உலகின் மிகப்பெரிய சூரிய கடிகாரம் ஜெய்பூரில் உள்ள ஜந்தர் மந்தர் என்ற திறந்த வெளி கோளரங்கில் உள்ளது. இந்தப் பிரம்மாண்டமான சூரிய கடிகாரம் சாம்ராட் யந்திரா என்று அழைக்கப்படுகிறது. இது 27 மீட்டர் அதாவது கிட்டத்தட்ட 90 அடி உயரம் உடையது. இந்த சூரிய கடிகாரத்தின் மூலம் நேரத்தை இரண்டு வினாடி அளவுக்கு துல்லியமாக நம்மால் அறிய முடியும்.
இத்தகைய சூரிய கடிகாரம் கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது என்று நினைக்கும் போது நமக்கு வியப்பாக இருக்கிறது. ஜெய்ப்பூரை ஆண்ட சவாய் ஜெய்சிங் II, வான்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் உடையவர். அவர் இத்தகைய ஜந்தர் மந்தர் திறந்தவெளி கோளரங்குகளை இந்தியாவில் ஐந்து இடங்களில் கட்டினார். இவற்றில் ஜெய்ப்பூரில் உள்ளது தான் மிகவும் பெரியது.
ஜெய் சிங் கட்டிய ஜந்தர் மந்தர் திறந்தவெளி கோளரங்குகளும், அவற்றினை உருவாக்கிய காலங்களும் பின்வருமாறு
தில்லி ஜந்தர் மந்தர் (1724)
மதுரா ஜந்தர் மந்தர் (1725)
உஜ்ஜைன் ஜந்தர் மந்தர் (1730)
ஜெய்ப்பூர் ஜந்தர் மந்தர் (1734)
வாரணாசி ஜந்தர் மந்தர் (1737)
ஜந்தர் என்பது உபகரணங்கள் என்ற பொருள் தரும் சமஸ்கிருத வார்த்தை. யந்த்ரா என்ற வார்த்தையிலிருந்து, ஜந்த்ரா என மருவி, பின்பு ஜந்தர் என மாறிவிட்டது.
மந்தர் என்பது கணக்கிடுவது, ஆலோசனை செய்வது என்ற பொருள் தரும் சமஸ்கிருத வார்த்தை மந்த்ரானா என்ற வார்த்தையில் இருந்து உருவானது.
எனவே ஜந்தர் மந்தர் என்பது கணக்கிடும் உபகரணங்கள் என்ற பொருள் தரும்.
ஒவ்வொரு ஜந்தர் மந்தரிலும் பல்வேறு வகையான உபகரணங்கள் உள்ளன. அவற்றின் மூலம் தற்போதைய நேரத்தை கணக்கிடுவது, எப்பொழுது சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நடக்க உள்ளது என்பதை தெரிந்து கொள்வது, வான்வெளியில் உள்ள வான் பொருட்கள் எந்த உயரத்தில் உள்ளன என்று கணக்கிடுவது என்று பல்வேறு வகையான உபகரணங்கள் உள்ளன.
எனவே நீங்கள் மேலே குறிப்பிட்ட ஊர்களுக்குச் சென்றால் ஜந்தர் மந்தரை காணாமல் இருந்து விடாதீர்கள். நமது குழந்தைகளுக்கும் வான்வெளி ஆராய்ச்சியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜந்தர் மந்தர் உதவும்.