
தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வேகமாக வளர்ந்துள்ளதோ, அதே அளவுக்கு மோசடி செய்பவரும் தங்களது திறன்களை மேம்படுத்தி மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவில் இப்போது சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகள் மூலமாக நடக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற மோசடிகளில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் தெரியுமா? ஒருவேளை மோசடியில் பாதிக்கப்பட்டால் எவ்வாறு புகார் அளிக்க வேண்டும்? வாருங்கள் இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்திய அரசாங்கமும் தொலைதொடர்பு துறையும் இணைந்து இணையம் வழியான மோசடிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். முதலாவதாக ஸ்பூஃப் இன்கமிங் சர்வதேச அமைப்பு, வெளிநாட்டு எண்களில் இருந்து வரும் அழைப்புகளைக் கண்டறிந்து தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகும். இதன் மூலமாக டிஜிட்டல் முறையில் நடக்கும் மோசடிகளைத் தடுக்க முடியும்.
அடுத்ததாக, சமீபத்தில் வெளியான www.sancharsaathi.gov.in இணையதளம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் மோசடி தொடர்பான புகார்களை எளிதில் தெரிவிக்கலாம். யாரேனும் மோசடி செய்வதாக நீங்கள் சந்தேகத்தால் நேரடியாக இந்த இணையதளத்திற்கு சென்று புகார் அளிக்க முடியும். அல்லது நேரடியாக 1909 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்தே, மெசேஜ் மூலமாகவே புகார் அளிக்கலாம்.
டிஜிட்டல் மோசடிகளை எவ்வாறு அடையாளம் காணலாம்?
உங்களுக்கு வெளிநாடுகளில் சொந்த பந்தம் இல்லை என்றால், சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். சில சமயங்களில் அரசு அதிகாரி, காவல்துறை போன்ற பெயர்களைப் பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சிப்பார்கள். சமீபத்தில் இதுபோன்ற மோசடிகள் அதிகமாக நடக்கின்றன. யாரேனும் அழைப்பு விடுத்து உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டு போன்றவற்றைக் கேட்டால் அவர்களை நம்பாதீர்கள். உங்களுடைய தனிப்பட்ட தகவல்களைத் தேவையில்லாமல் யாருடனும் பகிர வேண்டாம். ஏதோ ஒரு பொய்யைக் கூறி உங்களிடம் பணம் அனுப்பச் சொன்னால் அவர்கள் நிச்சயமாக மோசடிக்காரர்களாகத்தான் இருப்பார்கள்.
டிஜிட்டல் மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் முதலில் அதுகுறித்த தெளிவைப் பெறுவது அவசியம். தேவையில்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளைத் தவிர்ப்பது நல்லது. உங்களது தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிராதீர்கள். சமூக ஊடகங்களில் பழகும் நபர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். உங்கள் ஸ்மார்ட் போன் கணினி போன்றவற்றை ஸ்ட்ராங்கான பாஸ்வேர்டு பயன்படுத்தி பாதுகாப்பது நல்லது.
இவற்றை நீங்கள் முறையாக கடைப்பிடித்தாலே, இணையம் வழியாக நடக்கும் மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும். இத்துடன் இந்தத் தகவல்களை உங்களுக்குத் தெரிந்த நபர்களுக்கும் பகிருங்கள்.