சிக்கன செலவில் மகத்தான குடியிருப்புகள்! எங்கே? யாருக்கு? கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

TN Govt Slum clearance project
TN Govt Slum clearance project

மலேஷியாவின் ‘மைவான்’ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி குடியிருப்புகளைக் கட்டும் முயற்சியில் தமிழக அரசு குடிசை மாற்று வாரியம் ஈடுபட்டிருக்கிறது. அது என்ன மைவான் தொழில் நுட்பம்? பார்ப்போம் வாங்க:

வசிப்பிடம் என்பது ஒரு மனிதரின் அத்தியாவசியத் தேவை. ஆனால், தனக்கென்று சொந்தமாக ஒரு வீட்டை எல்லோராலும் அமைத்துக்கொள்ள முடிவதில்லைதான். பொதுவாகவே வாடகை வீடுகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. ஆனால், சொந்தமுமில்லாமல், வாடகையும் இல்லாமல், சாலையோரமும், நீர்வழித் தடங்களிலும் வசிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டுதான் போகிறது.

இந்த இரண்டாம் வகையினரின் மேம்பாட்டுக்காக குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்காக பாதுகாப்பான வீடுகளை அமைத்துத் தரும் ஏற்பாட்டை தமிழக அரசு பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டப்படி இவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மறு குடியமர்த்தப்படுகிறார்கள்.

நாளாவட்டத்தில் இத்தகைய குடியிருப்புகளின் தேவை அதிகரிக்கவே, புதுப்புது உத்திகளின் மூலம் இத்தகையக் குடியிருப்புகளைக் கட்டும் முயற்சியில் குடிசை மாற்று வாரியம் ஈடுபட்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் மலேஷியாவின் ‘மைவான்’ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்வது.

சென்னை நகரில் மொத்தம் ஏழு இடங்களில், 552 கோடி ரூபாய் செலவில் 4080 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்ட, வாரியம் முடிவு செய்திருக்கிறது. இதன் முதல் கட்டமாக வடசென்னையில் வியாசர்பாடி, கொடுங்கையூர் பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தின் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புகள் மலேசிய நாட்டின் மைவான் தொழில் நுட்பத்தை அடிப்படையாக்க் கொண்டவை.

Mivan Technology
Mivan Technology

அது என்ன மைவான் தொழில்நுட்பம்?

‘அலுமினியம் ஷட்டரிங்’ என்றத் தொழில் நுட்பம் அது. அதாவது, இந்தவகை கட்டடங்களுக்கு ஸ்லாப், பீம், சுவர், தூண்கள், படிக்கட்டு, மாடி, ஜன்னல் என்று எதற்குமே செங்கல் தேவையில்லை. வரைபட உதவியுடன் அனைத்து வேலைகளையும் முன்கூட்டியே திட்டமிட்டு விடுகிறார்கள். 4 மில்லி மீட்டர் மற்றும் 6 மில்லி மீட்டர் கனம் கொண்ட, அலுமினிய பேனல்களை, அதாவது சட்டங்களை, ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து அடுக்குகிறார்கள். இந்த அலுமினிய பலகைகளுக்கிடையே சிமின்ட் கலவையை ஊற்றுகிறார்கள். சுவர்களுக்கு இரண்டு நாட்களும், தளத்திற்கு ஒரு வாரமும் கால அவகாசம் கொடுத்து, சிமின்ட் கலவை, இறுகிக்கொள்ள வழி செய்கிறார்கள். இந்த கால அவகாசத்தில் கட்டடத்தின் பிற பணிகளை மேற்கொள்கிறார்கள்.

இந்தப் பணிக்கு கட்டட தொழில்நுட்பம் தெரிந்த பொறியாளர் தேவையில்லை. குறைந்த எண்ணிக்கையிலான கட்டுமானத் தொழிலாளிகளை வைத்துக்கொண்டே கட்டடத்தைக் கட்ட முடியும். இதனால் செலவும் வெகுவாகக் குறையும்.இரண்டு ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை ஒரே ஆண்டில் முடிக்கலாம். இதனால் நேரமும் மிச்சம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளை எடிட் செய்து பெற்றுக்கொள்ள முடியுமா? மனித இனத்தை அச்சுறுத்தும் ஆராய்ச்சி!
TN Govt Slum clearance project

சிமின்ட் கலவையை ஊற்றி வைக்கும் அலுமினியச் சட்டங்களைக் குறைந்த பட்சம் 250 முறையாவது மீண்டும், மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகைய சிமின்ட் சுவர்களில் விரிசல் ஏற்படாது என்பது நிம்மதியான தகவல்.

அதுமட்டுமல்லாமல் கட்டடம் கட்டுவதற்கு மரம், ப்ளைவுட் எதுவும் தேவைப்படாத்தால், மர பயன்பாடு முற்றிலும் குறையும்.

நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்த கட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாது; இந்தக் கட்டுமான உத்தியால், கட்டட கழிவுகளும் இல்லை என்பவையும் குறிப்பிடத்தக்கது.

மைவான் தொழில் நுட்பத்தால் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும் 14 லட்சம் ரூபாய் செலவாகிறது.

புதிதாகக் கட்டப்படவுள்ள குடியிருப்புகளில் ஒரு பிளாக்கிற்கு நான்கு லிப்ட்டுகள் அமைக்கவும் திட்டம் இருக்கிறது. மின்சாரம் தடைபட்டால், லிப்ட் மட்டுமாவது இயங்குவதற்கு ஜெனரேட்டர்கள் அமைக்கப் போகிறார்கள். இந்தக் குடியிருப்பில், இடிதாங்கிகள் மற்றும் தீயை எளிதில் அணைக்கும் வகையில் 15 மாடிகள் வரை தீயணைப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் தனியே குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்படவிருக்கின்றன. குடியிருப்பு வளாகத்தில் பிரமாண்ட பூங்கா அமைக்கவும் உத்தேசித்திருக்கிறார்கள்.

மிகவும் அதிசயப்பட வைக்கும் வகைக் குடியிருப்புகள் கோடிக் கணக்கில் கொட்டி உருவாகும் தனியார் குடியிருப்புகளுக்கு ஒரு சவாலாகவே இருக்கும் என்று தோன்றுகிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com