

நமக்கு எப்போதாவது விபத்து ஏற்பட்டு ரத்தம் தேவைப்பட்டால் மற்றொரு மனிதர் தான் அதைக் கொடுக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு சாதாரண விஷயம். ஆனால் என்றாவது ஒரு நாள், விலங்குகளின் ரத்தத்தை மனிதர்களுக்குச் செலுத்தினால் என்ன ஆகும் யோசித்ததுண்டா?
அதிலும் குறிப்பாக மனிதர்களின் மூதாதையர்களாகக் கருதப்படும் குரங்குகளின் ரத்தத்தை மனித உடலுக்குப் பயன்படுத்த முடியுமா என்பது பல காலமாகவே இருக்கும் ஒரு மிகப்பெரிய விவாதம்.
ரத்த வகைகள்!
பொதுவாக மனிதர்களுக்கு ஏ, பி, ஏபி மற்றும் ஓ என நான்கு முக்கிய ரத்த வகைகள் உள்ளன. இவற்றில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பிரிவுகளும் உண்டு. இது நமது ரத்த சிவப்பணுக்களில் இருக்கும் ஆன்டிஜென்களைப் பொறுத்துத் தான் மாறுபடும். நமக்கு இருப்பதைப் போலவே விலங்குகளுக்கும் இந்த தனித்துவமான ரத்த வகைகள் உள்ளன.
மனிதர்களுக்கு மிக நெருங்கிய உறவினர்களான சிம்பன்சி மற்றும் போனபோஸ் போன்ற குரங்குகளுக்குப் பெரும்பாலும் ஏ வகை ரத்தம் தான் இருக்கிறது. உராங்குட்டான் குரங்குகளுக்கு மனிதர்களைப் போலவே நான்கு வகைகளும் அப்படியே இருக்கின்றன. ஆனால் கொரில்லாக்களின் ரத்த அமைப்பு மட்டும் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு முற்றிலும் வித்தியாசமாக அமைந்துள்ளது.
விலங்கு ரத்தத்தை மனிதனுக்குச் செலுத்தலாமா?
விலங்குகளுக்கும் நமக்கும் ஒரே மாதிரியான ரத்த வகைகள் இருப்பதால், அதை அப்படியே நேரடியாக மனிதர்களுக்கு மாற்றிவிடலாம் என்று நினைத்தால் அது தவறான புரிதல் ஆகும். ஓ வகை ரத்தம் கொண்ட ஒரு சிம்பன்சி குரங்கின் ரத்தத்தை மனிதர்களுக்குச் செலுத்தினால் தியரிப்படி அது சாத்தியம் தான்.
ஆனால் நடைமுறையில் அப்படிச் செய்யும்போது நமது நோய் எதிர்ப்பு சக்தி அதை உடனடியாக ஒரு பெரிய அச்சுறுத்தலாகப் பார்த்துத் தாக்கத் தொடங்கிவிடும். இது உயிருக்கே உலை வைக்கும் ஒரு பெரிய ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். எனவே, குரங்குகள் நமக்கு நெருக்கமாக இருந்தாலும் அவற்றின் ரத்தத்தை நமக்குச் செலுத்துவது ஒரு மோசமான ஐடியா.
மருத்துவ உலகில் பன்றிகளின் பங்கு!
குரங்குகளின் ரத்தம் நமக்கு செட் ஆகாது என்றாலும் விஞ்ஞானிகள் இதற்காக ஒரு பெரிய மாற்று வழியைக் கண்டுபிடித்துள்ளார்கள். மனிதர்களுக்கு ரத்தம் கொடுக்கப் பன்றிகள் தான் இப்போது மிகச் சிறந்த தேர்வாகப் பார்க்கப்படுகின்றன. சாதாரண பன்றிகள் கிடையாது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் ரத்த அணுக்களை மனிதர்களுக்குப் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதற்கிடையில் மற்ற விலங்குகளின் ரத்த வகைகளும் நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்துகின்றன. உலகத்தில் இன்னும் பல விலங்குகளின் ரத்த வகைகள் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவே இல்லை. மாடுகளுக்கு பதினோரு ரத்த வகைகளும், நாய்கள் மற்றும் கோழிகளுக்கு சுமார் 13 ரத்த வகைகளும் இருப்பதாகத் தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன.
சிம்பன்சி குரங்குகள் மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் மிக நெருங்கிய சொந்தங்களாக இருந்தாலும் அவற்றின் ரத்தத்தை நம்மால் நேரடியாகப் பயன்படுத்தவே முடியாது என்பது தான் இப்போதைய நிதர்சனமான உண்மை. எதிர்காலத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகள் மூலம் மனிதர்களுக்கான ரத்தத் தட்டுப்பாடு முழுமையாகத் தீர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
மனித உயிர்களைக் காப்பாற்ற பன்றிகள் உதவப்போகிறது என்பது கேட்பதற்கே விசித்திரமாக இருந்தாலும் அதுதான் அறிவியலின் மாபெரும் வளர்ச்சி.