நமது சூரியக் குடும்பத்தில் ஒரே கிரகமாக பூமி மட்டும் தனியாக இருந்தால் என்ன ஆகும் தெரியுமா?
செவ்வாய், வெள்ளி மற்றும் வியாழன் போன்ற கிரகங்கள் இல்லாமல் இருப்பது, சந்தேகத்திற்கு இடமின்றி சூரியக் குடும்பத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் பூமி மட்டும் தனியான கிரகமாக இருந்தால் ஏற்படும் சாத்தியமான விளைவுகள் பற்றி பார்க்கலாம்.
இதில் நாம் முதலாவதாக கவனிக்க வேண்டியது இரவு நேரத்தில் மற்ற கிரகங்கள் மற்றும் அவற்றின் நிலைகளை நாம் ரசிக்க முடியாது. நட்சத்திரங்கள் மட்டுமே பூமிக்கு துணையாக இருக்கும். சந்திரனைத் தவிர பரவலான இருளையே நாம் காண நேரிடும். மற்ற கிரகங்கள் இல்லாததால் வால் நட்சத்திரங்கள் அல்லது சிறு கோள்களின் குப்பைகளால் ஏற்படும் விண்கற்கள் வானில் நகர்ந்து செல்லும் நிகழ்வுகளை நாம் காண முடியாது.
மற்றொரு குறிப்பிடத்தக்க விளைவு என்னவென்றால், வியாழன் போன்ற கோள்களின் ஈர்ப்பு விசையானது, சிறுகோள்களின் தாக்கங்களிலிருந்து பூமியை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாதுகாப்பு இல்லாமல் போனால் பூமியில் விண்வெளி குப்பைகள் சிறு நூல்கள் அதிகமாக மோதி பேரழிவுக்கு வழிவகுக்கும். மேலும் அடிக்கடி இத்தகைய மோதல்கள் அதிகமாக நிகழும்.
மற்ற கிரகங்கள் இல்லாதது நமது சூரியக் குடும்பத்தின் சமநிலையை சீர்குலைக்கும். சூரியக் குடும்பத்தின் நிலைத்தன்மையை பராமரிப்பதில் கிரகங்களின் இயக்கம் மற்றும் ஈர்ப்பு முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய சமநிலை இல்லாமல் போனால் பூமியின் சுற்றுப்பாதை மற்றும் சுழற்சியில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்படலாம். இதன் விளைவாக கணிக்க முடியாத பருவங்கள், காலநிலை முறைகள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் போன்றவை ஏற்படும்.
மற்ற கிரகங்கள் மற்றும் அவற்றின் நிலவுகள் பற்றிய ஆய்வு, உயிர்களின் தோற்றம் மற்றும் வேற்றுகிரக வாழ்க்கை சார்ந்த அறிவினை நமக்கு வழங்கியுள்ளது. இதுவே எந்த கிரகங்களும் இல்லை என்றால், பிரபஞ்சத்தைப் பற்றிய நமது புரிதல் ஒன்றுமே இல்லாமல் போய்விடும். ஒருவேளை பூமி அழிய நேர்ந்தாலும், வேற்று கிரகங்களுக்குச் சென்று நாம் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறையும். இதனால், வேற்று கிரகங்களுக்கு இடையேயான பயணம் போன்றவற்றுக்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் போகும்.
சூரிய குடும்பத்தில் பூமி மட்டுமே ஒரே ஒரு கிரகமாக இருந்தால் நமது வாழ்க்கையும் பிரபஞ்சத்தை பற்றிய புரிதலும் முற்றிலுமாக மாறுபட்டதாக இருக்கும். குறிப்பாக காலநிலை மாற்றங்கள் மற்றும் சிறுகோள்களின் தாக்குதல்களால், பூமியில் உயிரினங்கள் வாழ்வது கடினமானதாக மாறிவிடும். எனவே நமது பூமி மட்டும் தனியாக இருந்தால் நன்றாக இருக்குமே என நினைக்காதீர்கள். நம்மைச் சுற்றியுள்ள மற்ற கிரகங்களும் நமது உயிர் வாழ்வுக்கு பெரும் பங்காற்றுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.