மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனைக்கு வழிகாட்டிய குட்டிப் பறவை!

Japan bullet train
Japan bullet train

ன்று உலகின் பல நாடுகளில் அதிவேக புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு பிள்ளையார் சுழி போட்டது ஜப்பான் நாடுதான். 1964ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் முதன் முதலாக உலகின் அதிவேக புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டது. டோக்கியோவில் இருந்து ஒசாகா நகரத்துக்கு புல்லட் ரயில்கள் பயணிகள் போக்கு வரத்திற்கு இயக்கப்பட்டது. சாதாரண ரயில்கள் இயக்கத்தால் நேர விரயம் ஏற்பட்டு வந்த நிலையில், புல்லட் ரயில் சேவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஜப்பானின் அதிவேக ரயிலின் பெயர் 'தி ஜப்பானீஸ் ஷிங்கான்'. இதுவே பின்னர் 'புல்லட் ரயில்' என்று அழைக்கப்பட்டது. இந்த ரயில் ஆரம்பத்தில் மணிக்கு 186 கிமீ வேகத்தில் சென்றது.

1864 ம் ஆண்டு டோக்கியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள வந்த வெளிநாட்டினர் பயணம் செய்யத்தான் இந்த புல்லட் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஜப்பானின் ஷிங்கன்சென் E-5 தொடர் புல்லட் ரயிலின் முன் பகுதி 15 மீட்டர் நீளம் கொண்டது. இந்த மூக்கு போன்ற பகுதிதான் புல்லட் ரயிலின் சிறப்பு. மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயில்களின் பயணம் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

புல்லட் ரயில் என்பது நவீன பொறியியலின் ஒரு வரப்பிரசாதமாகும். இதில் ஒவ்வொரு ஜப்பானியரும் பெருமை கொள்கின்றனர். ஆனால் அவை மூடப்பட வேண்டும் என்று ஒரு காலத்தில் கோரிக்கை விடப்பட்டது என்பது தெரியுமா?

அச்சமயம் ஒரு பறவை அவைகளுக்கு புதிய வாழ்க்கையை கொடுத்தது என்பது ஒரு சுவாரஸ்யமான கதை...

515 கி.மீ. நீளமுள்ள டோகைடோ ஷிங்கன்சென் உலகின் பரபரப்பான அதிவேக ரயில் பாதையாகும். இது 1964-ல் திறக்கப்பட்டதிலிருந்து பல பில்லியன் பயணிகளைக் கொண்டு சென்றிருக்கிறது. ஜப்பானில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஒரு மதிப்பீட்டின்படி இங்கு தினமும் 64 மில்லியன் மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். உலகின் வேறு எந்த நாட்டையும் ஒப்பிடும்போது இதுவே அதிக எண்ணிக்கையாகும்.

ஆரம்பத்தில் இந்த ரயில்களின் வடிவமைப்பில் சிக்கல் இருந்தது. ரயில் சுரங்கப்பாதையில் இருந்து வெளியே வந்தபோது, மக்கள் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு சத்தம் எழுப்பியது. இந்த ரயில் செல்லும் இடத்திற்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு அதன் சத்தத்தை சகித்துக்கொள்வது கடினமாக இருந்தது. இவ்வளவு சத்தத்திற்கான காரணம் விரைவில் கண்டு பிடிக்கப்பட்டது. ரயில் சுரங்கப்பாதையில் இருந்து வெளியே வரும்போது, மூடிய இடத்தின் காரணமாக காற்றை முன்னோக்கி தள்ளுகிறது. இது காற்றழுத்தத்தை உருவாக்குகிறது. துப்பாக்கியிலிருந்து ஒரு தோட்டாவைப் போல ரயில் சுரங்கப்பாதையிலிருந்து வெளியே வரும்போது, 70 டெசிபலுக்கு மேல் சத்தம் உருவாகி, 400 மீட்டர் தொலைவுக்குள் வசிக்கும் மக்களை அனைத்து திசைகளிலும் பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டது.

