

பிரபஞ்சத்தின் மிகவும் விசித்திரமான மற்றும் பயமுறுத்தும் ஒரு விஷயம் கருந்துளை (Black hole). ஒளி கூட தப்பிக்க முடியாத அளவுக்கு ஈர்ப்பு விசை கொண்ட இந்த இடத்திற்குள் ஒரு மனிதன் சென்றால் என்ன நடக்கும்?
நீங்கள் ஒரு கருந்துளையை நோக்கி பயணிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் எல்லையைத் தொடும் வரை எல்லாம் சாதாரணமாகவே இருக்கும். இந்த எல்லைக்கு நிகழ்வு எல்லை என்று பெயர். இதைத் தாண்டிவிட்டால் அப்புறம் திரும்பி வர வழியே இல்லை. ஒளியின் வேகத்தில் சென்றால் கூட உங்களால் வெளியேற முடியாது.
கருந்துளையின் (Black hole) ஈர்ப்பு விசை மிக மிக அதிகம். நீங்கள் காலால் முதலில் கருந்துளைக்குள் நுழைந்தால், உங்கள் தலைப்பகுதியை விட கால் பகுதியில் ஈர்ப்பு விசை பல கோடி மடங்கு அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் உடல் ஒரு நூடுல்ஸ் அல்லது ஸ்பாகெட்டி போல நீளமாக இழுக்கப்படும். இதைத்தான் விஞ்ஞானிகள் 'ஸ்பாகெட்டிஃபிகேஷன்' என்று அழைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் உங்கள் அணுக்கள் தனித்தனியாகப் பிரிந்து சிதறிவிடும்.
ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவப்படி, அதிக ஈர்ப்பு விசை உள்ள இடத்தில் காலம் மெதுவாக நகரும். நீங்கள் கருந்துளைக்குள் விழுவதை வெளியே இருந்து ஒருவர் பார்த்தால், நீங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து, ஒரு கட்டத்தில் அப்படியே சிலையாக நின்றுவிட்டது போல அவருக்குத் தோன்றுமாம்.
ஆனால் உங்களுக்கு காலம் சாதாரணமாகவே நகரும். நீங்கள் உள்ளே விழும்போது, பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த எதிர்காலமும் உங்கள் கண் முன்னே மிக வேகமாக ஓடி முடிந்துவிடும். அதாவது, நீங்கள் ஒரு சில நிமிடங்களில் பிரபஞ்சத்தின் கோடிக்கணக்கான ஆண்டுகளைப் பார்த்துவிட முடியும்.
கருந்துளையின் மையப்பகுதியை 'சிங்குலாரிட்டி' என்பார்கள். இங்கே இயற்பியல் விதிகள் அனைத்தும் செயலிழந்துவிடும். இங்கே அடர்த்தி முடிவிலியாக இருக்கும். அங்கே சென்ற பிறகு உங்களுக்கு என்ன ஆகும் என்பது இன்றுவரை அறிவியலால் விடை காண முடியாத ஒரு மர்மம்.
சில விஞ்ஞானிகள் இது மற்றொரு பிரபஞ்சத்திற்கான நுழைவாயிலாக இருக்கலாம் என்றும், நீங்கள் வேறொரு பரிமாணத்திற்குச் செல்லக்கூடும் என்றும் கருதுகிறார்கள்.
கருந்துளைக்குள் (Black hole) விழுவது என்பது தற்கொலைக்குச் சமமானது என்றாலும், அது பிரபஞ்சத்தின் ரகசியங்களைத் தெரிந்துகொள்ளும் ஒரு மாபெரும் வழியாகும். தற்போதைய தொழில்நுட்பத்தில் நாம் அங்கு செல்வது சாத்தியமில்லை என்றாலும், கருந்துளைகள் பற்றிய ஆய்வுகள், பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் முடிவு பற்றிய பல உண்மைகளை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றன.