Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

Remote Working Girl
Remote Work

தொழில்நுட்ப முன்னேற்றத்தால் நம் வாழ்வில் பல்வேறு விதமான மாற்றங்கள் வந்துள்ளன. இதில் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் தொலைதூர வேலை சார்ந்த துறையும் உள்ளது. கொரோனாவுக்கு முன்பெல்லாம் வேலை என்றாலே அனைவரும் வெளியே சென்றுதான் பார்க்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் கொரோனா காலகட்டம் நம்மால் வீட்டில் இருந்தும் பணிபுரிய முடியும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தது. அதன் பின்னர்தான் தொலைதூர வேலைகள் முன்னேற்றம் காண ஆரம்பித்தன. 

அதிவேக இணையம், கிளவுட் கம்ப்யூட்டிங், வீடியோ கான்பரன்சிங் மற்றும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், தொலைதூர வேலைகள் முன்னேற்றம் காண்பதற்கு வழி வகுத்துள்ளது. இதன் மூலமாக உலகில் நீங்கள் எங்கிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வேலை செய்ய முடியும். இது உற்பத்தித்திறன், செயல்திறன் போன்றவற்றில் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்தது. 

தொலைதூர வேலையானது ஊழியர்களுக்கு Work-life சமநிலையை அடைய வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்ய முடியும் என்பதால், தனிப்பட்ட கடமைகளுக்கு இடமளித்து சுதந்திரமாக வேலை செய்யலாம். மேலும் தங்களுக்கு பிடித்ததுபோல தங்களது வாழ்க்கையை வடிவமைத்து வாழ முடியும். 

அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது எப்படி உற்பத்தித் திறனை அதிகரிக்கும்? என்ற சந்தேகம் பலருக்கு எழலாம். வீட்டிலிருந்தே வேலை பார்க்கும்போது கவனச் சிதறல்கள் குறைவாக இருக்கும் என்பதால், செய்யும் வேலையில் முழு செயல்திறனுடன் கவனமாக இருக்கலாம். மேலும் அலுவலகம் என்ற சிறைப் போன்ற அமைப்பு இல்லாததால், பணியாளர்கள் தங்களுடைய வேலையை சிறப்பாக செய்ய முடியும். 

வீட்டிலிருந்தே வேலை செய்வதால் பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் இருவருக்கும் செலவுகள் சேமிக்கப்படுகிறது. பணியாளர்கள் பயண செலவுகள், அலுவலக உடை மற்றும் உணவுகளை சேமிக்கிறார்கள். அதே நேரத்தில் நிர்வாகமானது அலுவலகத்திற்கான இடம், உட்கட்டமைப்பு போன்றவற்றின் செலவுகளை சேமிக்கிறது. மேலும் இந்த செலவு மேம்பாடு இரு தரப்பினருக்கும் பெரிதளவில் பலனளிக்கிறது. 

தொலைதூர வேலையானது புவியியல் தடைகளை முற்றிலுமாக நீக்குகிறது. அதாவது இந்தியாவில் இருக்கும் ஒரு நபர், உலகில் இருக்கும் எந்த நிறுவனத்திற்கும் வீட்டிலிருந்தே பணிபுரிய முடியும். இதற்காக எந்த சிரமத்தையும் அவர்கள் சந்திக்க வேண்டாம். இதன் மூலமாக உலக அளவில் திறமையான நபர்களைக் கண்டறிந்து வேலை செய்ய வைக்கலாம். நிறுவனங்கள், பணியாள்களின் இருப்பிடத்தை பொருட்படுத்தாமல், குறிப்பிட்ட வேலைகளை செய்யும் நிபுணர்களை நியமிக்கும் வாய்ப்புகள் அதிகமாகிறது. 

இதையும் படியுங்கள்:
Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 
Remote Working Girl

மேலும், தொலைதூர வேலைகளின் எழுச்சியானது சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறைவான பயணங்களால் போக்குவரத்து நெரிசல், காற்று மாசுபாடு மற்றும் கார்பன் வெளியேற்றம் குறைகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக நமது சுற்றுச்சூழலை தூய்மையாக்குகிறது என்றே சொல்லலாம். 

இப்படி பல வழிகளில், வீட்டிலிருந்தே வேலை செய்யும் நடைமுறையானது, தனிநபருக்கும், நிறுவனங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரிதளவில் உதவுகிறது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com