கணினித் தொழில்நுட்பத்தில் தினந்தோறும் புதுப்புது விஷயங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. சமீபத்திய ஆச்சரியம் ஏஐ தொழில்நுட்பம். தற்காலத்தில் ஏஐ என்ற சொல் எல்லாத்துறைகளிலும் பரவிவிட்டது. AI என்பது Artificial Intelligence என்பதன் சுருக்கமாகும்.
சமீபத்தில் வாட்ஸ்அப்புடன் Meta AI இணைந்து செயல்படுகிறது. இதில் பல வியப்பான அம்சங்கள் நிறைந்துள்ளன. இதற்குள் நுழைந்து இதைப் பயன்படுத்துவதும் மிகவும் சுலபம். Meta AI ஐ பயன்படுத்தி உங்களுக்கு வேண்டிய தகவல்களை நொடிப்பொழுதில் பெற்றுக் கொள்ளலாம்.
முன்பெல்லாம் ஒரு தகவல் வேண்டுமென்றால் நூலகத்திற்குச் சென்று தேட வேண்டும். நமக்கான தகவல்கள் எப்போது கிடைக்கும் என்பது தெரியாத நிலை இருந்து வந்தது. கூகுள் வரவிற்குப் பின்னர் தகவல்களைத் தேடுதல் என்பது மிகவும் சுலபமானது. தேவையான தகவல்களை நொடிப்பொழுதில் பெற்றுக் கொள்ள முடிந்தது. வாட்ஸ்ஆப்பில் உள்ள Meta AI எனும் வசதியைப் பயன்படுத்தி தேவையான தகவல்களை வெகு எளிதாகப் பெறலாம். இதை எப்படிச் செய்வது என்பதைப் பார்ப்போம்.
வாட்ஸ்ஆப்பைத் திறந்து கொள்ளுங்கள். உள்ளே சென்றதும் மேற்பகுதியில் Ask Meta AI or Search என்ற ஒரு பகுதி காணப்படும். விரலைத் தொட்டு அந்த பகுதியில் நீங்கள் பெற விரும்பும் தகவல்களுக்கான குறிப்புகளை டைப் செய்யுங்கள். உதாரணமாக Describe about mamallapuram என்று டைப் செய்து அருகில் உள்ள பச்சை அம்புக்குறியைத் தொடுங்கள். அடுத்த ஓரிரு நொடிகளில் மாமல்லபுரம் பற்றிய தகவல்களை நீங்கள் மொபைல் திரையில் பார்க்கலாம்.
மொபைல் திரையில் தெரியும் இந்த தகவல்களின் மீது தொட்டால் அவை ஹைலைட் ஆகும். பிறகு திரையின் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளைத் தொட்டால் அதில் வரும் Copy ஆஃப்ஷனைத் தேர்வு செய்யுங்கள். தகவல்களை காப்பி செய்து பின்னர் மொபைல் மூலம் இணையத்தில் நுழைந்து Google Translate தளத்திற்குச் சென்று தகவல்களை Paste செய்யுங்கள்.
தகவல்கள் சுலபமாக தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும். இந்த தகவல்களை உங்களுக்குத் தேவையான விதத்தில் எடிட் செய்து உபயோகிக்கலாம். இதைச் செய்ய அதிகபட்சமாக பத்து நிமிடங்களே ஆகும் என்பது வியப்பான விஷயம்.
Meta AI ல் மற்றொரு நம்பமுடியாத வியப்பான அம்சம் உள்ளது. அது நீங்கள் நினைக்கும் விஷயத்தை ஓவியமாக ஒரு நொடிப்பொழுதில் வரைந்து பெற முடியும். தற்காலத்தில் சில தமிழ் பத்திரிகைகள் இதன் மூலம் ஓவியங்களை வரைந்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
Ask Meta AI or Search என்ற ஒரு பகுதியில் உங்களுக்குத் தேவையான ஓவியத்தைப் பற்றிய குறிப்புகளை உள்ளிட வேண்டும்.
25 வயதுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் 60 வயதான தன் தாயாருடன் வீட்டில் பேசிக் கொண்டிருப்பது போல ஒரு ஓவியம் ஒரு கதைக்குத் தேவை. இதை Draw a girl, 25 years, tamilnadu, talking with her mother, 60 years in her home என்று உள்ளீடு செய்தால் முப்பதே விநாடிகளில் ஏஐ ஓவியத்தை வரைந்து கொடுத்துவிடும்.
இந்த ஓவியத்தைத் தேர்வு செய்து திரையில் வலது மேற்பகுதியில் உள்ள மூன்று புள்ளிகளைத் தேர்வு செய்தால் Share என்ற ஒரு ஆப்ஷன் வரும். அதன் மூலம் உங்கள் மின்னஞ்சலைத் திறந்து இந்த ஓவியத்தை இணைத்து அனுப்பி பின்னர் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.
இந்த AI வசதியை வாட்ஸ்ஆப்பில் சுலபமாக பயன்படுத்த மற்றொரு வசதியும் உள்ளது. வாட்ஸ்ஆப் திரையில் நீலநிறத்தில் ஒரு வளையம் காணப்படும். அதைத் தொட்டால் Message என்ற ஒரு பகுதி வரும். இதைப் பயன்படுத்தியும் நீங்கள் வேண்டிய தகவல்களையும், ஓவியங்களையும் நொடிப் பொழுதில் பெறலாம். இதில் இன்னும் பல வசதிகள் உள்ளன. இதை அறிந்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தொழில்நுட்பம் பத்திரிகையாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.