குறைந்த செலவில் மின்சார உற்பத்திக்கு உதவும் 'தோரியம்' எனும் தனிமம்!

Thorium
Thorium
Published on

தோரியம் இயற்கையில் கிடைக்கும் ஒரு தனிமம். இந்தியாவில் தோரியம் ஏராளமாக கிடைக்கிறது.  இந்த பதிவில் தோரியம் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றையும் தோரியம் பற்றிய அறிவியல் தகவல்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

தோரியம் ஒரு பலவீனமான கதிரியக்க உலோகமாகும். ஏனெனில் அதன் ஐசோடோப்புகள் மிகவும் நிலையற்றவை. பூமியின் மேற்பகுதிகளில் பெரும்பாலும் பாறைகள் மற்றும் மண்ணில் இந்த தனிமம் காணப்படுகிறது. இதன் அணு எண் 90 ஆகும்.  அணுநிறை எண் 232.04 ஆகும்.  தனிம அட்டவணையில் 'Th'  குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது. இது பொதுவாக வெள்ளி - வெள்ளை நிறத்தில் காணப்படும். வெளிப்படும் சூழலில் இது சாம்பல் அல்லது கருப்பு நிறத்தை அடையும்.

கி.பி.1828 ஆம் ஆண்டில் அமெச்சூர் கனிமவியலாளர் 'மோர்டன் த்ரேன் எஸ்மார்க்'  என்பவர் நார்வே நாட்டில் லுவொயா தீவுகளில் ஒருவகை கருப்பு நிற கனிமப்பொருளை கண்டார். இவர் ஆர்வத்தின் காரணமாக கனிமங்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வந்தவர். தான் கண்டறிந்த புதிய கருப்பு நிற பொருளை 'ஜென்ஸ் எஸ்மார்க்' என்பவருக்கு அனுப்பி வைத்தார். ஜென்ஸ் எஸ்மார்க் ராயல் பிரடெரிக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.  அவரும் அந்த கனிமத்தை ஆராய்ந்து பார்த்தார். அது என்னவென்று ஒரு முடிவிற்கு வர இயலவில்லை. எனவே அதை ஸ்வீடிஷ் நாட்டைச் சேர்ந்த வேதியியல் ஆய்வாளர் 'ஜான்ஸ் ஜேக்கப் பெர்சிலியஸ்' என்பவருக்கு அனுப்பி வைத்தார். அதை ஆராய்ந்த ஜான்ஸ் ஜேக்கப் பெர்சிலியஸ் அதில் ஒரு புதுவகைத் தனிமம் இருக்கிறது  என்பதை உறுதி செய்தார். அதற்கு ஸ்காண்டிநேவிய கடவுளான தோரின் நினைவாக தோரியம் (Thorium) என்று பெயர் சூட்டினார். தனது கண்டுபிடிப்பினை கி.பி.1829 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

உலகின் பல நாடுகளில் அதாவது அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, மடகாஸ்கர், பிரேசில்,  நியூசிலாந்து, தாய்லாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, பார்மோசா, கொரியா, டாஸ்மேனியா ஆகிய நாடுகளில் தோரியம் இயற்கையில் பூமியில் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரியிலும், கேரள கடற்கரைப் பகுதிகளிலும் ஏராளமான அளவில் தோரியம் இருக்கிறது.

யுரேனியத்தைப் போல தோரியம் பூமியில் இயற்கையாகக் கிடைக்கக் கூடிய ஒரு தனிமம். தோரியமானது யுரேனியம் மற்றும் புளுட்டோனியம் ஆகியவற்றைப் போன்றே ஒரு அணுஉலை எரிபொருளாகும். ஆனால் யுரேனியத்தைப் போல தோரியத்தை நேரடியாக அணுஉலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்த முடியாது. வேக ஈனுலைகளைப் பயன்படுத்தி தோரியத்தை அணுஉலைக்கான எரிபொருளாக மாற்றிய பின்னரே பயன்படுத்த முடியும்.

இதையும் படியுங்கள்:
யுரேனியம் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு பற்றி தெரிஞ்சுக்கலாமா?
Thorium

நம் நாட்டில் தோரியம் மிக அதிக அளவில் இயற்கையாகவே கிடைக்கிறது. அணுசக்தி மின்உற்பத்தியில் முதல் நிலை, இரண்டாவது நிலை மற்றும் மூன்றாவது நிலை என்று மூன்று கட்டங்கள் உள்ளன.  முதல் இரண்டு  நிலைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.   தற்போது மூன்றாவது நிலை அதாவது தோரியத்தை எரிபொருளாகக் கொண்டு மின்சாரத்தைத் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டுள்ளது.  நம் நாட்டில் தோரியம் ஏராளமாகக் கிடைப்பதால் இதைக் கொண்டு தொடர்ந்து மின்சாரத்தை நம்மால் உற்பத்தி செய்ய இயலும்.

உலக அளவில் இந்தியாவில்தான் மிக அதிக அளவில் தோரியம் கிடைக்கிறது.  நமது நாட்டில் தோராயமாக 3,60,000 டன் தோரியம் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கனிம வளத்தைக் கொண்டு நாம் பல ஆண்டுகளுக்கு நமக்கு தேவைப்படும் அளவிற்கு மின்சாரத்தை குறைந்த செலவில் உற்பத்தி செய்ய இயலும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com