று பொருள்.
பொதுவாக கோள்கள் அல்லது நட்சத்திரங்கள் போன்ற வான்பொருட்களின் பிரகாசத்தினைக் குறிக்க, அப்பாரன்ட் மேக்னிடியூட்(apparent magnitude) என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய mag , அதாவது மேக் என்ற அலகு 6 இருக்கும் வரை, சாதாரண கண்களால் காணமுடியும். இந்த அலகு குறைவாக இருக்க இருக்க, அந்த வான்பொருள் மிகவும் பிரகாசமாக இருக்கும். ஜூன் 3, 2024 அன்று கோள்களில் பிறைச்சந்திரனுடன் பின்வரும் கோள்கள் அவற்றின் மேக் அளவுடன் குறிக்கப்பட்டுள்ளன.
நெப்டியூன்(7.9)
யுரேனஸ்(5.8)
சனி(1.1)
செவ்வாய்(1.0)
வியாழன்(-2.0)
புதன்(-1.4)
எனவே, நெப்டியூன் மட்டும், மேக் அளவு அதிகமாக இருப்பதால், காண்பதற்கு தொலைநோக்கி தேவைப்படும். மற்ற கோள்களை எளிதில் சாதாரண கண்களால் காண முடியும். இவை நேர்கோட்டில் தோன்றுவது போல் இருந்தாலும், இவை நேர்கோட்டில் இல்லை. அவற்றின் பாதை நீள்வட்டமானது.
இப்போது உங்கள் கேள்வி எனக்கு கேட்கிறது. "இவற்றை நாங்கள் எவ்வாறு பார்ப்பது?" அதற்கான விடை பின்வருமாறு.
ஜூன் 2 ஆம் தேதி நள்ளிரவில், மஞ்சள் நிற சனி தெரியத் தொடங்கும். கிழக்கு திசையில் நோக்க வேண்டும். அது கும்ப உடுமண்டலத்தில்(Constellation) தெரியும்.
நெப்டியூன் அருகிலுள்ள மீன உடுமண்டலத்தில் தெரியும். ஆனால், பிரகாசம் குறைவாக இருப்பதால், தொலைநோக்கி கொண்டு தான் காணவேண்டும். சிறிது நேரம் கழித்து, அதே மீன உடுமண்டலத்தில் செவ்வாய் தெரியும். அது சிவப்பு நிறத்தில் இருக்கும். பின்னர், விடியும் நேரத்தில் யுரேனஸ்,வியாழன் மற்றும் புதன் தெரியத் தொடங்கும். இவை எல்லாம் ரிஷப உடுமண்டலத்தில் தெரியும். இவற்றில் புதனைப் பார்ப்பது கடினம். ஏனென்றால், அது சூரியனுக்கு அருகிலுள்ள கோள்.
இந்த அருமையான நிகழ்வு நமது வானியல் சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ள உதவும். ஜூன் 3 ஆம் தேதிக்கு இப்போதே தயாராகுங்கள்.
ஒரு வேளை நீங்கள் ஜூன் 3 ஆம் தேதி பார்க்காவிட்டாலும் கவலைக் கொள்ளத் தேவையில்லை. அதற்கு முன்பு சில நாட்களும், அதற்கு பின்பு சில நாட்களும் கூட, இத்தகைய வானியல் அதிசயத்தை காண்பதற்கு உகந்த நாட்களே.
ஆனால், இந்த கோள்களின் பவனியில் வெள்ளி ஏன் இல்லை என்று நீங்கள் எண்ணலாம். அடுத்து வரும் பிப்ரவரி 28, 2025 அன்று, வெள்ளியும் இந்தப் பவனியில் கலந்து கொள்ளும். அந்த நாளுக்காகவும் நாம் காத்திருக்கலாம்.