
தற்காலத்தில் நமக்கு எப்போது பணம் தேவைப்பட்டாலும் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுத்துப் பயன்படுத்துகிறோம். ஒரு வங்கியிலிருக்கும் நமது பணத்தை, பிற வங்கி ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தியும் பணம் எடுக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. தற்போது நாம் பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரம் 1967 ஆம் ஆண்டில் ஜான் ஷெப்பர்ட் பாரான் (John Adrian Shepherd Barron) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வரலாறைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளுவோம்.
ஜான் ஷெப்பர்ட் பாரான் என்பவர் 23 ஜீன் 1925 அன்று ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த வில்பிரெட் பாரான் என்பவருக்கும் டோரத்திக்கும் தற்போதைய மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்கில் பிறந்தவர். ஜான் ஷெப்பர்ட் பாரான் இங்கிலாந்தின் ஸ்டேதவ் பள்ளியிலும் எடின்பரோ பல்கலைக்கழகத்திலும் பின்னர் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிடி கல்லூரியிலும் படித்தவர். டி லா ரூ (De La Rue) என்ற அச்சு இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
1960 ஆம் ஆண்டில் ஒரு சனிக்கிழமை மாலை வேளை, செலவிற்குப் பணம் எடுக்க வங்கிக்குச் சென்றார். ஆனால் வங்கியின் வாடிக்கையாளர் சேவை நேரம் முடிந்து விட்டதால் பணம் தர முடியாது என்று வங்கி நிர்வாகத்தினர் கைவிரித்து விட்டார்கள். தனக்குச் சொந்தமான பணத்தை தேவைப்படும் போது எடுக்க முடியவில்லையே என்ற மனஉளைச்சலுடன் சிந்தித்தவாறே வெளியேறினார். வீட்டிற்குச் செல்லும் வழியில் காசைப் போட்டால் சாக்லெட் தரும் இயந்திரம் அவர் பார்வையில் பட்டது. இதுபோல பணம் எடுக்க ஒரு இயந்திரத்தை நாம் வடிவமைத்தால் என்ன என்ற எண்ணம் அவர் மனதில் அப்போது தோன்றியது. இதுபற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவரின் மனதில் ஒருநாள் ஏதாவது ஒரு பொருளைச் செலுத்தி அதன் மூலமாக சாக்லெட்டிற்கு பதிலாக பணம் எடுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. தன் எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கத் தொடங்கினார்.
பார்க்லேஸ் வங்கியின் முதன்மைப் பொது மேலாளரை 1965 ஆம் ஆண்டில் ஒருநாள் சந்திக்கச் சென்றார். அவரிடம் தங்கள் வங்கியின் காசோலையை ஒரு இயந்திரத்தில் செலுத்தினால் எந்த நேரமும் அதற்குப் பணம் கிடைக்கும் இயந்திரத்தை வடிவமைத்திருப்பதாகத் தெரிவித்தார். பிறகொருநாள் காசோலையை ஒரு துவாரத்தில் செலுத்தினால் அதற்கு பத்து பவுண்ட் பணம் தரும் அந்த இயந்திரத்தை விளக்கிக் காட்டினார். 27 ஜீன் 1967 அன்று இவர் உருவாக்கிக் காட்டிய ஏடிஎம் இயந்திரம் இங்கிலாந்தில் லண்டனில் என்ஃபில்ட் நகரத்தில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் பொருத்தப்பட்டது. முதன் முதலாக ரெக் வார்னே (Reg Varney) என்ற தொலைக்காட்சி நடிகர் தனது காசோலையை அந்த இயந்திரத்தில் செலுத்தி 10 பவுண்ட் பணம் எடுத்தார்.
வங்கி நிர்வாகம் தனது வாடிக்கையாளர்களுக்கு PIN என்ற ஆறு இலக்க ரகசிய எண்ணை வழங்கியது. காசோலையை இயந்திரத்தில் செலுத்தி ரகசிய எண்ணை அழுத்தினால் அவை சரிபார்க்கப்பட்டு 10 பவுண்ட் பணம் கிடைத்தது. அக்காலத்தில் 10 பவுண்ட பணம் ஒருவார செலவிற்குப் போதுமான தொகையாக இருந்தது.
ஜான் ஷெப்பர்ட் பாரான் உருவாக்கிய இந்த ஏடிஎம் இயந்திரமானது தொடக்கத்தில் DACS (De La Rue Automatic Cash System) என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்த இயந்திரத்தின் பெயரானது Automated Teller Machine (ATM) அதாவது ஏடிஎம் என்று மாற்றி அமைக்கப்பட்டது.
தொடக்க காலத்தில் இத்தகைய இயந்திரங்களின் மூலம் சில பிரச்சினைகள் உருவாகின. பின்னர் அவை மெல்ல மெல்ல சரி செய்யப்பட்டன. இதன் பின்னர் பாரான் ஆறு இலக்க ரகசிய எண்ணை தற்போது பயன்பாட்டில் உள்ள நான்கு இலக்க ரகசிய எண்ணாக மாற்றினார். ஜான் ஷெப்பர்ட் பாரான் 15 மே 2010 அன்று ஸ்காட்லாந்தில் உள்ள ரெய்மோர் மருத்துவமனையில் தனது 84 வது வயதில் காலமானார்.
தற்காலத்தில் உலகம் முழுக்க பல மில்லியன் ஏடிஎம் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் நாம் நமது பணத்தை எடுக்க முடிகிறது.