Google தேடுபொறியில் வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பயனர்களுக்கு தவறான தகவல்களை தொடர்ந்து தெரிவித்து வருவதாக பல சர்ச்சை கருத்துக்கள் வளம் வருகின்றன. அதில் ஒரு பயனருக்கு கற்களை சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லது என AI தொழில்நுட்பம் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தற்போது எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை நாம் அதிகம் கேள்விப்படுகிறோம். பல துறைகளில் இந்தத் தொழில்நுட்பம் கால்தடம் பதிக்கத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு துறையின் போக்கையும் இந்த தொழில்நுட்பம் முற்றிலுமாக மாற்றிவிட்ட நிலையில், கல்வித்துறையிலும் பல மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அவர்களே உருவாக்கி பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதன்படி google-ல் சமீபத்தில் நடந்த I/O 2024 நிகழ்வில், தன் பயனர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கூகுள் தேடுபொறியில் பயனர்கள் AI Overview அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்தது.
இந்த அம்சத்தை பல பயனர்கள் முயற்சித்துப் பார்த்த நிலையில், அது வழங்கிய தவறான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக பீட்சாவில் ஒட்டும் பசையை பயன்படுத்தி சாப்பிடும் படியும், கற்களை சாப்பிடும் படியும் பரிந்துரை செய்தது, சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தை பலர் தங்களின் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு பயனர் கூகுளில் “சீஸ் பீசாவில் ஓட்டுவதில்லை” என கூகுளில் தேடும்போது, அதற்கு இந்த ஏஐ, விஷம் இல்லாத பசையை பயன்படுத்தவும் என பதிலளித்துள்ளது. மற்றொரு பயனர் ஒரு நாளைக்கு எத்தனை கற்களை சாப்பிடலாம்? என கேட்டதற்கு, குறைந்தபட்சம் ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒரு கல்லையாவது சாப்பிடலாம் என்றும், அதில் வைட்டமின்களும் கனிமங்களும் இருப்பதால் செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் பதில் அளித்துள்ளது.
இவ்வாறு தவறான தகவல்களை பயனர்களுக்கு பரிந்துரை செய்யும் இந்த ஏஐ அம்சத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும், அதுவரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், பலர் தங்களது கண்டனக் குரல்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதற்கு பதில் தெரிவித்த கூகுள், இதுபோன்ற பதில்கள் அனைத்தும் புரியாத கேள்விகளுக்கே கொடுக்கப்பட்டுள்ளன என்றும், இந்த தவறு குறைந்த நபர்களுக்கே நடந்துள்ளது என்றும் மழுப்பும்படியான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
இருப்பினும் நெட்டிசன்கள் இணையத்தில், கூகுளின் அந்த ஏஐ அம்சத்தை மோசமாக வறுத்து வருகின்றனர்.