ஸ்பானிஷ் காய்ச்சல், எபோலா மற்றும் கோவிட்-19 போன்ற பல அழிவுகரமான தொற்று நோய்களின் தாக்கத்தை இவ்வுலகம் கண்டுள்ளது. இந்த பேரழிவு சம்பவங்கள் அனைத்துமே பூமியில் தோன்றியதாகும். ஆனால் அடுத்த நோய்த்தொற்று விண்வெளியில் இருந்து வந்தால், என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. அப்படியே கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். Evolution திரைப்படத்தில் வருவது போல ஒரு பெரிய விண்கல் பூமியில் விழுந்து அதிலிருந்து புதுவிதமான நோய்த்தொற்று உலகில் பரவினால் என்ன ஆகும்? இந்தப் பதிவில் அவ்வாறு நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயலாம்.
விண்வெளி உயிரினங்களின் தேடல்: விண்வெளி ஆய்வு என்பது எப்போதுமே மனிதர்களை அதிகமாகக் கவரும் ஒன்றாகும். குறிப்பாக வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என விஞ்ஞானிகள் தேடி வருவது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. இதற்காக நாசாவின் செவ்வாய் கிரக ரோவர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் எடுத்து அனுப்பிய புகைப்படங்கள் வேற்று உலக வாழ்க்கையைப் பற்றி நாம் புரிந்துகொள்ள அதிக தகவல்களை வழங்கியுள்ளன. இன்றுவரை பூமிக்கு அப்பால் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்களை நாம் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அதற்கான சாத்தியக்கூறுகள் முற்றிலும் புதிரானதாகவே உள்ளன.
அபாயங்கள்: ஒருவேளை பிரபஞ்சத்தில் வேறு இடங்களில் உயிர்கள் இருந்தால் அது பூமியில் உள்ள உயிரினங்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்க வாய்ப்புள்ளது. அவற்றை ஏலியன் நுண்ணுயிரிகள் என்பார்கள். இவை நாம் அறியப்படாத அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய தனித்துவமான உயிர்வேதியியல் மற்றும் மரபணு அமைப்புகளைக் கொண்டிருக்கலாம். அத்தகைய உயிரினங்கள் விண்கற்கள் மூலமாக பூமியை அடைந்தால், பெரும் தொற்றுநோய் பேரழிவை உலகில் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
விளைவுகள்: இப்படி பரவும் தொற்று நோய்கள் மனித குலத்திற்கு முற்றிலும் புதுமையானது என்பதால் நாம் எதிர்பார்க்காத பல அழிவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக நமது நோய் எதிர்ப்பு அமைப்பு அத்தகைய வேற்று கிரக கிருமிகளை கையாள்வதற்கு போதுமானதாக இருக்காது. ஏனெனில் அவை நமது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு முற்றிலும் புதியது என்பதால், அவை வேகமாக பரவி பல இறப்பு சம்பவங்களை ஏற்படுத்தலாம்.
தடுப்பு நடவடிக்கைகள்: விண்வெளியில் இருந்து பரவும் தொற்றுநோய் அபாயங்களைக் குறைக்க விஞ்ஞானிகளும், விண்வெளி நிறுவனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விண்வெளியில் இருந்து திரும்பி வரும் விண்கலம் மற்றும் மாதிரிகளை முற்றிலுமாக தனிமைப்படுத்தி அவற்றில் எவ்விதமான வேற்றுலக கிருமிகளும் இல்லாததை உறுதி செய்ய கடுமையான நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதன் மூலமாக வேற்று கிரக நுண்ணுயிரிகளால் பூமிக்கு ஏற்படும் ஆபத்து குறைகிறது.
என்னதான் நாம் தற்போது தொழில்நுட்ப ரீதியாக பல முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், திடீரென ஏற்படும் முன்பின் தெரியாத கிருமியின் மூலமாக பரவும் தொற்றுக்களை உடனடியாக சரி செய்வதென்பது முற்றிலும் கடினம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கொரோனா. லட்சக்கணக்கான உயிர்கள் பலியான பின்னரே அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவேளை அதைவிட வீரியமான கிருமி வேற்று கிரகத்திலிருந்து பூமிக்குள் நுழைந்தால், அதன் விளைவை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
அப்படி எதுவும் நடக்கக்கூடாது என கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நேரம் கிடைத்தால் Evolution என்கிற ஆங்கிலத் திரைப்படம் பாருங்கள். இந்த பதிவின் ஆழத்தை அந்தத் திரைப்படம் நன்றாக உணர்த்தும்.