'இலவசம்' என்று ஆசைப்பட்டு ஆபத்தை விலைக்கு வாங்காதீர்கள்... உங்களை வேவு பார்க்கும் அந்த 3 செயலிகள்!

Dangerous Apps
Dangerous Apps
Published on

இந்த நவீன காலத்தில் வங்கிப் பரிவர்த்தனைகள் முதல் தனிப்பட்ட புகைப்படங்கள் வரை அனைத்தையும் நாம் நமது ஸ்மார்ட்போனில் தான் சேமித்து வைத்திருக்கிறோம். நமது தரவுகள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை நிலைமை அதற்கு நேர்மாறாக உள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில சாதாரண செயலிகள், நமக்குத் தெரியாமலேயே நம்மைப் பற்றிய அத்தனை தகவல்களையும் சேகரித்து மூன்றாம் நபர்களுக்கு விற்பனை செய்கின்றன. 

நம்முடைய இருப்பிடம், நாம் இணையத்தில் எதைத் தேடுகிறோம், யாரோடு பேசுகிறோம் போன்ற அனைத்துத் தகவல்களும் திருடப்படுகின்றன. அப்படிப்பட்ட ஆபத்தான செயலிகள் எவை என்பதையும், அதிலிருந்து நம்மை எப்படிக் காத்துக்கொள்வது என்பதையும் பார்க்கலாம் வாங்க.

1. இலவச VPN!

இணையத்தில் தங்கள் அடையாளத்தை மறைப்பதற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பலரும் விபிஎன் (VPN) செயலிகளைப் பயன்படுத்துகிறார்கள். இதில் கட்டணம் செலுத்தாமல் கிடைக்கும் இலவச விபிஎன் செயலிகள் மிகவும் ஆபத்தானவை. வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல, பாதுகாப்பிற்காக நாம் பயன்படுத்தும் இந்தச் செயலிகளே நம்மை உளவு பார்க்கின்றன. 

நாம் எந்த இணையதளத்திற்குச் செல்கிறோம், எதைப் பதிவிறக்கம் செய்கிறோம் என்பதை இவை கண்காணிக்கின்றன. இந்தத் தரவுகளைத் திரட்டி விளம்பர நிறுவனங்களுக்கு விற்பதன் மூலமே இவை வருமானம் ஈட்டுகின்றன. எனவே இலவசம் என்ற பெயரில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் விற்கிறீர்கள் என்பதை உணர வேண்டும்.

இதையும் படியுங்கள்:
விஞ்ஞானிகள் எச்சரிக்கை : பூமியை நெருங்கி வரும் ‘2024 YR4’ விண்கல்..!
Dangerous Apps

2. தேவையற்ற செயலிகள்!

இப்போது வரும் எல்லா ஸ்மார்ட்போன்களிலும் டார்ச்லைட் வசதி மற்றும் போனைச் சுத்தம் செய்யும் வசதிகள் இயல்பாகவே கொடுக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் பலர் தனியாக டார்ச்லைட் செயலிகளையும், கிளீனிங் செயலிகளையும் பதிவிறக்கம் செய்கிறார்கள். ஒரு சாதாரண டார்ச்லைட் எரிவதற்கு உங்கள் போனில் உள்ள காண்டாக்ட்ஸ் அல்லது நீங்கள் இருக்கும் இருப்பிடத்தின் தகவல் எதற்கு என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா. இது போன்ற செயலிகள் போனைச் சுத்தம் செய்வதாகச் சொல்லிக்கொண்டு, பின்னணியில் உங்கள் பழக்கவழக்கங்களைக் கண்காணித்துத் தரவுகளைத் திருடுவதையே முக்கிய வேலையாகச் செய்கின்றன.

3. பியூட்டி கேமரா! 

சமூக வலைத்தளங்களில் தங்கள் புகைப்படங்களை அழகாகக் காட்ட வேண்டும் என்பதற்காகப் பலர் விதவிதமான பியூட்டி கேமராக்களையும், போட்டோ எடிட்டிங் செயலிகளையும் பயன்படுத்துகிறார்கள். இந்தச் செயலிகள் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து அந்தத் தகவல்களைத் தங்கள் சர்வர்களில் சேமிக்கின்றன. இந்த முக அடையாளத் தரவுகள் தவறானவர்களின் கைகளில் கிடைத்தால், அது உங்களின் டிஜிட்டல் அடையாளத்திற்கே மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும். இந்தத் தரவுகள் எப்போது அழிக்கப்படும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் கிடையாது.

இதையும் படியுங்கள்:
குறைந்த பிரீமியம்.. அதிக பாதுகாப்பு! நிபுணர்கள் பரிந்துரைக்கும் 'அந்த' ஒரு காப்பீடு... அது எது?
Dangerous Apps

பாதுகாப்பு!

உங்கள் போனில் உள்ள செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று, எந்தெந்தச் செயலிகள் என்னென்ன அனுமதிகளைப் பெற்றிருக்கின்றன என்பதைச் சோதித்துப் பார்ப்பது அவசியமாகும். உதாரணத்திற்கு ஒரு கால்குலேட்டர் செயலிக்கு உங்கள் கேமராவை இயக்கும் அனுமதி தேவையில்லை. இப்படித் தேவைக்கதிகமான அனுமதிகளைக் கேட்கும் செயலிகளை உடனே நீக்குவது நல்லது. புதிதாக ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு, அதன் விதிமுறைகளை முழுமையாகப் படித்துப் பார்ப்பது புத்திசாலித்தனம்.

தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக உருவாக்கப்பட்டதே தவிர, நம்மை அடிமைப்படுத்துவதற்காக அல்ல. விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே நம்முடைய தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com