
இஸ்ரேல் - காசா போர் , ரஷ்யா - உக்ரைன் போர் , இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் ஆகியவற்றில் உலகம் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால் , அமெரிக்கா தன் இருப்பைக் காட்ட , ஏதேனும் செய்ய முயற்சி செய்துக் கொண்டே உள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தம் எதுவும் பலனளிக்காததால் , உலகின் கவனத்தை ஈர்க்க தற்போது கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
மே 21, 2025 அன்று அமெரிக்க விமானப்படையின் குளோபல் ஸ்ட்ரைக் கமாண்டின் ஏர்மேன் குழு, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான (ICBM) மினிட்மேன் III ஐ சோதனை செய்துள்ளது. இந்த சோதனை கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படை தளத்தில் நடத்தப்பட்டது.
இதை அமெரிக்கா, வழக்கமான ஏவுகணை சோதனையின் ஒரு பகுதி என்று கூறினாலும், அமெரிக்கா தனது ஆயுத மார்கெட்டை உயர்த்தவே இந்த சோதனை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. மினிட்மேன் III ஏவுகணையின் முழுப் பெயர் LGM-30G மினிட்மேன்-III. LGM இல் உள்ள L என்பது அமெரிக்க பாதுகாப்புத் துறையின் குறியீடாக உள்ளது.
G என்பது தரைவழி தாக்குதலைக் குறிக்கிறது. M என்பது வழிகாட்டப்பட்ட ஏவுகணையைக் குறிக்கிறது. இந்த ஏவுகணையை இயக்க மூன்று திட உந்துசக்தி ராக்கெட் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ATK M55A1 அதன் முதல் கட்டத்திலும், ATK SR-19 இரண்டாம் கட்டத்திலும், ATK SR-73 எஞ்சின் மூன்றாம் கட்டத்திலும் பயன்படுத்தப்படுகிறது. மினிட்மேன் III ஏவுகணையின் எடை 36 டன் எடை வரை இருக்கிறது.
சோதனையின் போது மினிட்மேன் III ஏவுகணை சுமார் 6760 கி.மீ தூரம் பயணித்துள்ளது. இது தொடர்பான காணொளியையும் அமெரிக்க விமானப்படை வெளியிட்டுள்ளது.
மணிக்கு 24140 கிமீ வேகத்தில் ஏவுகணை பயணித்து ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையில் , மார்ஷல் தீவில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத்தின் ரொனால்ட் ரீகன் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு சோதனை தளத்தை அடைந்தது. மினிட்மேன் III ஏவுகணை 10,000 கி.மீ தூரம் வரை பயணித்து தாக்கும் திறன் கொண்டது. இதன் சிறப்பம்சம், இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் அணு ஆயுதத் தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்டது.
மினிட்மேன் III ஏவுகணையின் சிறப்பு என்னவென்றால், அதில் ஒரே ஒரு மார்க்-21 உயர் நம்பகத்தன்மை கொண்ட மறு நடவடிக்கை வாகனம் பொருத்தப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் திறனை அதிகரிக்கும். கலிபோர்னியாவிலிருந்து உலகின் எந்த நாட்டையும் குறிவைத்துத் இந்த ஏவுகணையின் மூலம் தாக்க முடியும். உலகின் எந்த ஒரு இடமும் இந்த ஏவுகணையின் தாக்குதல் எல்லைக்குள் உள்ளது. இதை இப்போது செயலில் உள்ள எந்த வான் பாதுகாப்பு அமைப்பும் தடுக்க முடியாது.
மினிட்மேன் III போன்ற பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே உள்ளன. அமெரிக்காவைத் தவிர, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், வட கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமும் இத்தகைய ஏவுகணைகள் உள்ளன. ரஷ்யாவிடம் 16 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளன.
சீனா மற்றும் வட கொரியாவிடம் 15 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளும் உள்ளன. பிரான்சிடம் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளன. இந்தியாவிடம் 8 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளன. இந்தியாவின் அக்னி - VI ஏவுகணை 10,000-12,000 கிமீ சென்று தாக்கும் அளவுக்கு வடிவமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.