
இன்றைய டிஜிட்டல் உலகில் வாட்ஸ்அப் என்பது தவிர்க்க முடியாத தகவல் தொடர்பு செயலியாகி விட்டது. தனிப்பட்ட உரையாடல்கள் முதல் அலுவலக வேலைகள், கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்கள் வரை அனைத்திற்கும் வாட்ஸ்அப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, பலர் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைப் பயன்பாட்டிற்கும், தொழில் அல்லது அலுவலகப் பயன்பாட்டிற்கும் தனித்தனி வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.
தனிப்பட்ட செய்திகள் மற்றும் குடும்ப நண்பர்களுடனான உரையாடல்களுக்கும், வாட்ஸ்அப் பிசினஸ் போன்ற தொழில் சார்ந்த தகவல் பரிமாற்றங்களுக்கும் என வெவ்வேறு பயன்பாடுகளுக்குத் தனித்தனி கணக்குகள் இருப்பது வசதியானது. ஆனால், இப்படி இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்த வேண்டுமென்றால், இரண்டு வெவ்வேறு ஸ்மார்ட்போன்கள் தேவைப்படும் என்ற எண்ணம் பலரிடமிருந்தது. இது சிலருக்குச் சிரமமாக இருந்தது.
இதற்கு முன்பு, சிலர் ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்தச் சில third-party செயலிகளை நாடினர். ஆனால், தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் ஒரே வாட்ஸ்அப் செயலிக்குள்ளேயே இரண்டு வெவ்வேறு கணக்குகளைச் சேர்த்துப் பயன்படுத்த அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது. இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது.
இந்த புதிய வசதியைப் பயன்படுத்துவது மிக எளிது. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப் செயலியைத் திறக்கவும். மேலே வலதுபுறத்தில் காணப்படும் மூன்று புள்ளிகள் ஐகானைக் கிளிக் செய்யவும். தோன்றும் மெனுவில் Settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து வரும் திரையில் Account என்ற விருப்பத்தைத் தட்டவும். அங்கே உங்களுக்கு Add Account என்றொரு ஆப்ஷன் புதிதாகத் தோன்றியிருக்கும்.
இந்த Add Account விருப்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் இரண்டாவது வாட்ஸ்அப் எண்ணை உள்ளீடு செய்து, தேவையான சரிபார்ப்புகளை முடித்த பிறகு, ஒரே வாட்ஸ்அப் செயலி வழியாகவே உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை கணக்குகளுக்கு இடையே எளிதாக மாறி மாறிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் இரண்டு போன்கள் வைக்கும் சிரமமும், மூன்றாம் தரப்பு செயலிகளைப் பயன்படுத்தும் தேவையும் இருக்காது. வாட்ஸ்அப் பயனர்களுக்கு இது ஒரு பயனுள்ள வசதி.