
இந்த ஆண்டு வரும் டிசம்பர் மாதம் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ ஒரு வரலாற்றைப் படைக்க தயாராக உள்ளது. விண்வெளி ஆய்வு மற்றும் சோதனையில் ஈடுபடும் மனிதர்களுக்கு உதவுவதற்காக முதல் மனித உருவ ரோபோவை (Vyomitra Female robot) இந்தியா விண்வெளிக்கு அனுப்ப உள்ளது.
இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ மனித உருவம் கொண்ட ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளது. வ்யோமித்ரா என்ற பெயர் கொண்ட இந்த ரோபோ, இந்தியாவின் விண்வெளி பயணத்திற்கு முன்னோடியாக மனிதனுக்கு பதில் அனுப்பப்படலாம்.
மனித உருவம் கொண்ட வ்யோமித்ராவை முதலில் அனுப்பி பாதுகாப்பு விஷயங்களை பரிசோதித்து விட்டு, பின்னர் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது பாதுகாப்பாக இருக்கும் என்று இஸ்ரோ நினைக்கிறது.
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மனிதனைப் போன்ற பேச்சு மற்றும் செயல்பாடுகளை கொண்ட ரோபோ வ்யோமித்ரா இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யானின் மையத்தில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
வ்யோமித்ரா - பெண் எந்திர ரோபோ:
இஸ்ரோ நிறுவனம் பெண் உருவம் கொண்ட எந்திர மனிதனை , 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவில் நடந்த மனித விண்வெளிப் பயணம் குறித்த கருத்தரங்கில் அறிமுகம் செய்தது.
சமஸ்கிருதத்தில் 'வ்யோமா ' என்றால் விண்வெளி என்றும் 'மித்ரா' என்றால் நண்பர் என்றும் பொருள்படும் , வ்யோமித்ரா என்றால் விண்வெளி நண்பன் என்ற பெயரில் பொருள்படுகிறது.
இந்த ரோபோ விண்வெளி வீரர்களுக்கு ஒரு அறிவார்ந்த நண்பராக செயல்பட்டு அவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவின் விண்வெளி வீரர்கள் குழுவுடன் வ்யோமித்ராவும் பயணிக்கும். விண்வெளி ஓடங்களில் உள்ள இயந்திர பணிகள், தகவல் தொடர்பு பணிகள் ஆகியவற்றையும் இந்த ரோபோ மேற்கொள்ளும். இந்த ரோபோவில் மேம்படுத்தப்பட்ட பல சென்சர்கள் உள்ளது. இதில் குரல் அமைப்புகள் மனிதர்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் தானாக முடிவெடுக்கும் நுண்ணறிவுகளை சேர்த்துள்ளனர்.
ககன்யான் மிஷனில் வயோமித்ராவின் பணி என்ன ?
முதன் முதலாக ஒரு நாடு விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளும் போது, மனிதர்களின் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏதேனும் ஒரு விலங்குகளை விண்வெளிக்கு அனுப்பி, அது உயிருடன் திரும்பி வருகிறதா? என்பதை சோதனை செய்து பார்ப்பார்கள். அந்த விலங்கு உயிருடன் திரும்பி வந்துவிட்டால், அடுத்த கட்டமாக அவர்கள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவார்கள் அல்லது அந்த விலங்கிற்கு ஏதேனும் உடல் நல பாதிப்போ அல்லது உயிருடன் திரும்பாவிட்டால் , தங்களது விண்வெளி பயணத் திட்டத்தில் உள்ள தோல்விகளை கண்டறிந்து அடுத்த கட்டமாக புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
இந்தியா தனது முதல் விண்வெளி பயணத்தின் போது செயற்கை நுண்ணறிவு கொண்ட வ்யோமித்ராவை விண்கலத்தில் அனுப்பவுள்ளது. இதன் மூலம் எதுவும் அறியாத ஒரு விலங்கை விண்வெளிக்கு அனுப்புவதை விட , செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவை அனுப்புவது மிகவும் அறிவார்ந்த செயலாக இருக்கும். பொதுவாக விலங்குகள் எதையும் ஆய்வு செய்யும் திறனும் அங்கு என்ன நடக்கிறது என்பதையும் புரிந்துக் கொள்ள இயலாதவை , ரோபோ விண்வெளியில் நடக்கும் செயல்களை ஆராய்ந்து தகவல்களை அனுப்பும்.
ஹிந்தி மற்றும் இங்கிலீஷ் ஆகிய இரண்டு மொழிகளையும் புரிந்துக் கொள்ளும் தன்மையும் , அதற்கு ஏற்ப பேசும் திறனையும் வ்யோமித்ரா கொண்டுள்ளது. இதன் சோதனை முயற்சிகள் அனைத்தும் முடிந்து விட்டது , விரைவில் விண்கலத்தில் பறக்க தயாராக உள்ளது வ்யோமித்ரா, இதன் மூலம் விண்வெளியில் பறந்த முதல் ரோபாட் என்ற பெருமையை பெற உள்ளது.