மருத்துவம் படிப்பது நேர விரயம்! - சர்ச்சையை கிளப்பிய மஸ்க்!
உலகப் பணக்காரரும் தொழில்நுட்ப ஜாம்பவானுமான எலான் மஸ்க் எதையாவது பேசினாலே அது உலக அளவில் விவாதப் பொருளாகிவிடும். இம்முறை அவர் தொட்டிருப்பது மருத்துவத் துறையை. "இன்னும் மூன்றே ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களை விட, டெஸ்லாவின் 'ஆப்டிமஸ்' (Optimus) போன்ற ரோபோக்கள் சிறப்பாகச் செயல்படும். அதனால், இனி மருத்துவம் படிக்கக் கல்லூரிக்குச் செல்வது அர்த்தமற்றது," என்று அவர் கூறியிருப்பது மருத்துவ உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அறுவை சிகிச்சை!
மருத்துவர்கள் ஆவதற்கு நீண்ட காலம் பிடிக்கிறது என்பதும், மனிதர்கள் தவறு செய்பவர்கள் என்பதும் மஸ்க்கின் வாதம். ஆனால், அறுவை சிகிச்சை என்பது வெறும் கைகளை அசைத்துத் தைக்கும் இயந்திரத்தனமான வேலை அல்ல என்பதை அவர் மறந்துவிடுகிறார். ஒவ்வொரு மனித உடலும் தனித்துவமானது. அறுவை சிகிச்சையின் போது எதிர்பாராத ரத்தப்போக்கோ அல்லது சிக்கலோ ஏற்பட்டால், அந்த நொடியில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது மருத்துவரின் அனுபவ அறிவும், உள்ளுணர்வுமே ஆகும்.
சாலையில் செல்லும் Self-driving car-களையே இன்னும் முழுமையாக விபத்தில்லாமல் இயக்க முடியாத நிலையில், மனித உடலுக்குள் மிக நுட்பமாகச் செயல்படும் ரோபோக்களை இன்னும் 3 ஆண்டுகளில் முழுமையாக நம்புவது சாத்தியமற்றது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எலும்பு முறிவு, தீக்காயம் போன்ற சிகிச்சைகளில் தேவைப்படும் உடனடி முடிவுகளைத் திட்டமிடப்பட்ட அல்காரிதம்களால் எடுக்க முடியாது.
எலான் மஸ்க் பேசத் தவறிய மிக முக்கியமான விஷயம் 'சட்ட ரீதியான பொறுப்பு'. ஒரு மனித மருத்துவர் தவறு செய்தால், சட்டத்தின் முன் அவர் பதில் சொல்ல வேண்டும். ஆனால், ஒரு ரோபோ அறுவை சிகிச்சையின் போது தவறு செய்து நோயாளி உயிரிழந்தால் யார் பொறுப்பேற்பது? அந்த ரோபோவைத் தயாரித்த நிறுவனமா? அல்லது அதற்கு மென்பொருள் எழுதியவரா? இயந்திரங்களைக் கூண்டில் ஏற்ற முடியாது.
மேலும், மருத்துவம், வெறும் சிகிச்சை மட்டுமல்ல; அது நம்பிக்கை சார்ந்தது. நோயாளியின் பயத்தைப் போக்கவும், மோசமான செய்திகளைப் பக்குவமாகச் சொல்லவும், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் மனிதத்தன்மை அவசியம். "உங்கள் உயிருக்கு ஆபத்து" என்பதை ஒரு இயந்திரம் திரையில் காட்டுவதற்கும், ஒரு மருத்துவர் கையைப் பிடித்து ஆறுதல் சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
எலான் மஸ்க் கூறுவது போல செயற்கை நுண்ணறிவு (AI) மருத்துவத் துறையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அது மருத்துவர்களுக்கு உதவியாக இருக்குமே தவிர, அவர்களை முற்றிலுமாக அழித்துவிடாது. எதிர்கால மருத்துவர்கள் ரோபோக்களை எப்படி இயக்குவது என்பதைக் கற்றுக் கொள்வார்களே தவிர, மருத்துவம் படிப்பதை நிறுத்த மாட்டார்கள்.
விமானம் வந்த பிறகும் விமானிகள் தேவைப்படுவது போல, எவ்வளவு நவீன ரோபோக்கள் வந்தாலும், மனித உயிரைக் காக்க மனித உணர்வுகளுடனான மருத்துவர்கள் எப்போதும் தேவைப்படுவார்கள். மஸ்க்கின் இந்தக் கருத்து முதலீட்டாளர்களைக் கவரலாமே தவிர, நடைமுறைக்கு ஒவ்வாதது.
