Jupiter's eye
Jupiter's eye

'சூரிய குடும்பத்தின் வேக்குவம் கிளீனர்' எது? அதன் கண் சொல்லும் செய்தி என்ன?

Published on

பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரியும் ஒரு கிரகம் என்றால் அது வியாழன் (Jupiter) தான். வானத்திலே சூரியன், நிலா, வெள்ளிக்கு அடுத்தபடியாக பிரகாசமாக தெரிவது வியாழன் தான். இது பிரகாசமாக இருப்பதை பார்த்த பழங்காலத்தினர், இது சூரியனை சுற்றுவதற்காக வேகமாக பயணம் செய்வதை பார்த்துவிட்டு, அதற்கு நாடோடி நட்சத்திரம் என்று பெயர் வைத்தனர். பிறகு தான் அது கிரகம் என்றே தெரிய வந்தது. அந்த கிரகத்திற்கு கண் இருப்பதை 'தெரியும் ஆனால் தெரியாது' என்ற வகையில் தான் நாம் யூகித்திருப்போம். மேலும் வியாழனுக்கு சூரிய குடும்பத்தின் வேக்குவம் கிளீனர் என்ற ஒரு பெயரும் உண்டு. ஏன்? அவற்றைப் பற்றி இப்பதிவில் காண்போம். 

வியாழனுடைய படத்தை பார்த்தால் அதன் கீழ் பக்கம் சிவப்பாக முட்டை வடிவத்தில் புள்ளி தெரியும். அதை புள்ளி என்று சாதாரணமாக சொன்னாலும் மிகப்பெரிய புள்ளி அது.  அதனுடைய அகலம் 23 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல்.

இரண்டு பூமிகளை இந்த கண்ணுக்குள்ளே வைத்து விட முடியும் என்கிறார்கள். அறிவியல் ரீதியாக பெரிய சிவப்பு புள்ளி என்று சொல்லும் அதை சிலர் வியாழன் உடைய கண் என்று கூறுகின்றனர். 

டெலஸ்கோப் கண்டுபிடித்ததில் இருந்து இதை பார்த்துக் கொண்டே இருக்கும் விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? இந்த கண் உருவாகக் காரணம் வியாழனில் அடிக்கும் காற்று தான் என்கின்றனர். இங்கே அதிகமான வேகத்தில் காற்று வீசுவதால், இந்த காற்றிலே வாயுக்கள் அலைபாய்வதினால் தான் வியாழன் பட்டை பட்டையாக கோடுகள் சூழ்ந்த மாதிரி தெரிகிறதாம். 

வியாழனில் எல்லா இடங்களிலும் காற்று அடித்தாலும் இந்த சிவப்பு புள்ளி இருக்கிற பகுதிகளில் சுழல் காற்று நிரந்தரமாக அடித்துக் கொண்டு இருக்கிறது. இந்த காற்றிலே வியாழனுடைய உட்பகுதியில் இருக்கிற ரசாயனங்களும், வாயுக்களும் மாட்டிக் கொண்டு மேல் பக்கமாக வருகின்றன. குறிப்பாக இப்படி வருகிற பொருட்களில் கந்தகமும் நிறைய இருக்கலாம். அதனால் தான் அந்த இடம் சிவந்து தெரிகிறது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இந்த சுழல் காற்றோட வேகம் திடீரென்று குறையும் போது இந்த கண் மறைந்து விடும். பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து திரும்ப வந்துவிடும். இந்த பெரிய கண் இல்லாமல் மேலும் பல இடங்களில் சின்ன சின்னதாக நிறைய கண்கள் இருக்கின்றன. இதனால் தான் வியாழன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்று கூறுகின்றனர். 

வியாழனில் 82 சதவீதம் ஹைட்ரஜனும் 18 சதவீதம் ஹீலியமும் இருப்பதால் காற்று ஊதின பலூன் மாதிரி வெளியில் வாயுக்கள் கலவையாக இருந்தாலும் இதன் மையத்தில் கொஞ்சம் பாறைகளும், உலோகங்களும் திரவ நிலையில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் யூகித்து இருக்கிறார்கள். இப்படி வித்தியாசமான உட்பகுதி இருப்பதால்தான் வியாழனுடைய ஈர்ப்பு சக்தி அதிக தூரத்திற்கு இருக்கிறதாம்.

இதையும் படியுங்கள்:
பூமிக்கு காத்திருக்கும் பேராபத்து! விண்வெளியில் குவிந்து வரும் குப்பைகள்...
Jupiter's eye

விண்கற்கள், பாறைகள் என்று ஏதாவது தடம் மாறி சூரியக் குடும்ப எல்லைக்குள் நுழைந்தால் அதை வியாழன் மடக்கி தன்னை சுற்றி வருகிற நிலவாக மாற்றிவிடுமாம். மற்ற கிரகங்கள் மீது அவை மோதி பேரழிவுகள் நடக்காமல் தடுக்கப்படுவதால் வியாழனுக்கு 'சூரியக் குடும்பத்தின் வேக்குவம் கிளீனர்' என்று ஒரு பெயர் உண்டு என்று கூறப்படுகிறது. 

logo
Kalki Online
kalkionline.com