

2026 ஜூலை மாதம் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு திடீர் தகவலை கர்வத்துடன் வெளியிட்டுள்ளனர்.
தங்களது ஆய்வின்படி விண்கல சுற்றுப்பாதையில் ஒரு விண்கலத்தை ஏவி விடுவதற்கான (விண்வெளி ஏவுதல்) தொகை இதுவரை இல்லாத அளவு குறையப்போகிறது என்பதுதான் அவர்களது ஆய்வின் கண்டுபிடிப்பு!
இனி ஒரு கிலோகிராம் விண்கலத்திற்கு 3868 அமெரிக்க டாலர்தான் செலவாகும் என்று அவர்கள் அடித்துச் சொன்னதோடு, 2030ம் ஆண்டு வாக்கில் இந்தச் செலவு 1569 அமெரிக்க டாலராகக் குறையும் என்றும், இது இன்னும் குறைந்து 2040ம் ஆண்டு வெறும் 273 அமெரிக்க டாலராக ஆகும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வுக் குழுவின் தலைவரான அலெஸ்ஸியோ டெர்ஜி (Alessip Terzi), “உலகில் இதுவரை ஏற்பட்ட போக்குவரத்து புரட்சியை விட இந்த விண்கலங்களை விண்ணில் ஏவுவதற்காக ஆகும் செலவு குறைந்து புதிய புரட்சியை உருவாக்கப் போகிறது” என்கிறார்.
இந்த ‘பிரமிக்க’ வைக்கும் கண்டுபிடிப்பைக் கண்டு உலக விஞ்ஞானிகள் கேலி செய்கின்றனர். பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு விஞ்ஞானி, “அடடே! கேம்பிரிட்ஜ் பேராசியர்கள் சமீப காலத்தில் ஏராளமான ராக்கெட்டுகளை வாங்கிக் குவித்துவிட்டார்கள் போலும்” என்று நையாண்டி செய்திருக்கிறார்.
ஒரே ஒரு ராக்கெட்டை அவர்கள் விண்ணில் செலுத்தி இருந்தாலும் கூட இது எப்படிப்பட்ட கஷ்டமான காரியம், இதற்கு ஆகும் செலவும் படும் பாடும் அவர்களுக்குப் புரிந்திருக்கும் என்பது பொதுவான விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது.
அமெரிக்கா விடும் ராக்கெட்டுகள் பலவற்றின் தோல்வி, இந்தியா விண்ணில் செலுத்தி தோல்வி அடைந்த PSLV ராக்கெட்டுகளின் வரலாறு ஆகியவற்றை கேம்பிரிட்ஜ் புரிந்துகொள்ளவில்லை என்பது உண்மை!
ஃபைர்ப்ளை (Firefly) மற்றும் ராக்கெட் லாப் (Rocket Lab) போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் தோல்வி மேல் தோல்வி கண்டு ராக்கெட் அமைப்புகளை மேம்படுத்த படாதபாடுபடுகின்றனர்.
எக்லிப்ஸ் என்ற ராக்கெட்டை தயாரிக்க ஃபைர்ப்ளை படும் பாடும். நியூட்ரான் என்ற ராக்கெட்டை அமைக்க ராக்கெட் லாப் நிறுவனம் இன்னும் பாடுபட்டு வருவதையும் அறிஞர்கள் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஸ்பேஸ் எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான இலான் மஸ்க் அடுத்த ஆண்டே விண்ணில் ‘ஒரு நாளைக்கு ஒரு பயணத்தின் ஆரம்பம்’ என்பதை எட்டி விடுவோம் என்கிறார்.
2025ல் ஸ்பேஸ் எக்ஸ் 165 முறை விண்ணில் ராக்கெட்டுகளை ஏவியது.
திரும்பத் திரும்ப பயன்படுத்தும் முறையில் Falcon 9 ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் கடந்த இருபது ஆண்டுகளில் நன்றாக அபிவிருத்தி செய்தது.
ஒரு கிலோவுக்கு 54000 அமெரிக்க டாலர் என்று இருந்த தயாரிப்பு செலவு இப்போது ஒரு கிலோவிற்கு 3000 டாலர் என்ற அளவிற்குக் குறைந்திருக்கிறது.
ஒரு கிலோவிற்கு ஆகும் செலவு 500 டாலர் என்ற இலக்கை அது கொண்டிருக்கிறது.
இதற்கான காரணம் திரும்பத் திரும்பப் பயன்படுத்த முடியும் என்ற ராக்கெட்டின் தயாரிப்பு முறைதான்.
Falcon 9ன் திறன் 25000 கிலோகிராம் ஆகும்.
ஆக Payload எனப்படும் ஏற்புசுமைக்குத் தக்கபடி நீங்களே செலவை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
இந்தியாவின் விண்வெளி பட்ஜெட் 840 கோடி அமெரிக்கன் டாலராக 2025ல் இருந்தது. இது 1300 கோடி அமெரிக்கன் டாலராக உயர இருக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் 4400 அமெரிக்கன் டாலரை இலக்காக இந்தியா நிர்ணயித்திருக்கிறது.
இந்தியாவும் ராக்கெட் தயாரிப்பை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கத் தீர்மானித் திருக்கிறது. முதலில் 16 விண்கலங்களைத் தனியார் நிறுவனங்கள் தயாரிக்க இருக்கின்றன.
நமது PSLV ராக்கெட்டை விண்வெளியில் ஏவும் செலவு 1000 கோடி ரூபாயாக உள்ளது. ஒரு கிலோவிற்கு 4500 முதல் 5000 அமெரிக்க டாலராக இதன் செலவு உள்ளது.
எதிர்காலத்தில் அனைத்து நாடுகளும் விண்வெளிப் போட்டியில் பங்கு கொள்ளும். தினமும் ராக்கெட்டுகள் ஏவி விடப்படும். பல்வேறு நோக்கங்களுக்காக இவை பயன்படுத்தப்படும்.
அடுத்த இருபது ஆண்டுகளில் விண்வெளியின் புதிய அத்தியாயம் ஆரம்பமாகப் போவது நிச்சயம்தான்!
விண்வெளித் துறையில் ஏவுதல் செலவுகள் எவ்வாறு மாறிவருகின்றன என்பதையும், உலகளாவிய வர்த்தகப் போட்டியில் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் இந்திய விண்வெளித் துறையின் எதிர்கால வாய்ப்புகளையும் துல்லியமாக அறிந்துகொள்ளலாம்.