5G அல்லது ஐந்தாம் தலைமுறை வயர்லெஸ் என்பது சமீபத்திய மொபைல் நெட்வொர்க் தொழில்நுட்பமாகும். இது அதிக இன்டர்நெட் வேகம், குறைந்த தாமதம் மற்றும் சிறப்பான இணைப்பு போன்றவற்றிற்கு உறுதியளிக்கிறது. 1G, 2G, 3G மற்றும் 4G போன்ற முந்தைய தலைமுறை மொபைல் நெட்வொர்க்குகளின் அடுத்த கட்டம். இது ஹை ரெசல்யூஷன் வீடியோ ஸ்ட்ரீமிங் முதல் அறுவை சிகிச்சை மற்றும் ஆட்டோமேட்டிக் வாகனங்கள் வரை பல விஷயங்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
5G தொழில்நுட்பத்தின் எழுச்சி:
தொலைத்தொடர்பு உலகில் 5G முன்னேற்றம் என்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. முந்தைய தலைமுறை மொபைல் நெட்வொர்க்குகளை விட இது பல நன்மைகளை வழங்குகிறது.
அதிக இணைய வேகம்: 5G நெட்வொர்க்குகள் 4G நெட்வொர்க்களை விட 100 மடங்கு அதிக வேகத்துடன் பதிவிறக்கம் திறன் கொண்டவை. இதன் மூலமாக பயனர்கள் உயர்தர வீடியோ ஸ்டீமிங் செய்யவும், பெரிய அளவிலான கோப்புகளை பதிவிறக்கவும் மற்றும் எந்தத் தடையும் இல்லாமல் ஆன்லைன் கேம்களை விளையாடவும் உதவுகிறது.
குறைந்த தாமதம்: குறைந்த தாமதம் என்பதை Latency என்பார்கள். அதாவது ஒரு சாதனத்தில் இருந்து சர்வருக்கு பயணிக்க எடுக்கும் நேரம். மொபைல் நெட்வொர்க்குகளின் செயல் திறனில் இது முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. 5G நெட்வொர்க்குகள் 4G நெட்வொர்க்குகளை விட கணிசமாகக் குறைந்த தாமதத்தைக் கொண்டுள்ளன. இதன் மூலமாக, தொலைதூரத்தில் இருந்து கொண்டே செய்யப்படும் அறுவை சிகிச்சை மற்றும் தானியங்கி வாகனங்கள் போன்றவற்றுடன் தேவைப்படும் நிகழ்நேரத் தொடர்பு சிறப்பாக அமைகிறது.
மேம்படுத்தப்பட்ட இணைப்பு: 5G நெட்வொர்க்குகள் அதிக எண்ணிக்கையிலான சாதனங்களை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது IoT பயன்பாடுகளுக்கு ஏற்றதாக அமைகிறது. பலர் ஒரே நேரத்தில் தங்கள் சாதனங்களை பயன்படுத்தும் கச்சேரி, பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் இந்தத் தொழில்நுட்பத்தால் ஆதரிக்க முடியும்.
புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சி: 5G தொழில்நுட்பத்தின் எழுச்சியானது பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி புதுமைகளை ஊக்குவிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதன் மூலமாக புதிய தொழில்கள், புதிய வேலைகள் உருவாகி ஒட்டுமொத்த உலக மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படலாம்.
தொலைத்தொடர்பு உலகில் 5G தொழில்நுட்பம் ஒரு கேம் சேஞ்சர். நாம் தற்போது கஷ்டப்பட்டு பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல பயன்பாடுகளை மாற்றியமைக்கும் அற்புத ஆற்றல் இதற்கு உள்ளது. இதன் மூலமாக ஒட்டுமொத்த உலகமும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரப் போகிறது எனலாம். எனவே இந்தத் தொழில்நுட்பத்தை நாம் அனைவருமே வரவேற்க வேண்டும்.