நவீன மருத்துவத்தின் அடித்தளம்: உலகிற்கு முதல் அறுவை சிகிச்சை நூலைத் தந்த சுஸ்ருதரின் வரலாறு!

surgery-and-plastic-surgery
surgery-and-plastic-surgery
Updated on

ருத்துவ உலகம் இன்று எட்டியிருக்கும் அதிநவீன அறுவை  சிகிச்சைகளுக்கும், பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற தொழில் நுட்பங்களுக்கும் அடித்தளம் அமைத்த பெருமை பண்டைய இந்தியாவையே சாரும்.  சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு, அறிவியல் வசதிகள் ஏதும் இல்லாத காலத்தில், மனித உடற் கூறியலைத் துல்லியமாக ஆராய்ந்து உலகிற்கு முதல் அறுவை  சிகிச்சை நூலைத் தந்தவர் சுஸ்ருதர் ஆவார்.

மருத்துவ வரலாற்றில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய அவரது ‘சுஸ்ருத சம்ஹிதை’ நூலின் சிறப்புகளையும், அவரது வியக்கத்தக்க மருத்துவச் சாதனைகளையும் இக்கட்டுரையில்  காண்போம்.

மருத்துவ உலகிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக உலகளவில்“அறுவைசிகிச்சையின் தந்தை” (Father of Surgery) என்று போற்றப்படுகிறார்.

சுஸ்ருத சம்ஹிதையின் சிறப்புகள்

அறுவை சிகிச்சைக் கருவிகள்: இந்த நூலில் கத்திகள், ஊசிகள், இடுக்கிகள் (forceps) என சுமார் 121 வகையான அறுவைசிகிச்சைக் கருவிகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் பற்றி மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் சர்ஜரி (Plastc Surgery): போரிலோ அல்லது தண்டனையின் மூலமாகவோ மூக்கை இழந்தவர்களுக்கு, நெற்றி அல்லது கன்னத்தின் தோலை எடுத்து புதிய மூக்கை உருவாக்கும்“ரைனோபிளாஸ்டி” (Rhinoplasty) எனப்படும் மூக்கறுவை சிகிச்சை முறையை முதன் முதலில் இவரே உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இதனால் இவர்“பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை” என்றும் அழைக்கப் படுகிறார்.

இதையும் படியுங்கள்:
நிலவு முதல் செவ்வாய் வரை... விண்வெளி ஆய்வில் இந்தியாவின் விஸ்வரூபம்!
surgery-and-plastic-surgery

பல்வேறு சிகிச்சைகள்: கண் புரை (Cataract) நீக்கம், சிறுநீரகக் கல் அகற்றுதல், எலும்பு முறிவுக்கான சிகிச்சைகள் மற்றும் உடற்கூறியல் (Anatomy) பற்றிய துல்லியமான பதிவுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

பண்டைய காலத்தில் விலங்குகளின் உடல்களிலும், இறந்த மனித உடல்களிலும் தழும்புகள் மற்றும் காயங்களை ஏற்படுத்தி, தன் மாணவர்களுக்கு இவர் அறுவைசிகிச்சைப் பயிற்சிகளை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“சுஸ்ருத சம்ஹிதை” நூலின் கட்டமைப்பு:  இவர் சமஸ்கிருத மொழியில் எழுதிய“சுஸ்ருத சம்ஹிதை”இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

பூர்வ தந்திரா (Purva-tantra):  இதில் ஐந்து பகுதிகள் உள்ளன. உடற்கூறியல், மருந்துகள், அறுவைசிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய வழிமுறைகள், கருவிகளின் பயன்பாடு பற்றி இதில் கூறப்பட்டுள்ளது.

உத்தர தந்திரா (Uttara-tantra): இதில் கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை (ENT) நோய்கள் மற்றும் நச்சுயியல் (Toxicology) போன்ற சிறப்புக் கூறுகள் விளக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 184 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூலில், 1,120 வகையான நோய்கள், 700 மருத்துவத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகள் பற்றி மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு அளித்த பயிற்சி:  வெறும் தத்துவமாக மட்டுமில்லாமல், தனது மாணவர்களுக்கு    Practical பயிற்சி களையும் வழங்கினார்.

தர்பைப் புற்கள் மற்றும் பாய்களில் உடலைக் கீறும் (Incision) பயிற்சிகளை அளித்தார்.

பலாப்பழம் மற்றும் சுரைக்காய்களில் அறுவைசிகிச்சை செய்து பழகச்சொன்னார்.

இறந்த விலங்குகளின் ரத்த நாளங்களில் ஊசி போடும் பயிற்சிகளையும், துணிப் பொம்மைகளில் தையல் (Suturing) போடும் பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்தார்.

இதையும் படியுங்கள்:
60 வயதிலும் 20 வயது வேகம்! வயதான பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்!
surgery-and-plastic-surgery

உலகளாவிய அங்கீகாரம்:  சுஸ்ருதரின் இந்த அரிய நூல் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் அரபு மொழியில்“கிதாப்-இ-சுஸ்ருத்” (Kitab-i-Susrud) என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. அதன் மூலமாக இது ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மயக்க மருந்து (Anesthesia) முழுமையாகக் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், மது மற்றும் சில மூலிகைச் சாறுகளைப் நோயாளிக்குக் கொடுத்து வலி தெரியாமல் அறுவைசிகிச்சை செய்த சுஸ்ருதர், மனித குல வரலாற்றின் மிக உன்னதமான மருத்துவ மேதை என்பதில் ஐயமில்லை.

logo
Kalki Online
kalkionline.com