இரயிலின் அந்த சத்தத்திற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதற்கு எப்படி தீர்வு காண்பது என்பதுதான் பிரச்னை. சத்தத்தைக் குறைக்கும் வகையில் ரயிலின் வடிவத்தை மறுவடிவமைப்பு செய்யும் சவாலை பொறியாளர்கள் எதிர்கொண்டனர்.

ஜப்பானிய ரயில்வேயின் தொழில்நுட்ப மேம்பாட்டுத் துறையின் பொது மேலாளரும் பொறியாளருமான எய்ஜி நகாட்சு என்பவர் இயற்கையிடம் இதற்கான பதில்களைத் தேட தொடங்கினார். நகட்சு தனது பறவைகளைப் பார்த்த அனுபவத்திலிருந்து மீன்கொத்திப்பறவையை (kingfisher bird) நினைவு கூர்ந்தார்.

கிங்ஃபிஷர் என்பது ஒரு தண்ணீர் துளி விழும் வேகத்தில் இரையை வேட்டையாட தண்ணீருக்குள் குதிக்கும் பறவை. அதன் தலை மற்றும் மூக்கின் (அலகு) வடிவமே அந்த பறவை தண்ணீரில் மிகவும் வேகமாக மீனை பிடிக்க அனுமதிக்கிறது. இம்மூக்கின் வடிவமைப்பு ஜப்பானிய பொறியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. இதன் மூக்கு முன்புறம் குறுகலாகவும் பின்புறம் அகலமாகவும் இருக்கும். மேலும் மீன்கொத்தி பறவையானது நீரில் இறங்கி மீனைக் கொத்தும் போது, துளியும் ஓசையின்றி கொத்திச் செல்லும் தன்மை கொண்டது; இதுவும் அந்த மூக்கின் அமைப்பினால்தான் என்பதையும் புரிந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
ரோபோக்கள் உலகை கைப்பற்றினால் என்ன ஆகும்? 
Japan bullet train

ஜப்பானிய பொறியாளர்களின் இந்த முயற்சி வெற்றி பெற்றது. எய்ஜி நகாட்சு புல்லட் ரயிலின் முன் பகுதியை கிங்ஃபிஷரின் மூக்கைப் போல வடிவமைத்தார். இது சத்தத்தை குறைப்பதில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் ரயிலில் எரிபொருள் பயன்பாட்டையும் குறைத்தது. வடிவமைப்பை மாற்றிய பிறகு, ரயில் இப்போது மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். மற்றும் அரசாங்கம் நிர்ணயித்த கடுமையான இரைச்சல் தரத்தை பூர்த்தி செய்வதிலும் வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு, இயற்கையிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று நகாட்சு நம்பினார்.

தொழில் புரட்சியில் இந்த புல்லட் ரயில் வடிவமைப்பு ஒரு முன்னோடியாக திகழ்ந்தது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பன்மடங்கு உயர்ந்தது. இதையடுத்து புல்லட் ரயில் சேவையானது நாடு முழுவதுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

தொடக்க காலத்தில் 515 கி.மீட்டர்கள் மட்டுமே புல்லட் ரயில் மூலமாக இணைக்கப்பட்டிருந்தது. ஜப்பான் ரயில்வேயின் புள்ளிவிபரப்படி, 1964 இல் முதன்முதலில் தொடங்கப்பட்டது, ஷிங்கன்சென் நெட்வொர்க் எந்தப் பயணிகளின் உயிரிழப்புகளையும் அல்லது காயங்களையும் ஏற்படுத்திய ஒரு விபத்தை சந்தித்ததில்லை. ரயில்கள் சராசரியாக 0.2 நிமிடங்கள் தாமதத்துடன் மணிக்கு 285 கிலோமீட்டர் (177 மைல்) வேகத்தில் பயணிக்க முடியும்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம்:

2026ஆம் ஆண்டுக்குள், தெற்கு குஜராத்தின் சூரத் மற்றும் பிலிமோரா இடையே முதல் கட்டமாக புல்லட் ரயில் இயக்கத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் செப்டம்பர் 2017-ல் தொடங்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com