

டாக்டர்கள் என்றாலே வெள்ளை கோட் தான் நம் நினைவிற்கு வரும். ஆனால், அறுவை சிகிச்சை (Operation theater) செய்யும் இடத்தில் மட்டும் ஏன் அவர்கள் பச்சை அல்லது நீல நிற உடைகளை அணிகிறார்கள் என்று எப்போதாவது யோசித்ததுண்டா? அதற்கு பின்பு முக்கியமான அறிவியல் காரணம் ஒன்று உள்ளது. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் போது அதிக நேரம் ரத்தத்தின் சிவப்பு நிறத்தை பார்க்க வேண்டி வரும். இது அவர்களுக்கு கண் சோர்வை ஏற்படுத்தும். அப்போது பச்சை அலல்து நீல நிறத்தை பார்க்கும் போது கண்கள் புத்துணர்ச்சியடையும்.
2. நீண்ட நேரம் சிவப்பு நிறத்தை பார்த்துவிட்டு வெள்ளை நிறத்தை பார்க்கும் போது அங்கே பச்சை நிற நிழல் Illusion தெரியும். இதை After image என்று சொல்வார்கள். இதனால் மருத்துவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படலாம். எனவே, பச்சை அல்லது நிற உடை அணிந்திருக்கும் போது இந்த நிறம் அந்த நிறத்தோடு ஒத்துப்போய்விடும். அதனால் கவனச்சிதறலும் வராது.
3. Colour spectrum ல் சிவப்பு நிறத்திற்கு நேர் எதிரானது பச்சையும், நீல நிறமும் தான். சிவப்பு நிற திசுக்களுக்கு இடையேயான நுணுக்கமான வேறுப்பாடுகளைப் பார்க்க இந்த நிறம் பின்னணியில் இருப்பது மருத்துவர்களுக்கு பெரிதும் உதவும்.
4. பச்சை மற்றும் நீல நிறம் மன அமைதியை தரக்கூடிய நிறங்களாகும். இது மருத்துவருக்கும், நோயாளிக்கும் மனபதற்றத்தை குறைக்க உதவும்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், அறுவை சிகிச்சையின் போது ரத்தத்தின் சிவப்பு நிறத்தால் ஏற்படும் கண் கூச்சத்தைத் தவிர்க்கவும், பார்வையின் துல்லியத்தை அதிகரிக்கவும் மருத்துவர்கள் இந்த நிறங்களை தேர்வு செய்கிறார்கள்.
1914 ஆம் ஆண்டு வரை டாக்டர்கள் வெள்ளை நிற ஆடைகளையே அணிதார்கள். அதற்கு பிறகு இந்த மாற்றத்தை கொண்டு வந்தார்கள். இதற்கான காரணம், வெள்ளை உடையில் ரத்தக் கறை பட்டால் அது பார்ப்பதற்கு மிகவும் பயமுறுத்துவதாகவும், அசுத்தமாகவும் தெரியும். ஆனால் பச்சை அல்லது நீல நிற உடையில் ரத்தக் கறைகள் கருப்பு அல்லது அடர் நிறத்தில் தெரிவதால், அது நோயாளிகளுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ அதிக பதற்றத்தை ஏற்படுத்தாது.
அறுவை சிகிச்சை அறையின் சுவர்களும் கூட பெரும்பாலும் பச்சை அல்லது நீல நிறத்திலேயே பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும். இதுவும் மருத்துவர்களின் கண் சோர்வைக் குறைக்கத்தான்!