

நாள்தோறும் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிகின்றன. பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள், பிளாஸ்டிக் பைகள், பால் கவர்கள் என ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளை தினமும் குப்பைகளாக வெளியேற்றுகிறோம். பிளாஸ்டிக் கழிவுகளையும், கட்டடக் கழிவுகளையும், தொழிற்சாலைக் கழிவுகளையும் மறுசுழற்சி செய்து கட்டடங்களுக்கு பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக் கழிவுகளில் (Plastic wastes) இருந்து கட்டுமானங்களுக்கு தேவையான கற்களையும், கதவு ஜன்னல் போன்றவைகளையும் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம்.
எகோக்யூப் (ECO CUBE) என்பது மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் வலுவான கட்டுமான கற்களாகும்.
பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கி பிளாக்குகளாக செய்து தளம் அமைக்கலாம். நடைபாதை மற்றும் பார்க்கிங் கற்களாக பயன்படுத்தலாம். சீலிங் பேனல்கள் மற்றும் சுவர் பேனல்களாகவும் உருவாக்கிக் கொள்ளலாம். பழைய கட்டுமானங்களை இடிக்கும் பொழுது கிடைக்கும் இரும்பு, மரம், பிளாஸ்டிக் போன்றவற்றை மறுசுழற்சி செய்து உபயோகிக்கலாம்.
கட்டடக் கழிவுகளை அரைத்து பேஸ்மென்ட் பில்லிங் போன்றவற்றிற்கும், சாலைப் பணிகளுக்கும் பயன்படுத்தலாம். அஸ்திவாரங்களுக்கு கருங்கலுக்கு பதிலாக போர்டு எர்த் என, இன்னும் தற்சார்பு கட்டுமான முறையில் அஸ்திவாரங்கள் இடலாம். இதன் மூலம் கட்டடங்களின் செலவும் குறையும். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். கட்டடக் கழிவுகளை குளம் குட்டைகளில் கொட்டுவதால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் பெருமளவில் பாதிக்கப்படும்.
WES-Tec குளோபல் என்பது டெக்னாலஜி மற்றும் கட்டுமானம் சார்ந்த நிறுவனமாகும். இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள எகோக்யூப் (ECO CUBE) என்னும் தொழில்நுட்பம் கட்டுமானத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்ய வேண்டுமானால் தரம் பிரித்து, கழுவி சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் WES-Tec நிறுவனமோ மறுசுழற்சி முறையில் பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரிப்பதோ, சுத்தம் செய்வதோ இல்லை. எல்லா வகையான பிளாஸ்டிக் கழிவுகளையும் மறுசுழற்சி செய்து உறுதியான கட்டுமான தரத்திலான கற்களாக மாற்றுகிறது.
இவை சாதாரண கான்கிரீட்டை விட அதிக அழுத்தத்தை தாங்கும் திறன் கொண்டவை. கான்கிரீட்டை விட எடையும் குறைவானது. இதனால் மலைப்பகுதிகளுக்கும், கடற்கரை ஓரங்களுக்கும் இதனைக் கொண்டு செல்வது எளிதாகிறது. சுனாமி, கடல் அரிப்பு மற்றும் நிலநடுக்கம் போன்ற அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் சூழல்களை எதிர்கொள்ளும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
25 கிலோ எடையுள்ள எகோக்யூப் கல்லை தயாரிப்பது மூலம் சுமார் 75 கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்க முடிகிறது. இது பிளாஸ்டிக் எரிக்கப்படுவதையும், கடலில் கலப்பதையும், நீர்நிலைகளை பாதிப்பதையும் தவிர்க்கிறது. இந்த எகோக்யூப், எடிசன் விருது மற்றும் CES 2026 கண்டுபிடிப்பு விருதையும் பெற்றுள்ளது.