சந்திரயான் 3 விண்கலத்தின் இரண்டு முக்கிய தகவல்கள் வெளியாகின!

Chandrayan 3 on moon
Chandrayan 3
Published on

சந்திரயான் 3 விண்கலம் ஏவும்போது நான்கு நொடிகள் தாமதமாக கிளம்பிய குழப்பத்திற்கு தற்போது காரணம் வெளியாகியுள்ளது. அதேபோல் நிலவில் நீர் இருக்கிறதா? என்பதை பற்றிய சுவாரசிய தகவலும் வெளியாகியுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரோ, விண்கலத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பி, நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறக்கி சாதனை படைத்தது. ஆனால், இந்த விண்கலம் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டப்படி கிளம்பவில்லை, நான்கு நொடிகள் தாமதமாகவே கிளம்பியது. இதுகுறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தான் சந்திரயான் 3 விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. அதற்காக பல முன்னேற்பாடுகளும், திட்டங்களும் சரியாக போடப்பட்டன. அடுத்த ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்துக்கொள்ளும் வகையில்  இஸ்ரோ ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கண்காணித்து வந்தது.

அதன்படி எப்போது, எந்த நேரத்தில் ராக்கெட்டை ஏவ வேண்டும் என்று இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டனர். சரியாக ராக்கெட்டை ஏவுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் ஒரு மிகப்பெரிய பிரச்சனை கண்டறியப்பட்டது. அதனைக் கண்டுபிடித்தது, இஸ்ரோவின் Collision Avoidance Analysis என்ற தொழில்நுட்பம் ஆகும். அதாவது, திட்டமிட்டப்படி ராக்கெட்டை விண்வெளியில் ஏவியிருந்தால், விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் கழிவு பொருள் ஒன்று இந்த ராக்கெட் மீது மோத அதிகமான வாய்ப்பு இருப்பதாக அந்தத் தொழில்நுட்பம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அப்படி அது ராக்கெட் மீது மோதினால், ராக்கெட்டின் உள்ளே இருக்கும் விண்கலமும் சுக்கு நூறாக உடைந்து போக அதிக வாய்ப்புள்ளது என்பதும் இஸ்ரோ ஆராய்ச்சியார்களுக்குத் தெரியவந்தது. இதனால், விஞ்ஞானிகள் அனைவரும் ஒரு நிமிடத்தில் என்ன செய்வது என்றறியாமல் பதறிப்போய் விட்டார்கள்.

ஆனால் இஸ்ரோவிடம் இருந்த இந்தத் தொழில்நுட்பம் இதற்கான மாற்று வழியையும் உடனே வழங்கியது. அதன்படி தற்போது கிளம்பத் திட்டமிடப்பட்ட நொடியை தாண்டி நான்கு நொடிகளுக்குப் பிறகு ராக்கெட் கிளம்பினால் விண்வெளியில் பறந்து கொண்டிருக்கும் இந்தக் கழிவை தவிர்த்து விட்டு, பயணத்தைத் தொடங்கலாம் என்ற வழிமுறைகளை விஞ்ஞானிகளுக்குக் காட்டியது. அதன்படி இஸ்ரோ விஞ்ஞானிகள் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, ராக்கெட் பறப்பதற்கான பட்டனை அழுத்தும் நொடியை நான்கு நொடிகளுக்குப் பிறகு அழுத்தி உள்ளார்கள்.

இதனால் விண்வெளியில் கழிவுப் பொருட்களுடன் மோதி மிகப் பெரிய அளவு விபத்து ஏற்பட்டிருக்க இருந்த சம்பவம் தவிர்க்கப்பட்டது. கடைசி நொடியில் விஞ்ஞானிகள் செய்த இந்த மாற்றம் இந்தியாவிற்கே மிகப்பெரிய பெருமையை தேடித்தந்தது என்றே சொல்லலாம். இந்த சுவாரசிய நிகழ்வை இப்போதுதான் விஞ்ஞானிகள் பகிர்ந்துள்ளனர்.

அதேபோல், மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது, நிலவின் துருவ பகுதியில், 5 முதல் 8 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளனர். அந்தத் தண்ணீர் பனிக்கட்டியாக இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், வடதுருவத்தில் இருக்கும் தண்ணீரின் அளவானது தென் துருவத்தில் இருக்கும் தண்ணீரின் அளவை காட்டிலும் இரு மடங்காக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
சூரியனையே சீண்டிப்பார்த்த நம் விஞ்ஞானிகள்!
Chandrayan 3 on moon

சந்திரயான் 3 கொடுத்தத் தரவுகளின் அடிப்படையில், ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள், யூனிவர்சிட்டி ஆப் சதன் கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள், ஜெட் புரபஷனல் லேப் ஆராய்ச்சியாளர்கள் , ஐஐஎம் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் இணைந்து, இதுத்தொடர்பாக ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்வறிக்கையானது, எதிர்காலத்தில் நிலவில் ஆய்வு செய்ய விண்கலன்கள்  தரையிறங்கும் போதும், சரியான இடங்களை தேர்ந்தெடுப்பதை ஆராய்ந்து வகைப்படுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com