2023ல் உலக அளவில் டெக் நிறுவனங்களின் செயல்பாடு ஆமை வேகத்தில் இருந்ததால் இந்தியாவில் பணியமர்த்தல் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என டெக் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமீபத்திய அறிக்கையின்படி 2023ல் சில குறிப்பிட்ட பதவிகளுக்கான பணியமர்த்தல் 90% வரை குறைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2022 உடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய மிகப்பெரிய வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஆண்டு அமேசான், கூகுள், மெட்டா போன்ற தலைசிறந்த டெக் நிறுவனங்கள் இந்தியாவில் அதன் ஊழியர்களுக்கு ‘பிங்க் ஸ்லிப்’ எனப்படும் பணியாளரை தன் பதவியிலிருந்து நீக்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழங்கியதை நாம் பார்க்க முடிந்தது.
இதில் பெரும்பாலும் நிறுவனங்களின் செயல் திறனில் ஏற்பட்ட சிக்கல்களே காரணமாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது அந்த நிறுவனங்களின் வணிகத்தை சீரமைத்து, செலவுகளை குறைக்க செய்யப்பட்டதாக ஒரு சாரார் கூறினர். இதில் மோசமான விஷயம் என்னவென்றால், 2024-ம் ஆண்டிலும் டெக் நிறுவனங்கள் பணியமர்த்தலை குறைவாகவே வைத்திருக்கும் என்பதுதான்.
அடுத்த சில ஆண்டுகளில் AI தொழில்நுட்பத்தை தங்களுடைய பணிகளுக்கு பயன்படுத்த டெக் நிறுவனங்கள் முயன்று வருகின்றன. இதை கூகுள், மெட்டா போன்ற தலைசிறந்த டெக் ஜாம்பவான்கள் தங்களுடைய திட்டத்தில் இருப்பதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாகவே கடந்த சில மாதங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
தற்போது கூகுள் தன்னுடைய கஸ்டமர் சப்போர்டில் AI தொழில்நுட்பத்தை சோதனை செய்து வருகிறது. இது வெற்றியடைந்தால் கூகுள் பணியாளர்களின் தரப்பில் பெரும் தாக்கம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இதனால் பணியில் இருப்பவர்கள் அடுத்த சில மாதங்களில் வேலையில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதற்கு தங்களுடைய திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது வல்லுனர்களின் அறிவுரையாக உள்ளது.
இதன் மூலமாக AIன் மறைமுக தாக்கத்தால் பணியாளர்கள் தங்கள் பணிகளை இழக்கும் நிகழ்வு கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறி வருகிறது என்பதை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.