ஸ்மார்ட் வாட்சை போல உடல்நலத்தை கண்காணிக்கும் ஸ்மார்ட் மோதிரம் என்ற ஓரா ரிங் (The Oura Ring) தூக்கத்தின் தரம், இதயத்துடிப்பு, உடல் வெப்பநிலை மற்றும் செயல்பாடுகளை மிகவும் துல்லியமாக கண்காணிக்கிறது. மோதிர வடிவில் உள்ள சிறிய மின்னணுக்கருவியான ஸ்மார்ட் ரிங் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் பிட்னஸ் பேண்ட் போல சென்சார்கள் பொருத்தப்பட்டு இருப்பதோடு மிகவும் சிறியதாகவும், எடை குறைவாகவும், அணிவதற்கு எளிதாகவும் உள்ள இந்த மோதிரம் நமது உடல்நலம் மற்றும் அன்றாட செயல்பாடுகளை கண்காணிக்கிறது.
உடல் நலக் கண்காணிப்பு:
ஓரா ரிங் தனிப்பட்ட உடல்நல உதவியாளரைப் போல செயல்பட்டு ஒருவருடைய இதயத்துடிப்பு, தூக்கம், வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு (O2), மன அழுத்தம் போன்ற முக்கிய உடல்நல தகவல்களை துல்லியமாக கண்காணிப்பதோடு ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தொடர்ந்து அளிக்கிறது.
செயல்பாட்டை கண்காணித்தல்:
தினசரி நீங்கள் பயணித்த தூரம், நடைகளின் எண்ணிக்கை, எரித்த கலோரிகள் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிப்பதோடு பல மாடல்களில் அவரவர் செய்யும் உடற்பயிற்சிகளை தானாகவே கண்டறிந்து பதிவு செய்யும் சிறப்பம்சம் கொண்டதாக இந்த ரிங் உள்ளது.
அறிவிப்புகள்:
ஸ்மார்ட் ரிங்கில் டிஸ்ப்ளே இல்லாததால் அழைப்புகள், குறுஞ்செய்திகள், செயலிகளின் அறிவிப்புகளை சிறிய அதிர்வுகள் (vibrations) மூலமும் சிறிய எல்.இ.டி விளக்கு மூலமும் இந்த ரிங் தெரிவிப்பதால் தொடர்ந்து போனை பார்க்காமல் தேவையான தகவல்களைப் பெற உதவிகரமாக இருக்கிறது.
கான்டெக்ட்லெஸ் பேமெண்ட்ஸ்:
ஸ்மார்ட் ரிங்கில் பேமென்ட் டெர்மினலைத் தட்டினால் பணம் செலுத்த முடியும் என்பதால் அதாவது NFC (Near-Field Communication) தொழில்நுட்பம் உள்ளதால் கிரெடிட் கார்டு டெபிட் கார்டு பயன்படுத்தாமல் பணத்தை செலுத்த முடியும்.
நீண்ட ஆயுள் பேட்டரி:
குறைந்த ஆற்றலில் இயங்கும் சென்சார்களை பயன்படுத்துவதாலும் டிஸ்ப்ளே இல்லாததாலும் ஸ்மார்ட் ரிங்கில் ஒருமுறை சார்ஜ் செய்தால் பல நாட்களுக்கு இதனைப் பயன்படுத்த முடியும்.
பெரும்பாலான வல்லுநர்கள் மற்றும் பயனாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட் (oura ring) அமேசானில் 215 அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.18,000) விற்பனையாகிறது. விரலில் உள்ள தமனிகளில் இருந்து துடிப்பை நேரடியாக இந்த ஓரா ரிங் அளவிடுகிறது. எடை குறைவாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு பல்வேறு நிறங்களில் அளவுகளில் கிடைக்கும். உடல்நல ஆலோசகர் போல் செயல்படும் இந்த ஸ்மார்ட் ரிங் மணிக்கட்டில் அணியும் கருவிகளை விட மிகவும் துல்லியமானது என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.