

இந்த பரந்து விரிந்த உலகத்தில் 2500 க்கும் மேற்பட்ட பாம்புகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் எல்லா பாம்புகளும் விஷமுள்ளவயாக இருக்கிறதா என்றால் அப்படி கிடையாது. ஒரு சில பாம்புகள் மட்டுமே அதிகமான விஷத்தை கொண்டு இருக்கின்றன. மற்ற பாம்புகள் எல்லாம் விஷமற்றவைகளாகவே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக நல்ல பாம்பு, கருநாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கொம்பேறி மூக்கன், ராஜ நாகம் போன்ற வகையான பாம்புகள் அதிகமான விஷத்தை கொண்ட பாம்புகள் ஆகும். தண்ணீர் பாம்பு, மலைபாம்பு, சாரைப்பாம்பு, ஓலை பாம்பு, மண்ணுளிப் பாம்பு இது போன்ற பாம்புகளுக்கு விஷம் கிடையாது.
ஒரு மனிதனுக்கு பாம்பு கடித்து விட்டால் அந்த பாம்பினுடைய விஷமானது நரம்பு மண்டலத்தை பாதிப்படையச் செய்து உடனடியாக உயிரிழப்பிற்கு கூட வழிவகுக்குமாம்.
பாம்பின் விஷத்தை சேகரித்தல்!
இந்த பாம்பினுடைய விஷத்தை மலைவாழ் மக்களான இருளர்கள் சேகரிக்கிறார்கள். இதற்கு தமிழ்நாடு அரசு இவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அந்த பாம்பை பிடித்து ஒரு கண்ணாடி குவளையை அதன் வாயின் பக்கத்தில் கொண்டு செல்வார்கள். அப்பொழுது அது தன்னை பாதுகாத்துக் கொள்ள விஷத்தை அந்த குவளையின் மீது கக்கும். இவ்வாறு கொடிய விஷமுள்ள பாம்புகளின் விஷமானது சேகரிக்கப்படுகிறது. கட்டுவிரியன் பாம்பின் விஷம் 100 கிராம் 66 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நல்ல பாம்பு விஷம் 100 கிராம் 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விஷமானது கேன்சர், இதய நோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்து தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
பாம்பின் விஷம் மருந்தாக மாற்றம் அடைவது எப்படி?
சேகரிக்கப்பட்ட பாம்பின் விஷத்தை ஒரு ஊசியின் மூலம் குதிரையின் உடம்பில் செலுத்தி விடுவார்கள். குதிரையின் உடம்பிற்குள் விஷம் சென்றவுடன் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக குதிரை எதிர் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும். இந்த ஆன்டிபாடிகள் குதிரையின் ரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அவை மருந்து தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பாம்பின் விஷமானது ஒரு நல்ல மருந்தாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
இவற்றில் நல்ல பாம்பு கடித்தால் மனிதர்களுக்கு ஏற்படும் அறிகுறியை வைத்து அதற்கு ஏற்றார் போல விஷமுறிவு மருந்து கொடுக்கிறார்கள். இதேபோல கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கொம்பேறி மூக்கன், கருநாகம், ராஜநாகம் போன்ற ஒவ்வொரு வகையான பாம்பின் கடிக்கும் ஒவ்வொரு வகையான ஆன்ட்டிபாடி மருந்துகளை குதிரையின் உடம்பில் செலுத்தி தனித்தனியான மருந்துகளை தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாம்பு கடியின் அறிகுறிகளை வைத்து அதற்கு ஏற்றார் போல விஷ முறிவு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.