

விண்வெளி கழிவுகள் (space junk) என்பது விண்வெளியில் மனிதர்களால் விடப்பட்ட, இனி பயன்பாட்டில் இல்லாத செயற்கைக்கோள்கள், ராக்கெட் பாகங்கள் மற்றும் பிற உபகரணங்களாகும். இவற்றின் முக்கிய பாதிப்புகள் என்று பார்த்தால் விண்வெளி பயணங்களுக்கு ஆபத்து, செயலிழந்த உபகரணங்களால் விண்கலங்கள் மோதும் அபாயம் மற்றும் கண்காணிப்பதற்கு கடினமான மிகச்சிறிய குப்பைகளின் குவிப்பாகும். இந்த கழிவுகள் விண்வெளியில் குவிந்து வருவதால், விண்வெளிப் பயணங்கள் மற்றும் ஆய்வுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றன.
விண்வெளிக்கு விண்ணில் பாய்ந்த கிட்டத்தட்ட 9 ஆயிரம் டன் எடையுள்ள உபகரணங்கள் சிக்கல்களை உருவாக்குகின்றன. ஒரு மில்லிமீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான 100 மில்லியனுக்கும் அதிகமான விண்வெளிக் குப்பைகள் பூமியை சுற்றி வருவதாக நாசா கூறுகிறது. இந்த குப்பைகளில் செயல்படாத விண்கலம், கைவிடப்பட்ட உபகரணங்கள், பணி தொடர்பான குப்பைகள் போன்றவை அடங்கும்.
மணிக்கு 17,500 மைல்கள் (28,160 கிலோமீட்டர்) வேகத்தில் பயணிக்கும் பொழுது ஒரு சிறிய குப்பைத் துண்டு கூட ஒரு செயற்கைக்கோள் அல்லது விண்கலத்தை சேதப்படுத்தும் என்று கூறப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு துண்டு குப்பைகள் பூமியில் விழுந்துள்ளதாக நாசா கூறுகிறது. இவை பெரும்பாலும் பெருங்கடல்களிலோ அல்லது மக்கள் வசிக்காத பகுதிகளிலோ தரையிறங்குகின்றன என்றும் இதனால் மக்களுக்கு காயமோ, சொத்துகளுக்கு எந்தவிதமான சேதமோ இதுவரை ஏற்பட்டதாக தெரியவில்லை என்றும் கூறுகிறது.
சில அங்குல அளவுள்ள ஒரு சிறு போல்ட் கூட வேகமாகச் செல்லும் விண்கலத்தைத் தாக்கினால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பல்லாயிரக்கணக்கான சிறிய குப்பைகள் பூமியை சுற்றி வருவதால், அவற்றை கண்காணிப்பது மிகவும் கடினமாக உள்ளது.
விண்வெளிப் பயணங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயலிழந்த செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட் உடல்கள் போன்ற பெரிய கழிவுகள், தற்போது செயல்படும் விண்கலங்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) சுற்றுப்பாதையை மாற்றியமைக்கும் அளவுக்கு ஆபத்தானவை என்று கூறப்படுகிறது. எதிர்கால விண்வெளிப் பயணங்கள் மற்றும் செயற்கைக்கோள் திட்டங்களுக்கு இந்த கழிவு பிரச்சனை பெரும் தடையாக உள்ளதாக கூறப்படுகிறது.
விண்வெளிக் கழிவுகளை குறைப்பதற்கு உலகளாவிய ஒருங்கிணைப்பு அவசியம். செயலிழந்த உபகரணங்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவது அல்லது விண்வெளியில் பாதுகாப்பாக அகற்றுவதற்கான வழிகள் ஆராயப்படுகின்றன. விண்வெளி குப்பைகளை அகற்ற ஹார்பூன்கள், வலைகள் அல்லது ரோபோ கைகள் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.