60 வயதிலும் 20 வயது வேகம்! வயதான பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்!

முதுமையிலும் இளமை ததும்ப... மூட்டு வலி மற்றும் உடல் விறைப்பைக் குறைத்து, பெண்கள் சுதந்திரமாக நடமாட பிசியோதெரபி எவ்வாறு உதவுகிறது?
Physiotherapy for Elderly
Physiotherapy for ElderlyImage credit: AI
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆரோக்கியத்தையும், நடமாடும் திறனையும் பேணுவதன் அவசியம் எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்தது தான். வயதான பெண்களுக்கு பிசியோதெரபி மிகவும் பாதுகாப்பானது மட்டுமல்ல மிகவும் நல்லதும் கூட. இது தசை வலிமை, மூட்டு இயக்கம் மற்றும் சமநிலையை மேம்படுத்தி மூட்டுவலி, முதுகுவலி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற வயது தொடர்பான பிரச்சனைகளை நிர்வகிக்க உதவும். மேலும் இது கீழே விழுந்து அடிபடும் அபாயத்தைக் குறைத்து அன்றாட செயல்பாடுகளை தனித்து செய்ய வழிவகுக்கும்.

1) மூட்டு வலி மற்றும் விறைப்பு

கீல்வாதம் (Arthritis), தசைநார் கிழிதல் மற்றும் மூட்டு வலிகளால் அவதிப்படும் பெண்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிப்பதன் மூலம் வலியைக் குறைத்து மூட்டுகளின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தலாம். பிசியோதெரபி செய்வதன் மூலம் உடல் விறைப்பைக் குறைத்து, மூட்டுகளின் இயக்கத்தை அதிகரித்து மூட்டுகளின் வலியை குறைப்பதுடன் அன்றாட வேலைகளை செய்வதற்கும் நம் உடலை எளிதாக்குகிறது.

2) சமநிலை பயிற்சிகள்

வயது அதிகரிக்கும் போது தடுமாறி விழும் வாய்ப்புகள் அதிகம். பிசியோதெரபி பயிற்சிகள் உடலின் சமநிலையை (Balance) சீராக்க உதவும். சமநிலை பயிற்சிகள் மூலம் நிலைத்தன்மையை மேம்படுத்தி, எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து, குறிப்பாக பெண்களிடையே கணிசமாக குறைக்கப்படுகிறது. இதனால் வயதான காலத்தில் கீழே தவறி விழுந்து காயம் அடைவதையும், எலும்பு முறிவு ஏற்படுவதையும் 50% வரை தடுக்கிறது.

3) எலும்பு அடர்த்தி மற்றும் தசை வலிமை

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புகள் பலவீனமடையும் அபாயம் அதிகம். பிசியோதெரபி பயிற்சிகள் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கவும், எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) உள்ளவர்களுக்கு எலும்பு அடர்த்தியை பராமரிக்க உதவுவதுடன் தசை வலிமையையும் அதிகரிக்க உதவுகிறது. முதுகு வலி, கழுத்து வலி ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்தி, தசை வலிமையை அதிகரிக்க பிசியோதெரபி பெருமளவில் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
முதுகுத்தண்டு மூங்கில் போல விரைப்பாக்கி விடுகிறதா? அலட்சியப்படுத்தாதீர்கள்!
Physiotherapy for Elderly

4) சிறுநீர் கட்டுப்பாடின்மை (Urinary Incontinence)

பல பெண்களுக்கு வயது முதிர்வால் சிறுநீர் கட்டுப்பாடின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இடுப்புத் தள தசைகளை (Pelvic floor muscles) வலுப்படுத்தும் பயிற்சிகள் மூலம் இதற்கு தீர்வு காண முடியும்.

5) நரம்பியல் கோளாறுகள்

பக்கவாதம் (Stroke) அல்லது பார்கின்சன் நோய்க்குப் பிறகு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இந்த பிசியோதெரபி பயிற்சிகள் பெரிதளவில் உதவுகிறது.

6) மனநலம் மற்றும் சுறுசுறுப்பு

வழக்கமான உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தை குறைத்து, தூக்கத்தை மேம்படுத்துவதோடு மூளை செயல்பாடுகளையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றது. சுறுசுறுப்பாக இருப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படுவதுடன் மன அழுத்தத்தைக் குறைத்து மனநலனையும் மேம்படுத்துகிறது.

7) வாழ்க்கைத் தரம் மேம்பாடு

அன்றாட நடவடிக்கைகளை நடப்பது, படிக்கட்டுகளில் ஏறுவது போன்றவற்றை வலியின்றி செய்யவும், நம்பிக்கையுடன் நடமாடவும் உதவுகிறது. நீண்ட கால நோய்களிலிருந்து மீண்டு சுறுசுறுப்பான மற்றும் சுதந்திரமான வாழ்க்கையை வாழ உதவுகிறது.

8) சுவாசப் பயிற்சி

சுவாசப் பயிற்சி மூலம் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி சுவாசப் பாதையை எளிதாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
பாதம் வலி உண்டாவதற்கான காரணங்களும், தீர்வும்!
Physiotherapy for Elderly

9) அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மீட்பு

இடுப்பு அல்லது முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு விரைவாக பழைய நிலைக்குத் திரும்பவும், செயல்பாட்டை மீட்கவும் பிசியோதெரபி பயிற்சிகள் உதவுகிறது.

பிசியோதெரபி சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பு ஒரு தகுதி வாய்ந்த பிசியோதெரபிஸ்ட் அல்லது மருத்துவரை அணுகி நம் உடல் நிலைக்கு ஏற்ற பயிற்சிகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com