மின்னல் வேகத்தில் விண்வெளி பயணம்... அசத்தும் SpaceXன் Starship விண்கலம்!

SpaceX Starship
SpaceX Starship
Published on

போக்குவரத்துக்காக முதலில் மாடு, குதிரை சவாரிகள், பின் சக்கரங்கள் பொருத்திய வண்டிகள் முதல், பறக்கும் விமானங்கள் வரை நம் தேவைக்கேற்றவாறு, புது புது வடிவிலான வாகனங்களை கண்டுபிடித்து கொண்டிருக்கிறோம்.

விமானத்தின் உயரத்தையே மிஞ்சும் அளவிற்கு பூமியின் வெளிவட்ட பாதையில் பறந்தால் (Space travel) எப்படி இருக்கும்? வாருங்கள்.. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) அதன் ஸ்டார்ஷிப் (Starship) விண்கலத்தை உலகின் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு பயணம் மேற்கொள்வதற்காக பயன்படுத்த போகிறார்களாம். ஆரம்பத்தில் இந்த ஸ்டார்ஷிபை வடிவமைத்ததே கிரகங்களுக்கு (planet to planet) இடையேயான பயணத்திற்காகதான். அதுவும் இந்த (planet to planet) பயணத்தை வருகிற 2030 க்குள் செயல்படுத்த மும்முரமாக ஆய்வுகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தற்போது இந்தப் புதுமையான விண்கலத்தை, பூமியில் உள்ள எந்த ஒரு நகரங்களுக்கு இடையேயும் ஒரு மணி நேரத்திற்குள் பயணிகள் பயணம் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்க சில ஆய்வுகளை ஆரம்பித்துள்ளார்களாம்.

இது சாத்தியமானால், இப்போதைய விமானப் பயணத்துடன் ஒப்பிடும் போது இந்த ஸ்டார்ஷிப்பின் பயண நேரம் மிகவும் குறைவு. உதாரணமாக, நியூயார்க் நகரத்திலிருந்து ஷாங்காய்க்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டால் 14 மணிநேரம் மேலாகும். அதுவே இந்த ஸ்டார்ஷிப் வேகத்தில் பயணித்தால் வெறும் 37 நிமிடங்கள் தானாம்.

இதன் நன்மைகள் என்னென்ன?

  • இந்த போக்குவரத்து முறை பல நன்மைகளை நமக்கு வழங்குகிறது. முதலில், இதன் வேகம் முதன்மையான நன்மையாகும். இது தொலைதூரப் பயணங்களை குறுகிய நேரத்தில் மேற்கொள்ள உதவுகிறது. இதனால் எல்லோரின் பயண நேரத்தை கணிசமாகக் குறைகிறது.

  • இந்த பயணங்களின் செலவு கிட்டத்தட்ட விமானத்தின் எகானமி கிளாஸ் (Economy class) கட்டணத்திற்கு நிகராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இதன் சேவை பலதரப்பட்ட மக்களும் அணுகக்கூடியதாக இருக்கலாம்.

  • இந்த போக்குவரத்தால் வணிகம் சார்ந்த விஷயங்கள், குடும்ப பயணங்கள் சார்ந்த சுற்றுலாவை எளிதாக்குவதன் மூலம், உலகளாவிய பொருளாதாரத்தில் கண்டிப்பாக பல புரட்சிகளை ஏற்படுத்தும்.

  • நீண்ட பயணங்களில் கிட்டத்தட்ட 100 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியுமாம். இந்த அம்சம் ஒட்டுமொத்த பயணத் திறனை மேம்படுத்துகிறது. ஏனெனில், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்களை கொண்டு செல்வதால் மறைமுகமாக இது பல நன்மைகளை அளிக்கலாம்.

இதில் பயணம் செய்ய பயிற்சிகள் அவசியமா?:

இந்த வகை பயணத்திற்கு பயணிகள் பல முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். விமான நிலையங்களில் உள்ளதைப் போன்று, பாதுகாப்பு சோதனைகளை பயணிகள் சந்திக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மனிதனை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின்! சோம்பேறிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்?
SpaceX Starship

கூடுதலாக, போர்டிங், இறங்கும் நடைமுறைகள் மற்றும் பூமியின் வெளி வட்ட பாதையில் பயணிப்பதால் விண்வெளி பயணத்திற்கு என சில குறிப்பிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். இதனால் ஸ்பேஸ்எக்ஸ், இந்த விண்கலத்தில் பயணம் மேற்கொள்ள பயணிகளுக்கு விரிவான பயிற்சித் திட்டங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பம் முன்னேறும்போது, இந்த வகையான கண்டுபிடிப்புகளை பார்ப்பதற்கு கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. இந்த போக்குவரத்து சாத்தியமாகும் பட்சத்தில் பல முன்னேற்றங்களை நம் உலகம் பார்க்கக்கூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com